Tuesday 9 April 2013

ஆன்மீகஎக்ஸ்பிரஸ் ஆசிரியருடன் ஒரு நேர்காணல்;பாகம் 1



ஆன்மீகஎக்ஸ்பிரஸ் ஆசிரியருடன் ஒரு நேர்காணல்;பாகம் 1

கேள்வி:சமீபகாலமாக நீங்கள் அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து,அரசியல் சார்பான பதிவுகளை வெளியிட்டுவருகிறீர்கள்.நீங்களும் அரசியலுக்கு வரப் போகிறீர்களா?

பதில்:(பலத்த சிரிப்பு)
(சிரித்தப் பின்னர்) நீங்களும் சராசரி வாசகர் என்பதை உங்களின் இந்த கேள்வி நிரூபித்துவிட்டது.

கேள்வி:சராசரி வாசகரா?

பதில்:உங்களுக்கு கொஞ்சம் புரியும்படியாக சொல்கிறேனே.அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு சிறிதும் கிடையாது.அரசியலானது ஏன் எல்லோரையும் ஈர்க்கிறது என்றால்,அதன் மூலமாக அரசு அதிகாரம் நம்மை வந்துசேர்கிறது.ஒரு தெருவின் கவுன்சிலராக இருந்தாலும்,அந்த கவுன்சிலர் அந்த நகரத்தின் பிரதிநிதியாகிவிடுகிறார்.ஆனால்,அந்த கவுன்சிலர் எந்த ஒரு கட்சியின் மூலமாக தேர்தலில் நின்று ஜெயித்தாரே,அப்போதிலிருந்து அவர் தனது தெருவில் இருக்கும் எதிர்க்கட்சி ஆட்களை இரண்டாம் பட்சமாக நடத்தியே ஆகவேண்டும்.இல்லாவிட்டால்,அவரின் கட்சியைச் சேர்ந்தவர்களே (குழு அரசியல்=உட்கட்சி ஜனநாயகம்)அவரை மேலிடத்தில் போட்டுக் கொடுத்துவிடுவார்கள்.இதுவே மாநில அளவில் அரசியல் பதவியில் இருக்கும்போது இவ்வாறு இருக்க வேண்டியதில்லை;அரசியல் அதிகாரத்தின் மூலமாக நாம் செய்யும் சமுதாய சேவை அத்தனை மக்களையும் போய்ச் சேராது என்பது எனது கொள்கை.

எனது சமீப காலப் பதிவுகளை வாசித்தவர்கள் சொல்லும் அதே குற்றச்சாட்டைத்தான் நீங்களும் சொல்கிறீர்கள்.அவையெல்லாம் அரசியல் பதிவுகள் அல்ல;அரசியலின் மிதமிஞ்சிய அதிகாரம் எப்படியெல்லாம் சாதாரண மனிதனின் தினசரி வாழ்க்கையை பாதிக்கிறது? சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசை போய்,மிகக் குறுகிய காலத்தில் பிரம்ம்மாண்டமாக சம்பாதிக்க வேண்டும் என்ற வெறி பன்னாட்டு கார்பரேட் நிறுவனங்களை எப்படியெல்லாம் செயல்பட வைக்கிறது?என்பதை விளக்கவே அப்படிப்பட்ட பதிவுகளை வெளியிடுகிறேன்.

கேள்வி:புரியவில்லை.கொஞ்சம் எளிமையாக விளக்கினால் நல்லது.

பதில்:உங்களுக்கு சூதாட்டம் என்றால் என்னவென்று தெரிந்து இருக்கும்.பலவிதமான சூதாட்டங்கள் இருக்கின்றன.இந்த சூதாட்டத்துக்கு சட்டரீதியான அங்கீகாரம் கொடுத்துள்ளன மேற்கு நாடுகள்.
நாம் தான் அமெரிக்காவிலிருந்தும்,மேற்கு நாடுகளிலிருந்து எந்த கழிசடை வந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்வோமே?இந்த சூதாட்டத்தையும் ஏற்றுக்கொண்டதால்தான் இப்போது சராசரி குடும்பஸ்தர்கள் தினமும் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
முன்பேர வர்த்தகம் என்ற ஒன்று அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்திருக்கிறது.
ஒரு கிலோ அரிசி ரூ.30/- ஆக 2009 இல் இருந்தது என வைத்துக் கொள்வோம்.
அதே ஒரு கிலோ அரிசி ரூ.35/-ஆக 2010 இல் உயர்ந்தது.நிறைய அரிசி விளைச்சலால் 2010 இன் மத்தியில் இந்த விலை ரூ.32/-ஆக குறையவும் செய்தது.(என்றும் வைத்துக் கொள்வோம்)
அதே ஒரு கிலோ அரிசி ரூ.37/-ஆக 2011 இல் உயர்ந்திருக்கிறது.
தற்போது அந்த ஒரு கிலோ அரிசி ரூ.40/-ஆக உயர்ந்திருக்கிறது.
இந்த சூழ்நிலைதான் நமது இந்தியாவின் அரிசிச் சந்தையின் போக்கு.
இந்த சூழ்நிலையில் 2009 ஆம் ஆண்டில் முன்பேர வர்த்தகத்தில் அரிசியை சேர்க்கலாம் என்று இந்தியாவின் மத்திய அரசு முடிவு செய்து,பட்ஜெட்டிலோ,அரசு ஆணையாகவே வெளியிடுகிறது என்று வைத்துக்கொண்டால்,2011 இல் ஒரு கிலோ அரிசி ரூ.70/-ஆகவும்,2013 இல் ஒரு கிலோ அரிசி ரூ.150/-ஆகவும் உயர்ந்துவிடும்.இது எப்படி சாத்தியம்?
இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு எவ்வளவு குவிண்டால் டன்கள் அரிசி விளையவேண்டும்? எவ்வளவு விற்பனையாக வேண்டும்? என்பதை இந்த முன்பேர வர்த்தகர்கள் தீர்மானிக்கிறார்கள்.அவர்களுக்குஇந்தியாவில் கோடிக்கணக்கான மக்களின் தினசரி உணவு அரிசிஎன்பது தெரிந்திருந்தாலும்,இதில் எப்படியெல்லாம் குறைந்த வருடங்களில் பல 100 சதவீதங்களுக்கு பணம் சம்பாதிக்கலாம் என்பதே லட்சியமாக இருக்கும்.
எனவே,எவ்வளவு அரிசி தேவையோ அதில் பாதி அல்லது முக்கால் பங்கு மட்டுமே அரிசியை உற்பத்தி செய்யும்படி,அரிசி உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு தெரிவித்து,அதற்குரிய பணத்தையும் கொடுத்துவிடுவார்கள்.(அல்லது தேவைக்கும் அதிகமாக அரிசியை உற்பத்தி செய்து பதுக்கி வைத்துக் கொள்வதும் உண்டு)விவசாயிகளும் அதற்கு ஏற்றாற்போல அரிசியை உற்பத்தி செய்து தனது லாபம் போக மீதியை பணம் கொடுத்த முதலீட்டாளர்களிடம்(முன் பேர வர்த்தகர்களிடம்) அரிசியை உற்பத்தி செய்து ஒப்படைத்துவிடுவார்கள்.விலை கிடுகிடுவென அதிகரிக்குமா,அதிகரிக்காதா?
இந்த சித்துவேலையை ஏற்கனவே மேற்குநாடுகள் ஆப்ரிக்காவில் செய்து காட்டி செயற்கையான பட்டினிச்சாவுகளை உண்டாக்கிவிட்டன.
இந்தியாவில் அரிசியைத் தவிர,தங்கம்,வெள்ளி முதலானவற்றில் இந்த முன்பேர வர்த்தகம் துவங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டதால்,சில நூறு பேர்கள் பல ஆயிரம் கோடிகளை சம்பாதித்துக் கொண்டிருக்க,120 கோடி பேர்களும் தங்க நகை வாங்க முடியாமல் அவதிப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.இதன் விளைவாக தமிழ்நாட்டில் திருமண வயதில் இருக்கும் பல லட்சம் கன்னிப்பெண்களின் திருமணம் தள்ளிப்போய்க்  கொண்டே இருக்கிறது.
இதைத்தான் வேறுவிதமாக நமது செய்தித் தாள்கள் செய்தியாக்கி வெளியிடுகின்றன.ஆமாம்!

இந்தியாவில் 100 பேருக்கு 85 பேர்களிடம் செல்போன்கள் இருக்கின்றன;ஆனால்,100 பேருக்கு 13 பேர்களுக்குத் தான் கழிவறை இருக்கிறது.

இந்த செய்தி உணர்த்துவது என்ன?

மேலோட்டமாகப்பார்த்தால், தகவல் தொடர்பு மித மிஞ்சிய வளர்ச்சியாக நாம் பெருமையடித்துக் கொள்ளலாம்.(நாம் பேசுவதற்கு பணம் கொடுக்கிறோம்.ஆனால்,செல்போனில் சுருக்கமாகப் பேச கற்றுக்கொண்டோமா?)நிஜத்தில், பன்னாட்டு நிறுவனங்களின் மார்க்கெட்டிங் டெக்னிக்குகளே சில வருடங்களில் இவ்வளவு பெரிய நாட்டில் அனைவரிடமிருந்தும் தலா ரூ.2000/- கறந்திருக்கிறது.(ஒரு செல்போனின் சராசரி விலை!)ரூ.2000x120 கோடி இந்தியர்கள் எனில்,எத்தனை லட்சம் கோடிகளை செல்போன் நிறுவனங்கள் அள்ளியிருக்கும்.

மறுபுறம் சுதந்திரம் வாங்கிய 65 ஆண்டுகளில் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற மத்திய அரசுகளால் முடியவில்லை;

சுருக்கமாக,நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ,நாம் பொருளாதாரத்தின் நெளிவு சுளிவுகள் தெரியாமலேயே நாம் இன்னொரு காலனியாதிக்கத்திற்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறோம்.இந்தியாவை ஆள்பவர்களுக்கு இந்தியாவின் மனசாட்சிப்படி, இந்தியாவுக்கென பொருளாதாரக் கொள்கைகளை வடிவமைக்கத் தெரியவில்லை;மேல்நாடுகளின் இஷ்டத்துக்கு இந்தியாவின் பொருளாதாரச் சந்தையை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

மாதம் ரூ.30,000/-சம்பாதிக்கும் குடும்பங்களே இன்று தினசரி வாழ்க்கையை நடத்திட முடியாமல் திணறிக்கொண்டிருக்கும்போது, மாதம் ரூ.10.000/-சம்பாதிக்கும் பல கோடி குடும்பங்கள் தினசரி வாழ்க்கையை வாழ முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றன.(இந்த தவிப்பினால்,இன்று விபச்சாரம் இந்தியாவின்,தமிழ்நாட்டின் ஒரு சமூக அங்கமாகிவிட்டது என்பது அதிர்ச்சி தரக்கூடிய உண்மை ஆகும்)

அந்த தவிப்பு பற்றிய விழிப்புணர்வை சுதேசி விழிப்புணர்வு இயக்கம் போன்ற ஒரு சில தன்னார்வ அமைப்புகள் உருவாக்கிக்  கொண்டிருக்கின்றன.இந்த சுதேசி விழிப்புணர்வு இயக்கம் நடத்தும் மாத இதழே சுதேசிச் செய்தி ஆகும்.இந்த மாத இதழில் வெளிவரும் பொருளாதாரக் கட்டுரைகள் நமது நாட்டின் பொருளாதார நிலையை விவரிக்கிறது.மக்கள்,இந்திய தொழில்களின் மனநிலை போன்றவைகளை சிறிதும் கவலைப்படாமல் மேற்கு நாடுகளிடம்,உலகமயமாக்கல்,தராளமயமாக்கல் என்ற பெயரில் இந்தியாவை விற்காத குறைதான்.இதைப்பற்றிய செய்திகள்,விழிப்புணர்வுக் கட்டுரைகள் பெரும்பாலான இதழ்கள்,பத்திரிகைகளில் வெளிவருவதே இல்லை;தனிமனிதனின் வாழ்க்கை,குடும்ப வாழ்க்கை,அரசியல் வாழ்க்கை,மத்திய அரசு என அனைத்திலும் பணம் ஒரு முதன்மை மற்றும் முக்கியப்பொருளாகிவிட்டது.இதனால்,பண அரசியலே இன்று இந்தியாவின் தலையெழுத்தைத் தீர்மானிக்கிறது.

தனி மனிதனைப்பொறுத்த வரையிலும்,ஒருவரிடம் பேசினால், அவரிடமிருந்து வருமானம் வர வேண்டும்; அல்லது அவரது அறிவுரை நமது பர்சனாலிட்டியில் இருக்கும் குறைகளை சரி செய்ய வேண்டும்.காலையில் தூங்கி எழுந்தது முதல் இரவு தூங்கும் வரையிலும் நமது ஒவ்வொரு செயலிலும் பேச்சிலும் மூச்சிலும் பணம்,பணம்,பணம் என்று ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.இப்படி நமது ஆயுளில் 45 வருடங்களுக்கு வாழ்ந்தால்,முதுமையில் ஒரு வேளை உணவுடன் நிம்மதியாக வாழ முடியும் என்பதே இன்றைய யதார்த்தம்.


எனவே,எனது ஆன்மீகஎக்ஸ்பிரஸ் வாசக,வாசகிகள் சராசரி இந்தியராக அல்லாமல்,இந்தியாவின் பொருளாதார சூழ்நிலையை எப்படி இந்திய அரசு கையாளுகிறது? என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற பதிவுகளை வெளியிடுகிறேன்.அவை அரசியல் கட்டுரைகள் அல்ல;

No comments:

Post a Comment