Friday 15 February 2013

மதம் என்பது இயற்கைப் பாதுகாப்பு - அமிர்தானந்தமயி

மதம் என்பது குருட்டு நம்பிக்கை என்று கூறி, சிலர் கேலியாகச் சிரிப்பதைக் காணலாம். ஆனால் இப்படிக் கூறுபவர்களின் செயல்களே இயற்கைக்கு மிகவும் கெடுதலாக மாறுகின்றன. இந்தப் பொய்யான பகுத்தறிவுவாதிகளைவிட இயற்கையின் மீது அன்பு செலுத்துவதும், அதைப் பாதுகாப்பதும் மத உணர்வைப் பெற்றுள்ள சாதாரண மக்களே. மதத்தில் கூறப்படும் சில விஷயங்கள் தவறென்று நிரூபிக்க அறிவியலை உதாரணம் காட்டச் சிலர் முயல்வதைக் காணலாம். ஆனால் பெளதிக அறிவியல் தெரிந்துகொள்வதற்கு இன்னும் எத்தனையோ விஷயங்கள் உள்ளன என்பதை அவர்கள் மறுக்கின்றனர். 

மதம் வெறும் குருட்டு நம்பிக்கை என்று சொல்பவர்கள் அதன் ஆசாரங்களின் பின்னே உள்ள சாஸ்திர தத்துவத்தைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதில்லை. மத தத்துவங்கள் ஏதாவது ஒரு பிரிவைச் சேர்ந்தவருக்காக மட்டும் கூறப்படுபவை அல்ல. எல்லா நிலையில் உள்ளவர்களுக்கும் தேவையானது அதில் உண்டு. சிறு குழந்தைகளுக்குத் தேவையானதும், பத்து வயதுச் சிறுவனுக்கு வேண்டியதும், இளைஞனுக்குப் பொருந்துவதும், நூறு வயதுள்ள கிழவருக்குத் தேவையானதும், பைத்தியக்காரர்களுக்கும், அறிவாளிகளுக்கும் தேவையானவையும் சாஸ்திரங்களில் உள்ளன. 

ஒவ்வொருவரின் இயல்பிற்கு ஏற்ப, அவற்றிற்குப் பொருந்தும் ரீதியிலுள்ள தத்துவங்களே மதத்தில் உள்ளன. ராணுவத்திற்கும், காவல் துறையிலும், அலுவலகத்திலும் வேலை செய்வதற்குத் தேவையான தகுதிகளில் வித்தியாசமுண்டு. அதுபோல், மாறுபட்ட இயல்புள்ளவர்களுக்கு உபதேசிக்கப்பட்ட பல தத்துவங்கள் மதத்தில் உள்ளன. அனைத்தும் ஒன்றாக இருக்கும்போது, சில நேரங்களில், சில தத்துவங்கள் நமக்குப் பொருந்தாதவையாக இருக்கும். ஆனால், ஒவ்வொன்றும் ஒவ்வொருவரையும் கருத்தில் கொண்டு கூறப்பட்டதாகும். மத தத்துவங்களை அறிய முற்படுகையில் இந்தத் தெளிவு நமக்கு இருக்க வேண்டும். 

நம்பிக்கையின்றி யாரால் வாழ முடியும்? எத்தனையோ பேர் விபத்துகளிலும், வேறு விதங்களிலும் இறக்கின்றனர். பேசிக்கொண்டு நிற்கும்போதே இறந்து விடுகின்றனர். இருந்தபோதும் "நாம் இப்போது சாகமாட்டோம்" என்ற குருட்டு நம்பிக்கையே நமக்கு இருக்கிறது. இதுபோல் எந்த ஒரு செயலிலும் - அவ்வளவு ஏன்! - ஒவ்வொரு நிமிடத்திலும் நம்மை முன்னோக்கி அழைத்துச் செல்வது நம்பிக்கையே ஆகும். இங்கே குண்டு விழாது என்ற நம்பிக்கையால்தான். தனது மகளைக் கண்கலங்காமல் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில் தான் ஒருவர் தன் மகளை ஒரு ஆடவனுக்குத் திருமணம் செய்து வைக்கிறார். நாம் குடிக்கும் தண்ணீர் விஷமில்லை என்ற நம்பிக்கையே அதைக் குடிக்க நமக்கு வழி செய்கிறது. 

இப்படி பார்க்கும்போது வாழ்க்கையின் எந்த நிலையிலும் நம்மை முன்னோக்கி அழைத்துச் செல்வது நம்பிக்கையே ஆகும். எதையும் நம்பிக்கையுடன் பார்க்கும்போதுதான் ஆனந்தத்தை அனுபவிக்க முடியும். தான் விரும்பும் பெண் தருகின்ற கசப்பையும், இனிப்பாக எண்ணி அருந்த முடியும்.

நமது கருத்து : இந்து மதத்திலும் அதன் சாஸ்திரங்களிலும் உள்ள விஞ்ஞான முறைகளை பின்பற்றினாலே போதும். இந்திய நாடு எப்பொழுதோ உலக நாடுகளுக்கு தலைவர் ஆகி இருக்கும்.


நன்றிகள் : குருநாதர்

No comments:

Post a Comment