Saturday, 23 February 2013

வெயிலோடு விளையாடு!!!

வெயிலோடு விளையாடு!!!

வெயிலோடு விளையாடும் வேளை வந்துவிட்டது. சேனல்கள், எஃப்.எம்-கள், விளம்பர ஹோர்டிங்குகள் என எங்கெங்கும், 'தாகம் எடுத்தால் தண்ணீரைத் தேடக் கூடாது... எங்கள் நிறுவன குளிர்பானத்தைத்தான் தேட வேண்டும்!’ என்ற விளம்பர வெள்ளம் நுரை ததும்பப் பாயும். இந்தியாவில் சராசரியாக ஒருவர் வருடத்துக்கு 12 லிட்டர் கோலா பானம்தான் அருந்துகிறார்களாம். ஆனால், இதுவே அமெரிக்காவில் கிட்டத்தட்ட 1,665 லிட்டர். இந்தியாவிலும் கோலா உறிஞ்சலை அந்த அளவுக்கு அதிகரிக்க வேண்டும் என்பதற்காகத்தான் சினிமா பாட்ஷா முதல் கிரிக்கெட் கேப்டன் வரை அந்த குளிர்பானங்களைக் குடிக்கச் சொல்லி வற்புறுத்திக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், அந்த பானங்கள் உண்டாக்கும் கேடுகளைப் பற்றி அவர்கள் மறந்தும் வாய் திறக்கமாட்டார்கள்.
 சமீபத்தில் 'தி சன்’ பத்திரிகை இது போன்ற குளிர்பானங்களை அருந்துவதால் உண்டாகும் கேடுகளைப் பட்டியலிட்டு இருந்தது. ஒரு பாட்டில் கோலாவில் குறைந்தபட்சம் 67 ஸ்பூன் சர்க்கரை சேர்க்கப்படுவதால் மிக விரைவிலேயே தாக்கும் சர்க்கரை நோய், புளித்த சுவை தரும் பாஸ்பேட் உப்பு உண்டாக் கும் சருமப் பாதிப்பு, எலும்புகளை அரிக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் சிக்கல், பெண்களின் மாதவிடாய் சுழற்சியைக் கன்னாபின்னா எனச் சிதைக்கும் சினைப்பை நீர்க்கட்டித் தொல்லை, கணையப் புற்று என மிரட்டலாக நீள்கிறது அந்தப் பட்டியல். இவை அனைத் துக்கும் மேலாக, இது போன்ற கோலா பானங் களை அருந்தும் நபருக்கு, பிறரைக் காட்டிலும் 61 சதவிகிதம் இதய நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாம்.
விஷயம் தெரிந்த பலர் இப்போது இந்த 'ஃபிஸ்ஸி’ பானத்தை (உடல் நலத் துக்கு உலைவைக்கும் இது போன்ற குளிர்பானங்களின் செல்லப் பெயர்!) விட்டு விலகி, பழச்சாறே ஆரோக்கியம் என்று முடிவு எடுத்துச் செயல்படுவதை உணர்ந்துகொண்ட கோலா நிறுவனங்கள், தற்போது அதற்கு ஏற்பத் தங்கள் சந்தைத் திட்டங்களையும் மாற்றிக்கொண்டு உள்ளன. இப்போது அந்த நிறுவனங்கள் பழச்சாறையே விதவிதமாக சந்தைப்படுத்தத் தொடங்கி இருக்கின்றன.
'தோட்டத்தில் இருந்து நேராக’ என்ற விளம்பரத்துடன், டெட்ராபேக்கில் 'கெமிக்கல் பிரிசர்வேட்டிவ் இல்லவே இல்லை. அப்படியே பழத்தைப் பிழிந்து உருவாக்கிய பழச்சாறுபோலவே’ என அறிவிக்கும் இந்தப் பழச் சாறு சமாசாரம் நமக்குப் பல கேள்விகளை எழுப்புகிறது. 'அவர்கள் சொல்வதுபோல பழச் சாறில் செயற்கை சமாசாரம் எதுவுமே சேர்க்கப்படவில்லையா?’ என்றால் அதன் தொழில்நுட்பம் இல்லை என்றுதான் சொல்கிறது. ஆனால், அந்தத் தொழில்நுட்பமே 'மர்மப் பின்னணி’யுடன் செயல்படும் ரகசியம்.
பழத்தைக் கழுவி(washing), சாறு பிழிந்து (extracting) அல்லது சாறு எடுத்து, ஒன்றாகக் கலந்து (blending), பழத்தின் எண்ணெய்த் தன்மையை நீக்கி (de-oiling) விரைவில் கெட்டுப்போகாமல் இருக்க ஆக்சிஜனை வெளியேற்றி (deaerating), பால் பதப்படுத்துவதுபோலப் பதப்படுத்தி (paste urize), கசப்பு நீக்கி (debittering)  அமிலத்தன்மையைக் குறைத்து அல்லது கூட்டி (acid stabilization), ஆடை அல்லது மேகம் போல் படர்வதைச் சீராக்கி (cloud stabilization), கொதிக்கவைத்து (evaporating) பிறகு குளிர்வித்து ( freezing)  திடப்படுத்துகிறார்கள். இப்படி ஒவ்வொரு செயலுக்கும் பல இயந்திரங்களில் இந்தப் பழங்களைப் படுத்தி எடுத்து, கடைசியாக பழச் சாறின் அடர்வை (concentrate)  பெறுகின்றனர். இந்தப் பழ கான்சன்ட்ரேட்டைத்தான் நம் ஊரின் பழ குளிர்பான நிறுவனங்கள் வாங்கி, நீரும் சில நேரத்தில் அமிலச் சீராக்கிகளும் சேர்த்து, டெட்ராபேக்கில் அடைத்து கடையில் விற்கிறார்கள். பிரேசில், பெரு, ஐரோப்பா எனப் பல நாடுகளில் இருந்து வரும் கான்சன்ட்ரேட் சத்துக்கள் பெரும் குளிர்க்கிடங்கு வசதிகொண்ட கப்பல்களில் இங்கே இறக்குமதி செய்யப்பட்டு, இறுதியாக இந்தியத் தண்ணி தெளிக்கப்பட்டு, 'இது இயற்கை பானம்’ என்ற அடைமொழியுடன் விற்பனைக்கு வருகிறது.
இப்படித் துவைத்து, பிழிந்து, காயப்போட்டு வரும் பழச்சாற்றினை விட, பழத்தை அப்படியே சாப்பிடுவதுதான் ஆரோக்கியமாகும்.  பழங்களில் பொதிந்திருக்கும் உயிர்ச் சத்துக்களில் பலவும் சில ஆன்ட்டி-ஆக்சிடென்ட்டுகளும் இந்த உழவாரப்பணியில் ஊக்கம் இழந்துவிடும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. எப்போதேனும் அவசரத்துக்கு அந்தப் பானங்களால் தாகம் தணித்துக்கொள்வது சரி. ஆனால், பெட்டி பெட்டியாக வாங்கி வந்து குளிர்சாதனப் பெட்டியில் புதைத்து அதை உறிஞ்சிக்கொண்டே இருப்பதால் எந்தப் பயனும் இல்லை. சீஸனுக்கு சீஸன் மாறுபடும் பழத்தின் அமிலத் தன்மையையும், இனிப்புச் சுவையையும் ஈடுகட்ட இந்த நிறுவனங்கள் பயன்படுத்தும் உத்திகள் உங்கள் உடம்புக்கு நல்லதும் இல்லை. பழத் துண்டுகளை அப்படியே சாப்பிடுவதால் அதில் உள்ள கரையும், கரையாத நார்ப் பொருட்கள் கொழுப்பைக் குறைப்பது முதல், மலச்சிக்கல் தீர்ப்பது வரையில் கொடுக்கும் பலன்கள் காம்போ ஆஃபர்! பதப்படுத்துதல், பத்திரப்படுத்துதல், பயணித்தல், பாதுகாத்தல் என வரிசையாகச் சூழலைச் சிதைக்கும் நடவடிக்களை மேற்கொண்டு பளபளப்பான பாட்டிலில் வரும் திரவத்தைக் காட்டிலும் சந்தைத் திடலில் வாசலில் கூவிக் கூவி விற்கப்படும் கொய்யாவை வாங்கிக் கழுவிச் சாப்பிடுவது சூழலுக்கும் சேர்த்து சுகம் தரும்.
மோரும், இளநீரும், பதநீரும் மேலே குறிப்பிடப்பட்ட எந்தப் பிரச்னையும் இல்லாதவை. கூடுதல் மருத்துவ மகத்துவம்கொண்டவை. சூழல் சிதைக்காதவை. பலர் நினைப்பதுபோல இளநீர் வெறும் இனிப்பும் உப்பும் தரும் உடனடி பானம் மட்டும் அல்ல; சமீபத்திய ஆராய்ச்சிகள், இளநீரில் உள்ள அற்புதமான நொதிகளின் ஆற்றலைக் கண்டு வியப்புத் தெரிவித்துள்ளன. இளநீரில் உள்ள 'சைட்டோகைனின்’ வயதாவதைத் தடுத்து, புற்று வளர்ச்சியையும் தடுக்கிறதாம். பதநீர், நரம்பை உரமாக்கும் வைட்டமின் சத்து நிரம்பிய அற்புதமான பானம்.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்... ஒன்று புரியும்... எப்போதும் பாரம்பரியம் கரிசனத்துடன்தான் பரிமாறப்படும் என்பது!
- பரிமாறுவேன்...நன்றி:ஆனந்தவிகடன்,பக்கங்கள் 36,37; வெளியீடு:27/2/13,
குருநாதர்

No comments:

Post a Comment