Friday, 22 November 2013

பதிணெண் சித்தர்களும் ஒருங்கிணைந்து வரும் அரிதிலும் அரிதான கழுகுமலை கிரிவலம் 16.12.2013 திங்கள்!!!

 
 
உலகத்தை ஒரு வீடாக ஆக்கினால்,அந்த வீட்டின் பூஜை அறையாக நமது பாரத நாடு இருக்கும்;பூஜையறையின் க்ஷேத்திர மையமாக நமது தமிழ்நாடு இருக்கும்;உலகின் மூத்த இனமான தமிழ் இனமே ஆன்மீகத்தின் ரிஷிமூலமாக இருந்துவருகிறது.எழுத்தில் சொல்ல முடியாத,இணையத்தில் எழுதமுடியாத ஏராளமான ரகசியங்கள் நமது முன்னோர்களிடம் இருக்கின்றன.நமது முன்னோர்களும் சரி,நாமும் சரி சித்தர்களின் வம்சாவழியினர் தான்!
சித்தர்களின் பரம்பரையில் நமக்காக வழிகாட்டி வருபவரே நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்கள்.பல ஆன்மீக குருமார்கள் தமது பிரதான சீடர்களிடம் கூட பகிர்ந்து கொள்ளத் தயங்கும் பல ஆன்மீக ரகசியங்களை நமது நலன்களுக்காக வெளிப்படையாக தெரிவிப்பவர் நமது சகஸ்ரவடுகர் ஐயா அவர்கள்!
15 நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை அதாவது 1500 ஆண்டுகளுக்கு ஒருமுறை( நூறு ஆண்டுகளுக்கு மூன்று தலைமுறை என்று கணக்கிட்டுக் கொண்டால்,1500 ஆண்டுகளை 45 தலைமுறைகளுக்கு ஒருமுறை என்று எடுத்துக் கொள்ளலாம்) முதன்மை சித்தர்கள் எனப்படும் 18 சித்தர்களும் ஒன்றாக கிரிவலம் வருகிறார்கள் என்பது பல நூற்றாண்டுகளாக பலருக்குத் தெரியாத ரகசியம்!
1500 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு மார்கழி மாதத்தில் வரும் பவுர்ணமியன்று கழுகுமலைக்கு முதன்மை சித்தர்களாகிய பதிணெண் சித்தர்களும் கிரிவலம் வருகிறார்கள்.அப்பேர்ப்பட்ட மகத்தான காலகட்டத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம் எனில் நமது பூர்வபுண்ணியம் எப்பேர்ப்பட்டதாக இருக்கும்;
2011 மார்கழி மாத கிரிவலத்தில் தமிழ்நாடு முழுவதும் 500 பக்தர்கள் கலந்து கொண்டனர்.கலந்து கொண்ட அனைவருக்கும் அவரவர் முன்னோர்களாகிய சித்தர் தரிசனம் கிரிவலம் செல்லும் போதே கிட்டியது.அவ்வாறு கிட்டியதால்,அடுத்த சில நாட்களில் அவர்களின் நீண்டகால பிரச்னைகள் தீர்ந்தன;பலருக்கு நீண்டகால அதே சமயம் நியாயமான ஏக்கங்கள் நிறைவேறின.
2012 மார்கழி மாத கழுகுமலை கிரிவலத்தில் பாரத நாட்டின் தென் மாநிலங்களில் இருந்து 700 பக்தர்கள் கலந்து கொண்டனர்.கலந்துகொண்டவர்களுக்கு கிடைத்த சித்தர்களின் ஆசியைப் பற்றி எழுத தனி வலைப்பூவே ஆரம்பிக்கலாம்;அவ்வளவு பலன்கள் கிட்டின;வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைத்தது;வேலையில் நிரந்தரம் இல்லாதவர்களுக்கு நிரந்தர வேலை கிட்டியது;தொழிலில் ஸ்திரமில்லாமல் கடனில் தவித்தவர்களுக்கு கடன்கள் தீர்ந்தன;மருத்துவ உலகிற்கே சவால் விடும் பல நோய்கள் தீர்ந்தன;30 ஆண்டுகாலமாக இருந்துவந்த பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் முடிவுக்கு வந்தன;குழந்தை வரம் வேண்டி ஏங்கி தவித்தவர்கள் பலருக்கு சித்தர்பெருமக்களின் ஆசியால் குழந்தை கிடைத்தன;திருமணத் தடையால் மனம் வெதும்பிய பெற்றோர்கள் ஆழ்ந்த நிம்மதியை அடைந்தனர்;வராக் கடன்கள் வசூல் ஆகியது;இவையெல்லாம் சராசரி மனிதர்களின் கோரிக்கைகள் நிறைவேறியதற்கான பின்னூட்டங்கள்!
ஆன்மீக வாழ்வில் முன்னேற விரும்பியவர்களுக்கு அவரவர்களின் ஆன்மீக படிநிலையைப் பொறுத்து முன்னேற்றங்கள் கிட்டின;பலர் தமதுமுன்னோர்களாகிய சித்தர்களால் ஸ்பரிச தீட்சை பெற்றனர்;சிலர் அன்று இரவு அல்லது மறு நாள் இரவு கனவில் தமது முற்பிறவி குருவாக இருந்த சித்தர்களிடம் பேசும் பாக்கியம் பெற்றனர்.இன்னும் சிலருக்கு தாம் எதற்காக இந்த மனிதப் பிறவி எடுத்திருக்கிறோம்? என்பதை உணர்ந்தார்கள்.
பல ஆண்டுகளாக தியானம் செய்து வந்தவர்களுக்கு அதற்குரிய முன்னேற்றத்தை அடைய முடியாமல் தவித்தார்கள்;அவர்களுக்கு இந்த கழுகுமலை கிரிவலம் முன்னேற்றத்தை அடைய உதவியது;
இந்த வருடம் 16.12.2013 திங்கட்கிழமையன்று 18 சித்தர்களும் ஒன்றாக கழுகுமலைக்கு வர இருக்கிறார்கள்;நம்மைச் சுற்றியிருக்கும் சூட்சுமமான உலகத்தில் இருந்து வந்து நமக்கு ஆசி தர இருக்கிறார்கள்;
நாம் 15.12.2013 அன்றே கோவில்பட்டி அல்லது சங்கரன் கோவிலுக்கு வந்து தங்கிக் கொள்வோம்;கோவில்பட்டிக்கும் சங்கரன் கோவிலுக்கும் நடுவில் அமைந்திருக்கும் கிராமமே கழுகுமலை ஆகும்.சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இங்கே ஒரு சர்வதேச பல்கலைக்கழகம் செயல்பட்டு வந்திருக்கிறது.இன்றைய பெங்களூர் போன்ற மாநகரமாக இருந்து வந்திருக்கிறது.உலகம் முழுவதும் இருந்து 10,000 மாணவர்கள்,மாணவிகள் இங்கே வந்து உயர்கல்வி கற்றுள்ளனர்;தமது ஆத்ம பலத்தை கழுகாசலமூர்த்தியால் பெற்றுள்ளனர்;சித்தர்களே ஆசிரியர்களாக இருந்துள்ளனர் என்று தெரிகிறது.காலவெள்ளத்தினால் இன்று கழுகுமலை ஒரு சிறு கிராமமாக மாறிவிட்டது.
ஐந்துகிலோ நவதானியங்கள்(எல்லாம் கலந்தது),ஒருகிலோ டயமண்டு கல்கண்டு நமது ஊரில் இருந்தே வாங்கிக் கொண்டு வருவோம்;மதியம் சரியாக 3 மணிக்கு நமது ஐயா சகஸ்ரவடுகர் அவர்கள் தலைமையில் கழுகாசலமூர்த்தி ஆலயத்தின் வாசலில் இருந்து கிரிவலம் புறப்படுவோம்;கிரிவலம் நிறைவடைந்ததும்,ஐயா அவர்களின் ஆன்மீக சொற்பொழிவில் கலந்து கொள்வோம்;பிறகு,வேறு எந்த ஊருக்கும் செல்லாமலும்,பிறரின் வீடுகளுக்குச் செல்லாமலும் நேராக நமது வீட்டிற்குத் திரும்புவோம்.
அடுத்த கழுகுமலை கிரிவலம் கி.பி.3511 ஆம் ஆண்டில் வருவதால்,(1500 ஆண்டுகளுக்குப் பிறகு) இந்த அரிய வாய்ப்பை வாசகர்கள் பயன்படுத்திக் கொள்வது நமது நிம்மதியான,வளமான வாழ்க்கைக்கு வழி!!!
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ

சொர்ணாகர்ஷண கிரிவலத்தின் (30.11.13 சனிப்பிரதோஷம்) முக்கியத்துவம்!!! (புதுப்பிக்கப்பட்ட தகவல்களுடன்)

கலியுகத்தில் நமது கர்மவினைகளை நீக்கும் சக்தி அன்னதானத்திற்கும்,மந்திரஜபத்திற்கும் மட்டுமே உண்டு என்பதை நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்கள் கண்டறிந்துள்ளார்.அன்னதானம் பற்றி அவர் மேலும் கூறியுள்ளதாவது:
நாம் வசிக்கும் ஊரில் ஒரு நாளுக்கு 1,00,000 பேர் வீதம் ஓராண்டு வரை அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ அதைவிட அதிகமான புண்ணியம் காசிக்குச் சென்று ஒரே ஒரு நாள் மூன்று வேளைகளும் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்.
காசிக்குச் சென்று ஒரு நாளுக்கு 1,00,000 பேர் வீதம் ஓராண்டு வரை அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ அதை விட அதிகமான புண்ணியம் அண்ணாமலையில் ஒரு சாதாரண நாளில் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்.
நாம் பிறந்தது முதல் நமது இறுதிநாள் வரையிலும் ஒவ்வொரு நாளும் காசியில் 1,00,00,000 பேர்களுக்கு அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ அதைவிட அதிகமான புண்ணியம்,துவாதசி திதி வரும் நாளில் அண்ணாமலையில் மூன்று வேளைகளும் ஒருவருக்கு(காலையில் ஒருவர்,மதியம் ஒருவர்,இரவில் ஒருவர்)அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்.மேலும்,மறுபிறவியில்லாத முக்தி துவாதசி அன்னதானம் செய்வதாலேயே கிடைத்துவிடும்.இந்த பேருண்மையை சிவமஹாபுராணத்தில் வித்யாசார சம்ஹிதை தெரிவிக்கிறது.
துவாதசி திதியும்,சனிப்பிரதோஷமும் சேர்ந்து வரும் நாளில் நமது ஆன்மீக குருவின் தலைமையில் அன்னதானம் செய்தால் மேலே கூறிய எண்ணிக்கையை விட ஆயிரம்கோடி மடங்கு புண்ணியம் நம்மை வந்து சேரும்.இதனால்,கடந்த ஐந்து பிறவிகளில் நாம் செய்த கர்மவினைகளின் தொகுப்பை அனுபவிக்கவே பிறந்திருக்கிறோம்;நமது அனைத்து கர்மவினைகளும் நம்மைவிட்டு முழுசாக நீங்கிட இந்த சொர்ணாகர்ஷண கிரிவலம் ஒரு காரணமாக அமைந்துவிடும்.
ஒரே ஒரு சனிப்பிரதோஷம் அன்று அண்ணாமலை கிரிவலம் சென்றால்,ஐந்து வருடங்களுக்கு(365 *5 = 1825 நாட்கள்) தினமும் கிரிவலம் சென்றதற்கான பலன்கள் கிடைக்கும்;மேலும்,சனிப்பிரதோஷ நேரத்தில் பிரதோஷ அபிஷேகத்தில் கலந்து கொண்டு,பிரதோஷ நேரம் நிறைவடைந்த பின்னர் அண்ணாமலையாரை தரிசனம் செய்தால் 1825 நாட்களுக்கு தினமும் அண்ணாமலையாரை தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பதை சித்தர்களின் தலைவரான கும்பமுனி தனது பாடல்களில் தெரிவிக்கிறார்.
சுவாதி நட்சத்திரமும்,சனிப்பிரதோஷமும் சேர்ந்து வருவது பல ஆண்டுகளுக்கு ஒருமுறையே வரும் ஓர் அற்புத நிகழ்வாகும்;அத்துடன் துவாதசி திதியும் சேர்ந்து வருவது சில நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை வரும்;அதையே சொர்ணாகர்ஷண கிரிவலநாள் என்று அண்ணாமலை ஏடு தெரிவிக்கிறது.இந்த நன்னாளில் நமது குருவுடன் கிரிவலம் செல்பவர்கள் பலத்த பூர்வபுண்ணியம் மிக்கவர்கள் என்றும்,அவர்களின் கர்மவினைகள் மழையில் கரையும் உப்பைப் போல கரைந்து காணாமல் போய்விடும் என்றும் விவரிக்கிறது.
30.11.2013 சனிக்கிழமை அன்று துவாதசி திதியும்,சனிப்பிரதோஷமும்,சுவாதி நட்சத்திரமும் சேர்ந்து இப்பேர்ப்பட்ட பெருமைகளுடன் வர இருக்கிறது.இந்த நன்னாளில்,காலை 7 மணிக்கு நமது ஆன்மீககுரு சகஸ்ரவடுகர் அவர்கள் தலைமையில் இரட்டைப்பிள்ளையார் கோவிலில் சொர்ணாகர்ஷண கிரிவலப் பயணம் புறப்படுவோம்;பிங்க் அல்லது மஞ்சள் நிற ஆடை அணிந்திருப்பது அவசியம்;ஆண்களுக்கு வேட்டியும்,துண்டும் போதுமானது; அவ்வாறு புறப்படும்போது,ஐந்து கிலோ நவதானியங்களையும்,ஒரு கிலோ டயமண்டு கல்கண்டையும்,அன்னதானத்தின் நவீன வடிவமாகிய இட்லிகள் நிரம்பிய பார்சல்களை உடன் கொண்டு புறப்படுவோம்;பெரும்பாலான சாதுக்கள் அக்னிலிங்கம் அருகிலும்,அதன் சுற்றுப் புறங்களிலும் தான் தங்குகின்றனர்;அதே சமயம்,6 வது,7 வது,8 வதாக இருக்கும் லிங்கங்களின் வாசலில் சாதுக்கள் இருப்பது அபூர்வம்.நாம் இந்த துவாதசி திதியில் ஒவ்வொரு லிங்கத்தின் வாசலிலும் ஒரு சாதுக்காவது இட்லி தானம் செய்யும் விதமாக நம்மைத் தயார் செய்து வருவோம்;
கிரிவலப் பயணத்தின் போது ஓம் அண்ணாமலையே போற்றி என்றோ அல்லது ஓம் அருணாச்சலாய நமஹ என்றோ மனதுக்குள் ஜபித்துக் கொண்டே செல்வோம்;ஏனெனில்,ஒரே ஒருமுறை ஓம் அண்ணாமலையே போற்றி என்றோ அல்லது ஓம் அருணாச்சலாய நமஹ என்றோ ஜபித்தாலே 3,00,000 தடவை ஓம் நமச்சிவாய என்று ஜபித்தமைக்கான பலன்கள் கிட்டும் என்று அண்ணாமலையாரே உபதேசித்திருக்கிறார்.எனவே,இதைத்தவிர,வேறு எந்த வீண்பேச்சும் பேசாமல் கிரிவலம் செல்வோம்;
கிரிவலப்பயணத்தின் போது இட்லி தானம் செய்வோம்;நாம் கொண்டு செல்லும் ஐந்து கிலோ நவதானியங்களையும் நமது கைகளால் கிரிவலப்பாதையின் ஓரங்களில் தூவுவோம்;ஒருபோதும் கொட்டக்கூடாது; கைகளால் தூவ வேண்டும்;தற்போது மழைக்காலமாக இருப்பதால் நம்மால் தூவப்பட்ட நவதானியங்கள் விரைவில் செடிகளாக வளரத் துவங்கும்;அவ்வாறு வளரத்துவங்கியதும்,நமது அனைத்து கிரக தோஷங்களும் நம்மை விட்டு நீங்கிவிடும்;கடந்த 30 ஆண்டுகளில் பலமுறை நிரூபிக்கப்பட்ட சக்தி வாய்ந்த அதே சமயம் எளிய பரிகாரம் இது!
நாம் கொண்டு வரும் டயமண்டு கல்கண்டுகளை கிரிவலப் பாதையில் தூவுவோம்;ஒரே ஒரு டயமண்டு கல்கண்டை ஒரே ஒரு எறும்பு எடுத்துச் சென்றாலே நாம் நூறு அந்தணர்களுக்கு தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளுக்கு அன்னதானம் செய்த பலன் நமக்குக் கிட்டும்;இதனால்,சனியின் தாக்கம் நம்மை விட்டு முழுமையாக நீங்கிவிடும் என்பது நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களின் ஆன்மீக ஆராய்ச்சி முடிவு!
மதியம் 2 மணிக்குள் கிரிவலம் நிறைவடைந்த பின்னர்,மாலையில் நடைபெற இருக்கும் சனிப்பிரதோஷ அபிஷேகத்தில் கலந்து கொள்வோம்;மாலை 6 மணிக்கு பிரதோஷம் நிறைவடந்ததும், கோவிலுக்கு வெளியே வந்து கிழக்குக் கோபுர வாசலிலோ அல்லது பேய்க் கோபுர வாசலிலோ அல்லது கோவிலின் வெளிப்புறத்தில் இருக்கும் சுற்றுச் சாலையிலோ அமர்ந்திருக்கும் சாதுக்களுக்கு இரவு நேரத்திற்குரிய உணவை வாங்கி தானம் செய்வோம்;இந்த தானமானது மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் செய்து விட வேண்டும்;தரமான உணவுப் பொருளை வாங்கித் தருவதும் அவசியம்;
இரவு பள்ளியறை பூஜை வரையிலும் அண்ணாமலையாரின் ஆலயத்தினுள் இருந்தாலே நமது நியாயமான கோரிக்கைகளும்,வேண்டுதல்களும் நிறைவேறத் துவங்கும்;பல ஆண்டுகளாக நமக்கு இருந்துவரும் கர்மவினைகளும்,சிரமங்களும் முழுமையாக விலகிவிடும்.பள்ளியறை பூஜை நிறைவடைந்ததுமே நேராக (வேறு எந்த கோவிலுக்கும் செல்லாமலும்,யார் வீட்டிற்கும் செல்லாமலும்) நமது சொந்த ஊருக்குத் திரும்புவோம்;
இதன் மூலமாக சொர்ணாகர்ஷண கிரிவலத்தின் பலன்கள் அடுத்த சில நாட்களில் நம்மை வந்து சேரும்;சிலருக்கு சில வாரங்களுக்குள் வந்து சேரும்.
ஓம் அருணாச்சலாய நமஹ!!!
ஓம் அண்ணாமலையே போற்றி!!!
பின்குறிப்பு:சொர்ணாகர்ஷண கிரிவலத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் முதல் நாள் 29.11.13 வெள்ளிக்கிழமை மாலை நேரத்திலேயே அண்ணாமலையை வந்தடைவது நன்று.அண்ணாமலை முழுவதும் தங்கும் விடுதிகளும்,மடங்களும்,உணவகத்துடன் கூடிய தங்கும் லாட்ஜ்களும் இருக்கின்றன.வெகுதொலைவில் இருப்பவர்கள் முதல் நாளே வருவதன் மூலமாக இங்கேயே நவதானியங்களையும்,டயமண்டு கல்கண்டையும் வாங்கிக் கொள்ளலாம்;பக்கத்து மாவட்டங்களில்/மாநிலங்களில் இருப்பவர்கள் சொந்த ஊரில் இவைகளை வாங்கிக் கொண்டு 30.11.13 சனிக்கிழமை அன்று காலை 7 மணிக்குள் இரட்டைப் பிள்ளையார் கோவில் வாசலுக்கு வந்துவிடவும்.குறித்த நேரத்தில் சொர்ணாகர்ஷண கிரிவலம் துவங்கிவிடும்;தவிர,குளிரும் மழையும் ஒன்றாக வரும் பருவமாக இருப்பதால் உரிய முன்னேற்பாடுகளுடன்(ஸ்வெட்டர்,மருந்துகள் போன்றவை) வருவது அவசியம்.

இட்லிதானம் செய்ய விரும்புவோர் வீட்டில் இருந்தவாறே எள்ளும் நல்லெண்ணெயும் கலந்த கலவையை ஒரு கேரிபேக்கில் கட்டிக் கொண்டுவருவது நன்று.
எத்தனை இட்லி பார்சல்கள் வாங்கி தானம் செய்ய விரும்புகிறீர்களோ அத்தனை கேரிபேக் பாக்கெட்டுக்களைத் தயார் செய்து வருவது நன்று.உதாரணமாக,நீங்கள் கிரிவலப் பயணத்தின் போது 10 பேர்களுக்கு இட்லி தானம் செய்ய விரும்புகிறீர்கள் என்று வைத்துக் கொண்டால்,பத்து கேரிபேக்குகளில் எள்ளுப்பொடியும் நல்லெண்ணெயும் கலந்து கொண்டு வரவும்.இட்லி பார்சல்களை இங்கேயே வாங்கிக் கொள்ளலாம்;வாங்கிக் கொண்டு,தானம் செய்யும் போது ஒவ்வொரு பார்சலுடனும் எள்ளும் எண்ணெயும் கலந்த கேரிபேக்கையும் மறவாமல் தர வேண்டும்;

குறிப்பு:அடுத்த பொதுநிகழ்ச்சியும்,மிகவும் அரிதான நிகழ்வான கழுகுமலை கிரிவலத்தில் 16.12.13 திங்கட்கிழமையன்று சந்திப்போம்;இது போன்ற நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொள்வதால் இந்த ஜன்மம் முழுவதும் நமது வாழ்க்கை ஸ்திரமாகவும்,அமைதியானதாகவும்,கடன்/நோய்/எதிரி/துயரங்கள்/கஷ்டங்கள்/வேதனைகள்/மன உளைச்சல்கள் இன்றியும் மாறிவிடும்.கடந்த இரண்டு ஆண்டுகளில் பல வாசக,வாசகிகளுக்குக் கிடைத்த அனுபவங்கள் இவை!
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ