Thursday 21 February 2013

இணையத்துக்குள் சிக்கிக் கொண்ட இளைய சமுதாயம்

தற்போதைய இளைய சமுதாயம் இணையம் என்னும் மாய வலைக்குள் சிக்கி மூழ்கிக் கொண்டிருக்கிறது. இணையம் என்பது பரந்து விரிந்த விஷயமாக இருந்தாலும், அதன் ஒரு புள்ளிக்குள்ளேயே இளைய சமுதாயம் சுற்றி சுற்றி வருவதால், அதன் சிறகுகள் பறப்பதற்கு பதிலாக முடமாக்கப்பட்டுள்ளது.
இணையத்தில் தெரிந்து கொள்ள இயலாத விஷயங்களே இருக்க முடியாது, பார்க்க முடியாத விஷயங்களே இல்லை, எத்தனையோ பல்கலைக்கழகங்கள் இணையம் வாயிலாக படிப்புகளை வழங்கி வருகிறது, நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் அந்த நபரை, இணையத்தின் வாயிலாக நாம் இருக்கும் இடத்தில் இருந்து பார்க்க முடியும், பேச முடியும், எங்கோ ஒரு தலைவர் பேசுவதை இணையத்தின் மூலமாக உடனுக்குடன் நாம் தெரிந்து கொள்ள முடிகிறது என இணையத்தைப் பற்றிய நல்ல விஷயங்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
ஆனால், இந்த நல்ல விஷயங்களில் ஒன்றையாவது நமது இளைய சமுதாயம் பயன்படுத்திக் கொள்கிறதா? செல்பேசியில் சிக்கி சீரழிந்த நமது இளைஞர்கள், தற்போது, செல்பேசியில் இணைய சேவையைப் பெற்று மேலும் வேகமாக அழிவுப் பாதையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இணையமும், தொலைத்தொடர்பும் மக்களின் அறிவு வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் பயன்படும் என்ற எண்ணம் தற்போது மறுக்கப்பட்டு, இளைய சமுதாயத்தின் சீரழிவுக்கே இதுதான் காரணமாக உருமாறிவிட்டது.
படிப்புக்காகவும், செய்திகளை அறிந்து கொள்ளவும், செய்திகளை பரிமாறிக் கொள்ளவும் எத்தனை இளைஞர்கள் கம்ப்யூட்டரையோ, மொபைலையோ பயன்படுத்துகிறார்கள்.. மிகச் சிலரே. அதற்கு பதிலாக பேஸ்புக் எனப்படும் இணையத்தில் அல்லவா தங்களது வாழ்நாளை எவ்வித குற்ற உணர்ச்சியும் இன்றி கரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சமீபத்தில் நடந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், பொறியியல் மற்றும் தகவல் தொலைத்தொடர்பு படிப்புகளில் படித்துக் கொண்டிருக்கும், படித்து முடித்து வேலை செய்யும் இளைஞர்களிடம் சமுதாயத்தைப் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன. தற்போது சமுதாயம் சந்திக்கும் அவலங்கள் பற்றி அவர்களுக்குத் தெரிந்த விஷயம் பூஜ்யமாகத்தான் இருந்தது. இது ஒரு சாதாரண விஷயமாக எடுத்துக் கொண்டால் சாதாரணம் தான். ஆனால், நமது இளைய சமுதாயத்தின் பொது அறிவுக்கு இவர்கள் ஒரு உதாரணம் என்று எடுத்துக் கொண்டால் அது சமுதாயத்தின் அசாதாரண விஷயம் என்பது தெரிய வரும்.
சமுதாயத்தில் தற்போதிருக்கும் ஒரு அவல நிலை குறித்துக் கூட இளைஞர்கள் தகவல்களை தெரிந்து வைத்துக் கொள்வதில்லை. செய்தித்தாள் படிக்கும் பழக்கம் மாணவர்களிடையே குறைந்து வருகிறது. இதற்கு உடனடி காரணத்தையும் பலர் வைத்திருக்கிறார்கள். அதாவது, அதிகப்படியான கல்விச் சுமையை காரணம் கூறுகிறார்கள். கல்விக் சுமை காரணமாக செய்தித் தாள் படிக்க முடியாமல் போகும் அதே இளைய சமுதாயம், மொபைலை நோண்டவோ, பேஸ்புக் அப்டேட் செய்யவோ தவறுவதில்லை.
நூறில் 25 சதவீதத்தினர் செய்தித்தாள் படித்தால், நூற்றுக்கு நூற்று ஐம்பது பேர் பேஸ்புக் தொடர்பில் இருக்கிறார்கள். பேஸ்புக்கிலும் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவற்றை எல்லாம் யார் பார்ப்பது? நமக்குத் தேவையானது, நமது நண்பர்களைப் பற்றி கிண்டல் செய்வதும், நமது அழகான புகைப்படங்களை அப்டேட் செய்து அதற்கு பல நூறு லைக் பெறுவதுமே.
இதெல்லாம் இளைய சமுதாயத்தின் பொழுதுபோக்கு அம்சங்களாக இருப்பதில் தவறில்லை. ஆனால் இது ஒரு போதையாக மாறிவிடக் கூடாது. இதனால் எதிர்காலமே சூன்யமாகிவிடக் கூடாது என்பதுதான் தற்போதைய கவலை.
இணையத்தின் மூலம் எதிர்காலத்தை நல்ல முறையில் உருவாக்கிக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு ஒரு செய்தியையாவது படிப்பதையும், ஒரு தலைவரின் வாழ்க்கை வரலாறை அறிந்து கொள்வதையும், படிப்பு மற்றும் பணி நிமித்தமான விஷயங்களை படித்து உங்களை அதற்கேற்ற வகையில் உருவாக்கிக் கொள்வதையும் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் படித்த விஷயங்களை உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து உங்களை அறிவுஜீவியாக மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் வழி பின்பற்றி உங்கள் நண்பர்களும் வருவார்கள்.
பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொருவருக்கும் அவசியமாகிறது. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல வெறும் கல்லூரி படிப்பு மட்டுமே வாழ்க்கையின் லட்சியத்தை அடைய போதுமானதாகாது என்பதை நினைவில் கொண்டு இனியாவது இணையத்தை முன்னேற்றப் பாதையில் பயன்படுத்துவோம்.
 
நன்றிகள் : குருநாதர்

No comments:

Post a Comment