சுமாராக 500 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திரமாநிலத்தில் பரிபூர்ண ஆச்சார்ய ப்ரக்நதாம்பா என்ற பொற்கொல்லர் தம்பதியர்க்கு ஒரு சிறுகிராமத்திற்கு அருகில் அடர்ந்த காட்டில் மகனாய் பிறந்தார்.அவர் பிறந்த வருடம் கி.பி.1593.உலகத்தில் மகான்கள் அவதரிக்கும் போது வானில் புதிய பிரம்மாண்டமான ஜோதியுள்ள நட்சத்திரம் தோன்றும் என்பது ஐதீகம்.அதே போல,வீரபிரம்மம் அவதரித்தபோது வானில் ஒரு பிரம்மாண்டமான ஜோதி நட்சத்திரம் தோன்றியது.இவர் குழந்தையாக இருக்கும்போதே இவர் தாய் தந்தையை இழந்தார்.இவரை மானசீகமாக இறைவன் ஞானப்பால் வார்த்து வளர்த்து வந்தார்.தமது இளம்வயதில் இருந்தே தெய்வீக சக்திகளை உடையவராகத் திகழ்ந்தார்.
இவர் வாழ்ந்திருந்த காலத்தில் ஆந்திர மாநிலத்தில் நவாப்புகளின் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது.குறிப்பாக கர்நூல் நவாபு,செகந்திராபாத் நவாபு,ஹைதாராபாத் நிஜாம்,சித்தூர் ராஜா ஆகியோர் இவரை தம் அரண்மனையில் போற்றி வந்தனர்.இவரின் ஆலோசனைப்படி ஆட்சி செலுத்தி வந்தனர்.
இவர் பொற்கொல்லர் இனத்தில் பிறந்திருந்தாலும் தன் வாழ்க்கையின் இளமைப்பருவத்தை இடையனாகவே தொடங்கினார். வீரபொட்லைய்யா,பாப்பம்மாள் இவரது வளர்ப்புப் பெற்றோராக இருந்தனர்.சில வருடங்களுக்கு இவர்களின் பராமரிப்பில் இருந்துவிட்டு,பிறகு அவர்களின் ஆசியோடும்,சம்மதத்தோடும் காவி,கமண்டலம் எடுத்துக் கொண்டு தன் மேனி முழுவதும் விபூதி பூசிக் கொண்டார்;கழுத்தில் ருத்ராட்சம் அணிந்து கொண்டு ஸ்ரீசைலம்,பிரயாகை,காசி,பிரம்மகபாலம்,காஞ்சி,திருவானைக்கா,காளஸ்திரி,திருப்பதி,திரு அண்ணாமலை,ராமேஸ்வரம் ஆகிய இடங்களுக்கு விஜயம் செய்துவிட்டு இறுதியாக அரிஹரபுரம் என்னும் ஊருக்கு வந்து தங்கினார்.அங்கே சிறிது காலம் இருந்துவிட்டு,மீண்டும் அங்கிருந்து பனகானப்பள்ளிக்குச் சென்றார்.அங்கே அச்சம்மா என்ற பதிவிரதையின் வீட்டின் திண்ணையில் படுத்துறங்கினார்.மறுநாள் அச்சம்மா அவரை விசாரித்தாள்;
வீரப்பிரம்மமோ நான் ஒரு அனாதை,எல்லா ஊரும் என்னுடைய ஊரே! அனைவரும் என்னுடைய சுற்றத்தாரே!1 அனைவருக்கும் பணி செய்து கிடப்பதே எனது வேலை;திக்கற்றவர்கள் அனைவருக்கும் நானே துணை என்று கூறினார்.
இதைக்கேட்ட அந்த அச்சம்மா, ஐயா என்னிடம் பசுக்கள் இருக்கின்றன;அவைகளை தினமும் மேய்த்து வருவீர்களானால் நான் தினமும் உங்களுக்கு மூன்று வேளையும் உணவு படைக்கிறேன்.அதற்குச் சம்மதமானால் சொல்லுங்கள் என்று வீரப்பிரம்மத்திடம் கேட்டாள்.
இதற்குச் சம்மதித்த வீரப்பிரம்மம்,தினமும் காலையில் அருகில் இருக்கும் காட்டிற்கு பசுக்களை மேய்த்திட அழைத்துச் செல்வார்.காட்டின் ஒருபகுதியை அடைந்ததும் தன் கையில் உள்ள கோலினால் பூமியில் சில இடங்களில் கோடு போட்டு விட்டு, மாடுகளை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு தான் வசதியான இடத்தில் அமர்ந்து கொண்டு பனை ஓலையில் முட்களின் உதவி கொண்டு எழுதி வந்தார்;அன்று அவர் எழுதிய நூலே காலக்ஞானம் ஆகும்.மாலை வரை பசுக்கள் அவர் கோடிட்ட எல்லையைத் தாண்டாது எல்லைக்குள்ளேயே மேயும்;அந்த எல்லைக்குள்ளும் துஷ்ட ஜந்துக்களோ,வேறு மனிதர்களோ நுழைய முடிவது இல்லை;
ஒரு சமயம் ஒரு புலியானது,ஒரு பசுவை கொன்று தின்றுவிட வந்தது;அதுஅந்த எல்லைக்குள் நுழைய முடியாமல் திண்டாடுவதை வேறு பல யாதவர்கள் கண்டார்கள்;இதனை பசுவின் சொந்தக்காரியான அச்சம்மாவிடம் சொன்னார்கள்;இவர் மாடு மேய்த்து வந்த நாள் முதல் அவர் வீட்டில் பால் பெருகியும்,வியாபாரம் சிறந்த முறையிலும் நடந்து வந்தது.
மற்ற யாதவர்கள் சொன்னதைக்கேட்டு நேரில் விசாரிக்க எண்ணம் கொண்ட அச்சம்மா ஒரு நாள் காட்டிற்கு வந்தாள்.காட்டில் தன் பசுக்கள் இல்லாதிருப்பதையும் கண்டாள்.ஆச்சரியம் அடைந்தாள்.அவர் எங்கு உள்ளார் என்பதனைக் காண காட்டில் உள்ளே சென்று பார்த்தாள்.அங்கே ஒரு இடத்தில் அமர்ந்து,ஏதோ எழுதிக் கொண்டிருப்பதைக் கண்டார்.அவரிடம் ஒன்றும் பேசாமல் அந்த அச்சம்மா வீடு திரும்பினாள்.
தான் முதலில் சந்தித்த அன்று அவருடன் உரையாடிய நிகழ்ச்சியை நினைத்து அவரின் மேல் பயமும்,பக்தியும் கொண்டார்.அவர் வீடு திரும்பி வந்ததும் அவரின் கால்களில் வீழ்ந்து வணங்கி, ஐயா நீவிர் மகா புருஷர்,உங்களின் சக்தி அபாரமானது;நீங்கள் தெய்வத்திற்கு ஒப்பானவர்.உங்களின் அருமை தெரியாது நான் உங்களுக்கு மாடு மேய்க்கும் வேலை கொடுத்துவிட்டேன்.நான் தெரியாமல் செய்த பிழையை பொறுத்து என்னை மன்னிப்பீராக என்று வேண்டினாள்.
அம்மா நான் ஒரு சிறுவன்;எனக்கு ஒன்றும் தெரியாது;நான் எதற்காக உங்களை மன்னிக்க வேண்டும் என்று வீரப்பிம்மம் கூறினார்.
அதற்கு அச்சம்மா,நீவிர் மஹாபுருஷர் என்பதை உங்களின் ஒவ்வொரு செயலிலாலும் நான் அறிந்து கொண்டேன்.ஆகவே,நீவிர் என்னை உங்களுடைய சீடனாக ஏற்று எனக்கு உபதேசம் செய்ய வேண்டும் என வேண்டினாள்
.
இதைக் கேட்ட வீரப்பிரம்மம், அச்சம்மா நீ போன பிறவியில் மஹா பதிவிரதையாக இருந்தவள்.எனவே தான் நான் உனக்கு இப்பிறவியில் பணிவிடை செய்யும் இந்நிலையினை பெற்றேன். நீ முக்திகதியினை அடைய ஓம்நமசிவாய என்னும் பஞ்சாட்சரி மந்திரத்தை ஜபித்துவா.இம்மந்திரத்தை நீ உச்சரித்து வருவதனால்,நீ முக்தி அடைந்து பிறப்பு என்னும் மாயை உன்னை விட்டு நீங்கும் எனக் கூறினார்.
அப்போது அந்த அச்சம்மா,நீங்கள் காட்டின் ஒரு பகுதியில் அமர்ந்து ஏதோ எழுதிக்கொண்டிருந்தீரே.அதனை நான் அறிந்து கொள்ளலாமா? என வினவினார்.
அதற்கு அவர் கலியுகத்தில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றி நான் எழுதுவது காலக்ஞானம் என்னும் நூல். வருங்காலத்தில் வாழும் மக்கள் தெரிந்து கொள்வதற்காகத்தான் நான் அதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.அதை நீ அறிந்து கொள்ள ஆசைப்படுவதால் நான் உனக்குச் சொல்லுகிறேன்.கவனமாக நீ கேட்டுக்கொள்வாயாக என்று காலக்ஞானத்தில் தான் எழுதியதை வீரப்பிரம்மம்,அச்சம்மாவுக்குச் சொன்னார்:
சுமார் இன்றைய நாளிலிருந்து(கி.பி.1612) எண்ணூற்றி எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பூலோகத்தில் தர்மம் நசிந்து அதர்மம் தாண்டவமாடும்;
புண்ணியஸ்தலங்களில் மட்டுமே தர்மதேவதையானவள் இருப்பாள்.
அச்சமயம் நான் வீரபோக வசந்தராயன் என்ற பெயரில் பிறந்து உலக மக்களுக்கு ஞான வழியினை போதிப்பேன்.அது கலிமுற்றியதற்கான அறிகுறி நேரம் ஆகும்.
கலி முற்றும் போது உலகில் அசத்தியம் விருத்தி அடையும்.சத்தியம் முழுவதும் மறைந்துவிடும்.
மக்களிடையே பாரபட்சம் அதிகரித்து அதன்படி நடப்பார்கள்;
துரோகிகள் அதிகமாகப் பிறப்பார்கள்.
நடு இரவில் சூரியன் தோன்றுவான்.
மக்கள் பரமாத்மாக்களை (கடவுள்) நிந்திப்பார்கள்.
துஷ்ட தேவதைகள் தோன்றி கிராமங்களை அழிக்கும்;இது போன்ற விபரீதங்கள் சர்வசாதாரணமாக நடைபெறும்.
காசிக் கோவிலில் இருக்கும் நடன சிற்பங்கள் அனைத்தும் உயிர் பெற்று நடனம் செய்த வண்ணம்,மக்களுடனும் பேசும்.
உலக வாழ்க்கையில் தந்தை மகனையும்,மகன் தந்தையையும் மோசம் செய்வார்கள்.
தாய் தந்தையர்கள் மகன்களை நம்பாமல் தங்களின் மகள்களையே நம்புவார்கள்.
தெய்வ வழிபாடு செய்வோர்,தெய்வ விரதம் இருப்போர் கஷ்டமும்,தரித்திரமும் அனுபவிப்பார்கள்.
வேப்ப மரத்தின் இலை இனிப்பாக மாறும்.
பகலில் நட்சத்திரம் தோன்றும்;அதனால் மக்களுக்கு சேதாரம் உண்டாகும்.
குருவாயூரில் இருக்கும் க்ருஷ்ணன் மனிதர்களிடையே பேசுவார்.
காசியில் உள்ள கங்கை காணாமல் மறைந்து விடும்.
வேதங்களும்,புராணங்களும்,சரியான முறையில் ஆன விளக்கங்கள் கூறப்படாமல்,தவறான கேலிக்குரிய முறையில் விளக்கங்கள் சொல்லப்படும்.
தர்மசிந்தனையே தன் இதயத்தில் அற்றவர்கள்,குரோத குணம் உடையவர்கள்,அநியாயம்,அதர்மம்,அக்கிரமம் செய்வோர்களின் ஆதிக்கம் அதிகமாகும்.
மூன்று வயதுடைய சிறுவன் பெரியோர்களிடம் வாதம் செய்வான்.
பசுவின் கருவில் மனிதன் பிறப்பான்;அவன் மக்கள் இடையே ஆண்டவனைப் பற்றி விவாதம் செய்வான்.(எதிர்கால ஜெனட்டிக் என் ஜினியரிங்கில் இது நடக்குமோ?)
வயிற்றுப்பிழைப்புக்கான கலைகளையே மக்கள் கற்றுக்கொள்வார்கள்.
உயர்ந்த குடும்பத்தில் பிறந்த பெண்கள் நாட்டியம்,கச்சேரி,பாட்டு,நிழற்படம் என்ற மோகத்தால் கெட்டுப்போவார்கள்.
உலகம் எங்கும் ஆண்களின் எண்ணிக்கை குறையும்;ஏழு பெண்களுக்கு ஒரு ஆண் என்ற விகிதம் ஏற்படும்.
பதிவிரதைகள் அபூர்வமாக இருப்பார்கள்.
எங்கும்,எதிலும் பொறாமையும்,பொச்சரிப்பும் அதிகமாகும்.
வெள்ளைக் காக்கைகள் காணப்படும்;அவைகள் ஊருக்கு வெளியே பறந்து சென்று அழும்.
புண்ணிய க்ஷேத்திரம்,புண்ணிய நதி,புண்ணிய தீர்த்தம் ஆகிய இடங்களில் இருக்கும் வியாபாரிகளும்,பூஜை செய்பவர்களும்,ஊழியர்களும் ஆண்டவனுக்குப் பயந்து நடக்காமல் அந்த ஸ்ரீஸ்ரீசர்வேசரன் பெயரால் ஏமாற்றியும்,வஞ்சித்தும் பிழைப்பார்கள்;அதனால் பக்தி குறைந்து நாத்திகம் பேசுவதற்கும்,அததக் கேட்பதற்கும் ஆவல் ஏற்படும்.
இன்னும் சில விஷயங்களை வீரப்பிரம்மம் அவர்கள் எழுதியிருக்கிறார்.அதை வெளிப்படையாக எழுத முடியாது.
ஸ்ரீ வீரப்பிரம்மம் தான் 14000 ஓலைச்சுவடிகளில் நான்கு லட்சம் தத்துவங்களை எழுதியுள்ளார்.அவைகளை ஓரிடத்தில் புதைத்து வைத்துள்ளார்.அவ்விடத்தில் ஒரு புளியமரம் வளர்ந்தது.
அம்மரம் இரண்டு கிளைகளாக பிரிந்து சுமார் அறுபது அடி உயரமும்,நான்கு அடி அகலமும் வளர்ந்துள்ளது.அந்த மரம் இன்றும் அவ்விடத்தில் இருக்கிறது.அதில் காய்க்கும் காய்கள் உள்ளே கருப்பாக இருக்கும்.அதை யாரும் சாப்பிடுவது இல்லை;இம்மரத்தில் பூக்கள் ஒரே நாளில் தோன்றி ஒரே நாளில் உதிர்ந்துவிடும்.இந்த சிறப்பான நிகழ்ச்சியை இன்றும் காணலாம்.
நன்றி & மேலும் விபரமறிய:ஸ்ரீவீரப்பிரம்மம் அவர்கள் இயற்றிய கால ஞான தத்துவம்,ரூ.45/- எழுதியவர் ஜெ.ராவுஜி, கிடைக்கும் இடம்:ஸ்ரீ தேவி புத்தக நிலையம், 219B அல்லிக்குள வளாகம்(முதல் மாடி),மூர்மார்க்கெட்,சென்னை-3. போன்: +91-44-25367149.
ஓம்சிவசிவஓம்
நன்றிகள் : குருநாதர்
No comments:
Post a Comment