Monday 28 January 2013

ஜோதிடக் கேள்விகளும்,அதற்குத் தகுந்த பதில்களும்

?: ஒரு சுனாமியில், ஒரு புயலில், ஒரு விபத்தில் பலர் உயிரிழக்கின்றனர்.அனைவரின் ஜாதகமும் ஒன்றாக அமைகிறதா?
!! தனி மனித ஜாதகத்தைப் போல் நாடுகளுக்கும்,நகரங்களுக்கும் ஏன் கிராமங்களுக்கும் கூட ஜாதகம் உள்ளன.இதனைக் கணித்துக்கூறும் முறைக்கு MUNDANE ASTROLOGY என்று பெயர்.அதன்படியே ஒரு நாட்டுக்கோ அல்லது நகரத்திற்கோ சுனாமி வெள்ளம் போன்ற பாதிப்புகள் உண்டாகின்றன.ஒட்டு மொத்த பாதிப்பு பற்றி தனி மனித ஜாதகம் கூறுவதில்லை;


? ஜாதகம் பார்த்து திருமணம் செய்த பல ஜோடிகளுக்கு விவாகரத்து ஏற்படுவதற்கு யார் பொறுப்பு?
!!! “திருமணம் செய்வது கூட ஜோதிடர்கள் நன்மைக்காகத் தான்.விவாகரத்தை ஏற்படுத்துவது கூட ஜோதிடர்களால் தான்.இதற்கெல்லாம் ஜோதிடர்களே பொறுப்பு.வரதட்சணை வாங்குவது கூட ஜோதிடர்களே!
பெண்ணை நேருக்கு நேர் பார்த்து மணம் செய்து கொண்ட ஆண் கூட திருமணம் முடிந்ததும், ‘பெண்ணை எனக்குப் பிடிக்கவில்லை’ என்று கூற வைப்பது கூட ஜோதிடர்கள் தான்.விவாகரத்து நோட்டீஸ் தயார் செய்து அனுப்பவது  கூட ஜோதிடர்கள் தான்.நீதி மன்றத்தில் டைவர்ஸ் வழங்குவது கூட ஜோதிடர்கள் தான். . .”விட்டால் இப்படி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக் கணைகளை அப்பாவி ஜோதிடர்கள் மீது தொடுப்பீர்கள் போலிருக்கிறது.
வரதட்சணை பேரத்தில் சிறிதளவு வாட்டம் ஏற்பட்டாலும், பெண் பிடிக்கவில்லை;பணம் போதவில்லை; என்றெல்லாம் கூறுவதை விட்டுவிட்டு பொருத்தமில்லை என்று ஜோதிடர் கூறிவிட்டார் என்று தட்டிக்கழித்து எதற்கெடுத்தாலும் ஜோதிடர்களையே பழிசுமத்தும் போக்கு என்றுதான் நீங்குமோ தெரியவில்லை;
நூற்றுக்கு எத்தனை சதவீதம் பேர் உண்மையான பொருத்தம் பார்க்க வருகிறார்கள்? எல்லாம்  பேசி முடித்துவிட்டு உப்புக்குச் சப்பாணியாய்  “பொருத்தம் பாருங்கள்; முதலில் திருமணத்திற்கு நல்ல நாளைப்  பாருங்கள்;அதுவும் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் வேண்டும்” என்று அதிரடி ஆணை பிறப்பிக்கும் பலரின் முன்னிலையில் ஜோதிடர்கள் அற்பங்களாய்த்தான் தெரிவார்கள்.
நம் நாட்டில் மனமொத்த தம்பதிகள் பல கோடி பேர்கள் வாழ்கிறார்கள்;அதற்கெல்லாம் எப்படி ஜோதிடர்கள் காரணமில்லையோ அப்படித் தான் பிரிவினைக்கும் அவர்கள் காரணமில்லை;


?குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் யாருமே கிடையாது;அறிவியல் வளர்ச்சியில் செயற்கைக் கருத்தரிப்பு கூட வந்துவிட்டது;ஜாதகப்படி குழந்தை இல்லை என்று எப்படி கூற முடியும்?
!! செயற்கைமுறையில் கருத்தரிப்பு, விந்து வங்கியின் துணையோடு நடக்குமெனில்,அவருக்கு குழந்தை உண்டு என்று எப்படி கூற முடியும்?


?விதிப்படி தான் எல்லாம் நடக்கும் எனில் ஏன் ஜோதிடம் பார்க்க வேண்டும்?
!! உங்கள் வினா வேடிக்கையாக இருக்கிறது.உணவு  உண்டப்பின்னும் மீண்டும்  பசி வரும் என்பதை அறிந்திருந்தும் ஏன் சாப்பிட வேண்டும்? என்று கேட்பதைப்போல இருக்கிறது.விதிப்படி எல்லாம் நடக்கும் என்பதால் தான் அந்த விதியின் போக்கை ஓரளவு தெரிந்து கொள்ள பார்க்கிறோம்.

ஆன்மீகக்கடலின் கருத்து:விதியை தொடர்ந்த இறைவழிபாடு,மந்திரஜபம்,மனக் கட்டுப்பாடு போன்றவற்றால் முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவாவது குறைக்க முடியும்.இதற்கான ஆதாரங்கள் நிறைய இருக்கின்றன.இந்த முயற்சிகள் மூலம் மனித வாழ்க்கையிலும் ஜனநாயகத்தை  கொண்டு வந்த ஸ்ரீகால பைரவருக்குத் தான் நாம் நன்றி சொல்ல வேண்டும்.ஒருவேளை அப்படி ஏதும் இல்லாவிட்டால் நமது வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் நரகமே!

?பரிகாரம் உண்மையா?
! பரிகாரம் உண்மைதான்.அதைப் பரிகாசம் செய்வதில் தான் உண்மையில்லை;காலில் காயம் பட்டால் பரிகாரமாக கட்டுப்போடுவது கூட பரிகாரம் தானே?


?சோதிடம் தன்னை இகழ் என்று பாரதி கூறியுள்ளாரெ?
! இந்த வினாவை ஒரு சமயம் கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவர் என்னிடம் கேட்டார்.நான் கூறிய பதில், “பாரதி கடவுளை வணங்கச் சொன்னார்; தாங்கள் முதலில் அவரது பாடல்களின் படி கடவுள் நம்பிக்கையை மனதிற்கொண்ட பிறகு இந்த வினாவிற்கு வாருங்கள்;கடவுள் நம்பிக்கை பூரணமாக ஏற்பட்ட பாரதி ஜோதிடத்தை இகழ்வது சித்தர்களது உணர்வை எட்டியதால் தான்.பக்தியாலும் ஒரு மேம்பட்ட நிலை ஏற்படும் போது,
நட்ட கல்லை தெய்வமென்று
நாலு புஷ்பம் சாற்றியே
சுற்றிவந்து மொண மொணன்று
சொல்லும் மந்திரம் ஏதடா
நட்ட கல்லும்  பேசுமோ
நாதன் உள்ளிருக்கையில் என்று பேசத் தோன்றும்.

நன்றி: ஜோதிட அரசு,மாத இதழ்,பக்கம் 70,வெளியீடு பிப்ரவரி 2013

ஓம்சிவசிவஓம்


நன்றிகள் : குருநாதர்.,

No comments:

Post a Comment