Tuesday, 26 March 2013

குமரிமாவட்டத்தில் சிவாலய ஓட்டம் பிறந்த வரலாறு!!!

கன்னியாக்குமரி மாவட்டத்தில் உள்ள இந்துக்கள் ஆண்டுதோறும் மகாசிவராத்திரியன்று காவி அல்லது மஞ்சள் ஆடை அணிந்து,கையில் விசிறியோடு அந்த மாவட்டத்தில் உள்ள திருமலைக்கோவிலில் தொடங்கி திக்குறிச்சி,திற்பரப்பு,திருநந்திக்கரை,பொன்மனை,பன்றிப்பாகம்,கல்குளம்,மேலாங்கோடு,திருவிடைக்கோடு,திருவிதாங்கோடு,திருப்பன்றிக்கோடு,    திருநட்டாலம் ஆகிய பனிரெண்டு சிவஸ்தலங்களுக்கும் முறையாக ஓடிச்சென்று சிவபிரானைத் தரிசிக்கிறார்கள்.
இங்ஙனம் பனிரெண்டு சிவாலயங்களையும் ஓடி ஓடி தரிசிப்பதே ‘சிவாலய ஓட்டம்’ எனப்படுகிறது.இந்த ஓட்டத்தின் மொத்த தூரம் 87 கி.மீ!!!
ஓடும்போது பக்தர்கள் கோவிந்தா,கோபாலா என்று விஷ்ணு நாமத்தை ஜபிக்கிறார்கள்.
ஹரியும் சிவனும் ஒண்ணு;என்ற தத்துவத்தை உணர்த்தவே இந்த சிவாலய ஓட்டம் என்பர்.ஏறத்தாழ 6000 ஆண்டுகளாக இந்த சிவாலய ஓட்டம் நிகழ்ந்து வருகிறது.
இதன் பின்னே ஒரு புராணக்கதை உண்டு.
இடுப்புக்கு மேலே மனித வடிவமும்,கீழே புலி வடிவமும் கொண்டது புருஷாமிருகம்.சிவபக்தரான வ்யாக்ரபாத மஹரிஷியே புருஷாமிருகம் ஆனதாகச் செய்தி உண்டு.புருஷாமிருகம் விஷ்ணுநாமத்தைக் கேட்க விரும்பாத ஒரு விநோத ஜந்து!!!
தர்மர் ஒருமுறை ராஜஸீய யாகம் நடத்தத் திட்டமிட்டார்.யாகத்திற்கு புருஷாமிருகத்தின் பால் தேவைப்பட்டது;பீமனை இந்தப் பாலைக் கொண்டு வருமாறு பணித்தார் தர்மர்.
பீமனிடம் பனிரெண்டு ருத்ராட்சக் கொட்டைகளைத் தந்து புருஷாமிருகம் தாக்க வந்தால் அந்த ருத்ராட்சக்கொட்டையை மிருகத்தை நோக்கி வீசி எறியும்படி கூறினார் ஸ்ரீகிருஷ்ணர்.
வீசி எறியப்படும் ருத்ராட்சம் கீழே விழும் இடத்தில் சிவலிங்கம் ஒன்று தோன்றும்;லிங்கத்தைப் பார்த்தவுடன் புருஷாமிருகம் பூஜிக்கத் தொடங்கிவிடும்.
ஸ்ரீகிருஷ்ணர் அளித்த பனிரெண்டு ருத்ராட்சக்கொட்டைகளுடன் காட்டுக்குச் சென்றான் பீமன்.
திருமலையில் ஒரு பாறையின் மீது அமர்ந்து சிவனை நோக்கித் தவம் புரிந்துகொண்டிருந்தது புருஷாமிருகம்.
பீமன், கோவிந்தா,கோபாலா என்று உரக்கக் கூறினான்.புருஷாமிருகத்தின் தவம் கலைந்தது;அது கோபத்துடன் பீமனைத் துரத்தியது;உடனே,பீமன் ஒரு ருத்ராட்சத்தைக் கீழே போட்டான்;அடுத்த கணமே அது சிவலிங்கமாக மாறியது;
சிவலிங்கத்தைக் கண்டதும் புருஷாமிருகம் சிவபூஜையை ஆரம்பித்தது;பீமன் கோவிந்தா,கோபாலா என்று மீண்டும் கத்தினான்;புருஷாமிருகம் மீண்டும் பீமனைத் துரத்த ஆரம்பித்தது;
பீமன் மீண்டும் ஒரு ருத்ராட்சத்தைக் கீழே போட்டான்;அது உடனே சிவலிங்கமாக மாறியது;இந்த இடமே திக்குறிச்சி.
இப்படி பதினோரு இடங்களைத் தாண்டி பனிரெண்டாவது இடத்தில் (திருநட்டாலம்) ருத்ராட்சத்தை எறிய விடாமல் புருஷாமிருகம் பீமனைப் பிடித்துவிட்டது.
அந்த நேரத்தில் அங்கு தோன்றிய ஸ்ரீகிருஷ்ணர் பீமனுக்கும்,புருஷாமிருகத்துக்கும் “ஹரியும் சிவனும் ஒன்றே”என்ற தத்துவத்தை உணர்த்தினார்.
இருவரும் ஸ்ரீகிருஷ்ணரை வணங்கினர்.தர்மரின் யாகத்திற்கு பால் தந்து உதவியது புருஷாமிருகம்.
பீமன் ருத்ராட்சங்களை வீசி எறிந்த இடங்களே கன்னியாக்குமரி மாவட்டத்தில் உள்ள பனிரெண்டு சிவாலயங்கள் ஆகும்.மஹாசிவராத்திரி தினத்தன்று இந்த சிவாலய ஓட்டத்தை மேற்கொள்ளும் பக்தர்கள் மாசி மாதம் க்ருஷ்ண பட்ச ஏகாதசி அன்று மாலை அணிவார்கள்;அன்றிலிருந்து விரதம் இருப்பார்கள்;சிவராத்திரிக்கு முன் தினம் காலையில் இருந்து எதுவும் சாப்பிடாமல் காவி அல்லது மஞ்சள் உடை அணிந்து புறப்படுவார்கள்;
“கோவிந்தா,கோபாலா” என்று கோஷமிட்டபடி திருமலையில் இருந்து சிவாலய ஓட்டம் தொடங்குவார்கள்;அந்தத் தொடர் ஓட்டத்தில் பன்னிரெண்டு சிவாலயங்களையும் தரிசிப்பார்கள்;சிவாலயங்களை தரிசிக்க ஓடுபவர்கள், கோவிந்தா,கோபாலா என்று விஷ்ணுநாமம் சொல்லி ஓடுவது சிவாலய ஓட்டத்தின் சிறப்பு.இதைத் தவிர,வேறு ஒரு கதையும் உண்டு;ஒரு அரக்கனுக்குப் பயந்து சிவபெருமான் இந்த பனிரெண்டு சிவாலயங்களுக்கும் ஓடிப்போய் மறைந்து நிற்பாராம்;இது சைவத்தை அவமதிக்கும் விதமாக இடையில் உண்டான இடைச்செருகல்.
ஆதாரம்:ஹிந்து விழாக்களும்,விரதங்களும் பக்கம் 178,179,180
ஓம்சிவசிவஓம்.

No comments:

Post a Comment