பொதுவாக பெண்கள் பலமானவர்கள்தான். உடலை விட மனதால் பலமானவர்கள் என்றால் அது பெண்கள்தான். அப்படியான பெண்களை, இந்த சமுதாயம் பல்வேறு விஷயங்களால் பலவீனமாக்கி வைத்திருந்தது.
பொதுவாக பெண்கள் தலை குனிந்து நிலத்தைப் பார்த்து நடக்க வேண்டும் என்று அந்த காலத்தில் இருந்தே வளரும் பெண்களுக்கு கற்பிக்கப்பட்டது. இது சமுதாயம் பெண்கள் மீது ஏற்படுத்திய பலவீனமாகும். ஆனால், அந்த பார்வையால் பல விஷயங்களை நாம் வெளிப்படுத்திவிடலாம். ஒருவர் நம்மை தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கிறார் என்பதை நமது கோபமான பார்வையாலும், வெறுப்பான பார்வையாலும் தெரிவித்துவிடலாம். ஒருவர் நம்மை தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கும் போது அதற்கு எதிரான கோபப் பார்வையை வெளிப்படுத்தலாம். இதன் மூலம் மூன்றாம் நபருக்குத் தெரியாமலேயே நாம் நமது எதிர்ப்பை உரியவருக்கு தெரிவித்து விடுவோம். இதன் மூலம் ஒரு பெண் தனது பார்வை என்ற பலவீனத்தை பலமாக்கிக் கொள்ளலாம்.
ஒரு பெண் நிமிர்ந்து பார்க்கும் போதுதான், அவளைச் சுற்றுயுள்ள சூழ்நிலை எவ்வாறு இருக்கிறது என்பதை அறிந்து அதற்கேற்ப தன்னை தயார்படுத்திக் கொள்ள முடியும்.
அதேப்போல, முந்தைய காலத்தில் பெண்களுக்கு சொத்துக்கள் என்று எதுவும் இல்லை. எனவே அவர்களின் பாதுகாப்புக் கருதி அவர்களுக்கு என சொத்தாக தங்க நகைகளை அணிவித்தனர். ஆனால் தற்போது அந்த பாதுகாப்பற்ற நிலை பெண்களுக்கு இல்லை.
எனவே எளிமையாக இருங்கள். பெண்கள் பலரும் தங்களை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புவது இயற்கை. ஆனால், அதற்காக தம்மை எப்போதும் ஒரு பார்வைக்குரிய பொருளாக மாற்றிக் கொள்ளாதீர்கள். இதனால் மற்றவர்களிடம் இருந்து நீங்கள் அந்நியப்பட நேரிடும். எனவே எப்போதும் இயல்பாகவும், எளிமையாகவும் இருக்க வேண்டும். பல நேரங்களில் அழகும், நகைகளும் தான் ஆபத்தாகி விடுகின்றன.
எதையும் மிகைப்படுத்தாதீர். அப்படி நடந்தது என்றால் அதனை இப்படி நடந்தது என்று கூறுவது பலரது இயல்பு. அவ்வாறு கூறும் போது சில விஷயங்களை மிகைப்படுத்திக் கூறுவார்கள். அது வேண்டாம். நடந்ததை நடந்தபடியேக் கூறாமல் மிகைப்படுத்திக் கூறுவதும் பொய்க்கு ஈடுதான். எனவே, பொய் கூறுவது எவ்வாறு பல சிக்கல்களுக்கு வழி ஏற்படுத்துமோ அதுபோல மிகைப்படுத்திக் கூறுவதும் பிரச்னைகளை ஏற்படுத்திவிடக் கூடும்.
தொலைத்தொடர்பு கருவியாக இருக்க வேண்டாம்.. ஒரு பெண்ணிடம் ஒரு விஷயத்தைக் கூறிவிட்டால் போதும் அது ஊருக்கே தெரிந்துவிடும் என்று சொல்வார்கள். அதுபோன்ற சூழ்நிலை தற்போது இல்லை என்றாலும், பெண்கள் பொதுவாக தேவையற்ற விஷயங்களைப் பேசவதைத் தவிர்ப்பது நலம். அது அவர்களுக்கும், அவர்களது சுற்றத்தாருக்கும் நல்ல பலனை அளிக்கும்.
சூழ்நிலைகளை சமயோஜிதமாக சமாளிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். ஓரிடத்துக்கு செல்லும் போது, அங்கிருந்து கிளம்ப தாமதமாகும் என்று தெரிந்தால், அதற்கு உரிய வழிகளை தயாராக செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அங்கு போகாமல் தவிர்ப்பதை விட, உரிய நேரத்துக்கு சென்றுவிட்டு விரைவாக அங்கிருந்து கிளம்பி வந்து விடுவது நல்லது.
முன் யோசனையுடன் எதையும் செய்தால், பல மோசமான சந்தர்ப்பங்களை தவிர்க்க முடியும்.
மோசமான நண்பர்களை விலக்கி விடுங்கள். அவர்களுடன் நெருக்கமான பழக்கத்தை குறைத்துக் கொள்வது எப்போதுமே பெண்களுக்கு நல்லது. பலரும், தீய நட்பால்தான் தவறான வழிகளுக்குச் செல்வார்கள். எனவே, தீய வழியில் சென்று கொண்டிருக்கும் நண்பர்களுடன் ஏற்படும் பழக்கம், அவர்களை திருத்த பயன்படலாம். ஆனால் நாம் மாற எந்த வகையிலும் வழி ஏற்படுத்தி விடக் கூடாது.
எல்லோரிடமும் எல்லாவற்றையும் கூறாதீர்கள். பலருக்கும் இருக்கும் மிக முக்கிய பலவீனமே ரகசியத்தை பாதுகாக்க முடியாததுதான். பொதுவாக ரகசியம் என்பது, ஒரு விஷயம் மற்றவர்களுக்குத் தெரியக் கூடாது. தெரிந்தால் தவறாகிவிடும் என்பதால் தான் அதனை ரகசியம் என்கிறோம். எனவே, ஒருவர் ஒரு விஷயத்தை ரகசியமாக வைக்க விரும்பினால், அதனை தான் ஒருவரிடமும் தெரியப்படுத்தக் கூடாது. இல்லை, எனக்கு நம்பிக்கையான தோழி ஒருவரிடம் மட்டும் இதனைக் கூறுவேன் என்று சொன்னால், அவள் அவளுக்கு நம்பிக்கையான ஒருவரிடம் இந்த விஷயத்தைக் கூறுவார். இதேப்போல ஒவ்வொருவரும் அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு இதனை கூறும் போது நமது விஷயம் அனைவரும் அறிந்த ரகசியமாகப் போய்விடும். ரகசியத்தை நம்மாலேயே பாதுகாக்க முடியாத போது மற்றவர்கள் அதனை எப்படி ரகசியமாக வைப்பர் என்று யோசித்துப் பாருங்கள்.
எனவே, நாம் எளிதாக செய்யும் சில விஷயங்கள் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று அறியாமல் இருக்கிறோம். இதனை மாற்றி நமது பலவீனங்களை பலமாக ஆக்கிக் கொண்டால், பலருக்கும் நீங்கள் வழிகாட்டியாகலாம்.
நன்றிகள் : குருநாதர்
No comments:
Post a Comment