Wednesday 14 March 2012

3000 அடி உயரத்தில் அன்னதானம் :-

மதுரை : சுயநலம் பெருகி வரும் இக் காலத்தில், பசியுடன் ஒருவர் கூட இவ்விடத்தை விட்டுச் செல்லக்கூடாது, என்ற உயர்வான சிந்தனையுடன் செயல்பட்டு வருகின்றது காளிமுத்து சுவாமிகள் அன்னதான மடம்.இந்த மடம் அமைந்திருப்பது வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்குதொடர்ச்சி மலைத் தொடரில் உள்ள சதுரகிரி மலையில் தான். மூன்றாயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள சுந்தரமகாலிங்கம் கோயில் அருகில் 1976ல் காளிமுத்து சுவாமிகள் இந்த அன்னதான மடத்தை துவக்கினார். அது முதல் இன்று வரை தினமும் 3 வேளை இங்கு அன்னதானம் நடக்கிறது, என்பது தான் ஆச்சரியமான விஷயம்.காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சுடச்சுட சோறு, சாம்பார், ரசம், கூட்டு, பாயாசம் அன்னதானம் வழங்கப்படுகிறது. சாதாரண நாட்கள், விசேஷ நாட்கள் என்ற பாகுபாடு இல்லை. இந்த மலையில் உள்ள கோயில்களுக்கு பகல், இரவு என எப்போதும் பக்தர்கள் வந்து செல்வர். பசித்து வருபவர்களுக்கு உணவு வழங்குவதை தலையாய கடமையாக கொண்டுள்ளனர். இரவு 8 மணிக்கு பின் பக்தர்கள் வந்தால் அவர்களுக்கு சாப்பாடு இல்லை எனக் கூறாமல் உடனே அடுப்பை பற்றவைத்து உப்புமா கொடுத்து அவர்களின் பசியை போக்கி விடுகின்றனர்.



இந்த அன்னதான மடத்தில் 4 சமையல் மாஸ்டர்கள், 10 சப்ளையர்கள் நிரந்தர பணியாளர்களாக உள்ளனர். தண்ணீரை தவிர அனைத்து பொருட்களையும் மலையில் கீழ் இருந்து சுமையாளர்கள் மூலம் எடுத்து வருகின்றனர். அன்னதானம் மட்டுமின்றி கோயிலுக்கு வரும் பக்தர்கள் இலவசமாக தங்க இடம், விரிப்பு மற்றும் பாய் கொடுக்கின்றனர். பக்தர்கள் விரும்பினால் மட்டும் காணிக்கை கொடுக்கலாம். "ஸ்ரீ காளிமுத்து சுவாமி சேரிட்டபிள் டிரஸ்ட்' மூலம் நடத்தப்பட்டு வரும் இந்த அன்னதான மடத்தின் தலைவர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது: பக்தர்கள் எத்தனை ஆயிரம் பேர் வந்தாலும் நாங்கள் அத்தனை பேருக்கும் உணவு கொடுப்போம். பக்தர்கள் அதிகம் வரவேண்டும் என்பதே எங்களின் ஒரே நோக்கம். ஒரே நேரத்தில் 300 பேர் அமர்ந்து சாப்பிடலாம். வரும் ஆடி அமாவாசை நாளில் லட்சம் பேருக்கு கூழ் வழங்க உள்ளோம்,'' என்றார். சதுரகிரியில் அன்னதானம் வழங்கும் பல மடங்கள் உள்ளன. இவை விசேஷ நாட்களில் மட்டுமே அன்னதானம் செய்கின்றன. உணவருந்த எங்கள் மடத்திற்கு வாருங்கள் என்ற அழைப்புகளை சதுரகிரியை தவிர வேறு எங்கும் கேட்க முடியாது, என்பது உண்மையே
நன்றிகள் குருநாதர், கூகுல்

No comments:

Post a Comment