Tuesday, 22 January 2013

ஈழத்தில் இருக்கும் சிவாலயங்களும்,அங்கே இந்து தர்மத்தின் பரிதாப நிலையும்


ஈழத்தில் இருக்கும் சிவாலயங்களும்,அங்கே இந்து தர்மத்தின் பரிதாப நிலையும்

முகவுரை: விஜயன் என்ற இளவரசன் தனது தோழர்களுடன் வட இந்தியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டு, இலங்கைத்தீவில் கரையிறங்குவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே, ஈழத் திருநாட்டில் தமிழர்கள் வாழ்ந்ததற்கு வரலாற்று மற்றும் இலக்கியச் சான்றுகள் உள்ளன.

இராமாயணக் கதையின் முக்கிய வில்லன் பாத்திரமான இராவணன் என்ற அரசன் இலங்கையில் மிகச் சிறப்புடன் அரசாட்சி செய்து வந்தான் என்று இராமாயணம் மட்டுமல்ல, மேலும் பல சமய, இலக்கிய நூல்கள் எடுத்தியம்புகின்றன.
இராவணன் மிகவும் சிறந்த சிவபக்தன் எனப் புராணங்களும், இராமாயணமும்கூட எடுத்துரைக்கின்றன. (இராவணன் செய்த ஒரே குற்றம் மாற்றான் மனைவிமேல் மையல் கொண்டதுதான். அது வேறு தனிக்கதை.)

இராவணன் காலத்திலேயே இலங்கையில் சிவ வழிபாடு இருந்திருக்கின்றது என்பதைச் சிறு பிள்ளைகூட உணர்ந்துகொள்ள முடியும்.
இதற்கு பல ஆதாரங்கள் இலங்கைத் தீவிலேயே அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ளன. இவற்றை உரிய முறையில் ஆராய்ந்து, உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்கு தமிழர்களால் இயலவில்லை.
இதற்கு முக்கிய காரணம், இலங்கைத் தீவின் ஆட்சி எல்லாளன் என்ற தமிழ் மன்னனின் கையிலிருந்து துட்டகைமுனு என்ற சிங்கள அரசனிடம் பறிபோன நாளிலிருந்து, இலங்கையில் வாழ்ந்து வரும் தமிழர்கள் பலவித உரிமைகளையும், அதிகாரங்களையும் இழந்தே வாழ்ந்து வந்திருக்கின்றார்கள்.
ஆகவே, இலங்கைத் தீவு முழுவதிலும் ஆட்சி செய்துவந்த தமிழர்கள் தமது வரலாற்று ஆதாரங்களைப் புதைபொருள் ஆராய்ச்சி மூலம் தேடி வெளிக்கொணர்வதற்குரிய வசதி வாய்ப்புகளை இழந்து வாழ்ந்தார்கள்.
போதாக்குறைக்கு, அக்காலத்திலிருந்து, புதைபொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்ட பரணவிதான முதலிய சிங்கள ஆராய்ச்சியாளர்கள், தங்கள் கைகளில் கிடைத்த தமிழர்களுக்குச் சாதகமான ஆய்வுகளை மறைப்பதிலும், சிங்களவர்களுக்குச் சாதகமானவற்றை வெளியிடுவதிலுமே முழுக் கவனம் செலுத்தினார்கள்.
ஆயினும், போர்த்துகேயர் முதலிய அந்நிய ஆட்சியாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட புதைபொருள் ஆராய்ச்சிகள் மற்றும் எமது திருக்கோயில்களை இடித்தொழிப்பதற்கு முன்னர் அவற்றின் அழகினால் கவரப்பட்டு அவர்கள் வரைந்த ஓவியங்கள் ஆகியவற்றின்மூலம் நமது பண்டைய வரலாற்றுச் சிறப்புகளில் சில துளிகளை அறியக்கூடியதாக உள்ளது.

அவைகளில் குறிப்பிடத்தக்கதோர் உண்மை, விஜயன் வருகைக்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, இலங்கைத் தீவின் கரையோரங்களில் புராண காலத்து வரலாற்றுச் சிறப்பைக்கொண்ட ஐந்து ஈஸ்வரங்கள் (ஐந்து சிவன் திருக்கோயில்கள்) மிகச் சிறந்த முறையில் நிர்மாணிக்கப்பட்டு, வழிபடப்பட்டு வந்திருக்கின்றன என்பதாகும்.
இந்த ஐந்து ஈஸ்வரங்கள் எவை என்று பார்ப்போமா?

திருக்கேதீஸ்வரம் - மன்னார்
திருக்கோணேஸ்வரம் - திருகோணமலை
முன்னேஸ்வரம் - புத்தளம்
நகுலேஸ்வரம் - யாழ்ப்பாணம்
தொண்டீஸ்வரம் என்ற தேவன்துறை - மாத்தறை

இலங்கைத் தீவின் வரைபடத்தை எடுத்து வைத்து, இத் திருக்கோயில்கள் அமைந்திருக்கும்/ அமைந்திருந்த இடங்களை அவதானிப்போமானால், இலங்கைத் தீவின் கரையோரமாக, ஐந்து முக்கிய முனைகளில் இத் திருக்கோயில்கள் அமைந்திருப்பதை / அமைந்திருந்ததை நாம் உணர முடியும்.
'அமைந்திருந்ததை' என்று ஏன் இறந்த காலத்தில் சொல்கின்றேன் என்றால், இந்த ஐந்து புராதனச் சிறப்பு வாய்ந்த ஈஸ்வரங்களுள் முக்கியமானதொன்றான 'தேனவரம் என்ற தேவன்துறை' என்று அழைக்கப்பட்ட சிவன் - விஷ்ணு திருக்கோயில் இன்று அடியோடு அழிக்கப்பட்டு விட்டது.
இத் திருக்கோயில் இருந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் அனைத்தையுமே அழித்தொழிப்பதற்கு பெரும்பான்மையினத்தோர் முழுமூச்சாக முயன்று மறைத்து விட்டார்கள்.- ஆனாலும், ஆதாரங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

ஆகவே, எமது இக் கட்டுரைத் தொடரின் நோக்கம் - இலங்கைத் தீவில் புராதன காலந்தொட்டு மிகச் சிறப்புடன் திகழ்ந்துவந்த ஐந்து ஈஸ்வரங்கள் பற்றிய உண்மைத் தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வதேயாகும்.


இவற்றில் அறுபத்தி மூன்று நாயன்மார்களில் நால்வரான சமய குரவர்களால் பாடப் பெற்ற சில தலங்களும் உள்ளன.
நன்றிகள் : குருநாதர் 

ஈமெயிலையும்,எக்கோ மெயிலையும் கண்டுபிடித்தவர் முகவூர் கிராமம்(ராஜபாளையம்) தமிழர்




ஒரு வீடியோ படமா இ-மெயிலில் அனுப்பி வை. புகைப்படங்களா? உடனே அனுப்பு இ-மெயிலில். எந்தக் கடிதங்கள் ஆனாலும் அனுப்பிய மறு நிமிடம் உங்களுக்குக் கிடைக்க வேண்டுமா? இ-மெயிலில் அனுப்பச் சொல்லுங்கள்.
 மின்சாரம் இல்லாத மனிதனுடைய வாழ்க்கையை எப்படிக் கற்பனை செய்ய முடியாதோ, அதைப் போலவே  இ - மெயில் இல்லாத மனித வாழ்க்கையை இனி நினைத்துப் பார்க்கவும் முடியாது. தனிநபர்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்றமாகட்டும், நிறுவனங்களுக்கிடையிலான  தகவல் பரிமாற்றமாக இருக்கட்டும் இப்போது இ - மெயிலே சரணம் என்ற நிலை உருவாகிவிட்டது.
 இந்த இ-மெயிலைக் கண்டுபிடித்தவர் யாராவது வெளிநாட்டுக்காரர்தான் என்று நினைத்திருப்பீர்கள். நீங்கள் நினைத்தது உண்மைதான். அவர் வெளிநாட்டில் வசிக்கும் ஒரு தமிழர். அதுவும் தனது 14 வயதில்
இ - மெயிலைக் கண்டுபிடித்துச் சாதனை செய்த சிவா அய்யாதுரை. இப்போது அவருக்கு வயது 48.
 அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்தில் உள்ள நெவார்க்  என்ற ஊரைச் சேர்ந்தவர். சென்னையிலிருந்தே அவரிடம் பேசினோம்:
 ""என்னுடைய அம்மா மீனாட்சிக்குச் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பரமன்குறிச்சி. எனது தாத்தா அரசுத்துறையில் சிவில் என்ஜினியர். அப்பாவுக்குச் சொந்த ஊர் ராஜபாளையம் அருகேயுள்ள முகவூர். அம்மா அந்தக் காலத்திலேயே எம்எஸ்ஸி படித்தவர். மாநில அளவில் தங்கப் பதக்கம் வென்றவர். அப்பா யுனிலீவர் போன்ற பெரிய நிறுவனங்களில் உற்பத்தித்துறைத் தலைவராக இருந்தவர். எனது சிறிய வயதிலேயே நாங்கள் மும்பைக்குச் சென்றுவிட்டோம்.
 நான் நன்றாகப் படிப்பதைத் தெரிந்து கொண்ட என் பெற்றோர், என்னை மேலும் நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக 1970 இல் அமெரிக்காவுக்குக் குடி பெயர்ந்தார்கள். அப்போது எனக்கு வயது ஏழு. அமெரிக்காவில் நியூஜெர்ஸி மாகாணத்தில் உள்ள பேட்டர்சன் டவுனுக்குப் போனோம். அம்மா கணிதவியல் நிபுணராகவும், ஸிஸ்டம் அனலிஸ்ட்டாகவும்  இருந்தார்.
 எனக்குச் சிறுவயதிலேயே படிப்பிலும் விளையாட்டிலும் அதிக ஆர்வம். எனது சிறுவயதில் நான் இருவேறு உலகங்களில் வாழ்ந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். வீட்டில் இந்தியனாகவும், வெளியே அமெரிக்கனாகவும் வாழ்ந்தேன்.
பள்ளியில் படிக்கும்போது கோடை விடுமுறையில் நியூயார்க் பல்கலைக் கழகத்தில் FORTRAN, COBOL, PL/1, SNOBOL, BASIC ஆகிய ஐந்து வித்தியாசமான கம்ப்யூட்டர் மொழிகளைப் படித்தேன். உலகம் முழுவதிலும் இருந்து 40 பேரைத் தேர்ந்து எடுத்து அந்தப் பல்கலைக் கழகத்தில் சொல்லித் தந்தார்கள். அதில் நானும் ஒருவன். கம்ப்யூட்டர் புரோகிராம் என்றால் என்ன என்று யாருக்கும் தெரியாத அந்த நாளில் நான் அங்கே கற்றுக் கொண்டது பெரிய விஷயமாக இருந்தது.
 இந்தப் பின்னணியில்தான், 1978 இல் நியூஜெர்ஸி மாகாணத்தில் நெவார்க்கில் உள்ள "யுனிவர்சிட்டி ஆஃப் மெடிஸின் அண்ட் டென்ஸ்ட்ரி'யில் கம்ப்யூட்டர் புரோகிராம் பணிக்காகச் சேர்ந்தேன். பின்னாளில் உலகம் முழுவதும் பயன்படுத்தப் போகும் ஒரு கம்ப்யூட்டர் மென்பொருளை நான் அங்கே வடிவமைப்பேன் என்று கனவிலும் நினைத்ததில்லை.
 அப்போது அங்கே உள்ள அலுவலகத்தில் உள்ள எல்லா தகவல் பரிமாற்றங்களும் காகிதத்தில் எழுதப்பட்டு அதன் மூலமே நடந்தன. இது மனித உழைப்பையும், நேரத்தையும் அதிகமாக எடுத்துக் கொண்டதால், இந்தத் தகவல் தொடர்பு பணியைக் கம்ப்யூட்டர்மயமாக்க முடியுமா? என்று என்னைக் கேட்டார்கள். அப்போது எனக்கு 14 வயது.
 தொடர்ந்து பலநாட்கள் தூக்கம் இல்லாமல், கடுமையாக உழைத்து தகவல் தொடர்புக்கான கம்ப்யூட்டர் புரோகிராமை உருவாக்கினேன். அதன் Code ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட வரிகளை உடையதாக இருந்தது. அதை E MAIL என்று அழைத்தேன்.
  நான் இந்த E MAIL -ஐக் கண்டுபிடிப்பதற்கு முன்பு கம்ப்யூட்டரின் மூலம் செய்திகளை அனுப்புவது இருந்ததா? என்றால் இருந்தது. ஆனால் ஒரு கம்ப்யூட்டருக்கும் இன்னொரு கம்ப்யூட்டருக்கும் இருந்த நேரடி இணைப்பின் மூலமாக இருந்தது. அப்படி அனுப்பியதும் வெறும் டெக்ஸ்ட் மெசேஜ்ஜாக மட்டுமே இருந்தது.
 நான்தான் முதன்முதலில் கம்ப்யூட்டர் மூலம் செய்திகளை அனுப்புவதற்கு புரோகிராமை உருவாக்கியவன். FORTRAN IV என்ற programming language -ஐப் பயன்படுத்தி அதை உருவாக்கினேன். இது DATABASE, LAN(LOCAL AREA NETWORK) உடன் தொடர்புடையதாக இருந்தது. இ மெயில் என்பது டெக்ஸ்ட் மெசேஜ் அல்ல. அது ஒரு ஸிஸ்டம். இ - மெயிலில் உள்ள INBOX, OUTBOX, FROM, TO, SUBJECT, CC, BCC, DATA, BODY, FORWARD, REPLY  எல்லாம் நான் உருவாக்கியவை.
 அதற்குப் பிறகு "மசாசூùஸட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி'யில் (MIT) மேற்படிப்புக்காகச் சென்றேன். மிக அதிகமான திறமையுள்ள, கண்டுபிடிப்புகள் செய்யும் மாணவர்களை அந்தக் கல்லூரி ஆண்டுதோறும் அடையாளம் காட்டிச் சிறப்பிக்கும். 1980 இல் 1040 மாணவர்கள் படித்தனர். இ - மெயிலைக் கண்டுபிடித்தற்காக, அப்படி அடையாளம் காட்டிச் சிறப்பிக்கப்பட்ட நான்கு மாணவர்களில் நானும் ஒருவன்.
எனது கண்டுபிடிப்புக்கான காப்புரிமையை வாங்க 1982 இல் அமெரிக்காவின் காப்புரிமை அலுவலகத்தை அணுகினேன். அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது எப்படி என்று ஆலோசனை கூறக் கூட அப்போது யாரும் இல்லை. எனக்கு அப்போது 19 வயது. 1982 ஆகஸ்ட் 30 இல்  இ - மெயிலைக் கண்டுபிடித்ததற்காக எனக்கு காப்புரிமை கிடைத்தது.
  ஆனால் பலர்  தாங்கள்தாம் இ - மெயில் கண்டுபிடித்ததாகக் கூறிக் கொள்கின்றனர். ஆனால் நான் இ - மெயில் கண்டுபிடிக்க செய்த முயற்சிகளைப் பார்த்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் உலக அளவில் புகழ்பெற்ற  மொழியியல், தத்துவத்துறைப் பேராசிரியர் நோம் சாவ்ஸ்கி. நான்தான் இ மெயில் கண்டுபிடித்தேன் என்று அவர் பகிரங்கமாக அறிவித்து வருகிறார். நான் கண்டுபிடிப்பதற்கு முன்பு இ மெயில் என்ற சொல் உலகத்தில் எந்த அகராதியிலும் இல்லை.
இ - மெயிலை நான் கண்டுபிடிக்கவில்லை என்று சிலர் கூறுவதற்குக் காரணம்,  1. நான் ஓர் இந்தியன்,
2. நான் புலம் பெயர்ந்தவன், 3. தமிழன், 4. கறுப்புநிறத்தவன். 5.நெவார்க் என்ற சிறிய ஊரைச் சேர்ந்தவன். இவற்றைத் தவிர வேறு எந்தக் காரணமும் எனக்குத் தெரியவில்லை. அது போகட்டும்.
அதற்குப் பின்புநான்தான் இ - மெயிலைக் கண்டுபிடித்தேன் என்பதை அங்கீகரித்தது, உலக அளவில் புகழ்பெற்ற "சுமித்சோனியன் தேசிய அமெரிக்க வரலாற்று அருங்காட்சியகம்'.
இ - மெயிலை நான் கண்டுபிடிக்கும்போது பயன்படுத்திய நாடாக்கள், பதிவுகள், காப்புரிமை மற்றும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வரிகளில் உள்ள Code கள் எல்லாவற்றையும் அங்கே பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை என்னை Dr.Email என்றே குறிப்பிடுகிறது.

1993 இல் அப்போதைய அமெரிக்க அதிபராக பில் கிளிண்டன் இருந்தபோது, வெள்ளை மாளிகைக்கு  ஒரு நாளைக்கு 5000 - 6000 இ-மெயில்கள் வந்தன. அந்த
இ - மெயில்களைத் திறந்து படித்துப் பார்த்து, அவற்றுப் பொருத்தமான நடவடிக்கைகள் எடுப்பதற்குச் சொல்லவோ, இ - மெயில்களுக்குப் பதில் அனுப்பவோ இருநூறுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் தேவைப்பட்டனர். அதனால் பில் கிளிண்டன் ஒரு போட்டியை அறிவித்தார். இந்த இ - மெயில்களைக் கையாள்வதை தானியங்கிமயமாக்குபவர்களுக்குப் பரிசு என்று அறிவித்தார். அதாவது வெள்ளை மாளிக்கைக்கு வரும் இ - மெயில்களைப்  படித்துப் பார்த்து, அந்த இ - மெயில் எதைப் பற்றியது? என்ன சொல்கிறது? குறை சொல்கிறதா? பாராட்டுகிறதா? என்ன வேண்டும் என்று அது கேட்கிறது? எதைப் பற்றிப் புகார் சொல்கிறது? இது எந்தவகையான இ - மெயில்? என்று ஒரு மனிதன் எப்படிப் படித்துப் பார்த்து முடிவெடுத்துச் செயல்படுவானோ, அதுபோல ஒரு கம்ப்யூட்டர் செயல்பட வேண்டும். அதற்கு ஏற்ற மென்பொருளை உருவாக்கித் தர வேண்டும். அதற்குப் பரிசு என்று அறிவித்தார்.
  அந்தப் போட்டியில் அமெரிக்காவில் உள்ள பல பெரிய நிறுவனங்கள் கலந்து கொண்டன. அதில் கலந்து கொண்ட தனிநபர் நான் மட்டுமே.
பில் கிளிண்டன் கேட்டுக் கொண்டபடி நான் ECHO MAIL என்ற சிஸ்டத்தை உருவாக்கிக் கொடுத்தேன். எனக்குப் பரிசு கிடைத்தது. நான் உருவாக்கிய இந்த ECHO MAIL என்ற சிஸ்டம் உலகிலேயே முதன்முதல் உருவாக்கப்பட்ட இ மெயில் மேனேஜ்மென்ட் சிஸ்டமாகும். இது எனது குறிப்பிடத்தக்க இன்னொரு கண்டுபிடிப்பு.
பின்பு 1994 இல் ECHO MAIL.Inc என்ற நிறுவனத்தை ஆரம்பித்து, அந்த சிஸ்டத்தை பல அமெரிக்க நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள உதவி வருகிறேன்.
எனக்கு கம்ப்யூட்டர்துறையில் மட்டுமல்லாமல், மருத்துவத்திலும் ஆர்வம் உண்டு.
எனது சிறிய வயதில் எனது அப்பாவின் சொந்த ஊரான இராஜபாளையத்துக்குப் பக்கத்தில் உள்ள முகவூருக்குப் போயிருக்கிறேன். எனது அப்பாவின் அம்மா சின்னத்தாய், ஒரு சித்த மருத்துவர். அவர் அங்குள்ள மக்களுக்கு பலவிதமான நோய்களுக்கு மூலிகைகளிலான மருந்துகளைக்  கொடுப்பதைப் பார்த்திருக்கிறேன். அது இயல்பாகவே எனக்கு நமது பாரம்பரிய மருத்துவத்தின் மீது ஆர்வத்தைத் தூண்டியது. தமிழகத்தில் உள்ள சித்த மருத்துவம் எப்படி அறிவியல்பூர்வமாகச் செயல்படுகிறது என்ற அடிப்படையில் ஆராய்ச்சி  செய்து வருகிறேன். இன்றைய உலக மருத்துவத்துக்கு நிகரான - அதைவிட மேம்பட்ட - பல மருத்துவ வழிமுறைகள் சித்த மருத்துவத்தில் உள்ளன. வெளி உலகுக்குத் தெரியாமல் ஓலைச் சுவடிகளில் மக்கி மறைந்து போனவை நிறைய.
நான் "மசாசூùஸட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி'யில் பாரம்பரிய மருத்துவம் மற்றும் சிஸ்டம்ஸ் டெக்னாலஜி, சிஸ்டம் விசுவலைசேஷன் வகுப்புகளை எடுக்கும் பேராசியராகவும் இருக்கிறேன்.

  ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டேனே... 2008 இல் இந்திய அரசின் அழைப்பின் பேரில் இந்தியாவுக்கு வந்து "அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சிக் கழகம்' (CSIR) என்ற அரசு நிறுவனத்தில் வேலை செய்ய வந்தேன்.  மூன்று மாதங்கள் இந்தியாவில் உள்ள 1500 க்கும் மேற்பட்ட இந்திய விஞ்ஞானிகளைச் சந்தித்து ஆய்வறிக்கை ஒன்றைத் தயார் செய்தேன். இங்கே அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு உரிய சூழ்நிலை நிலவவில்லை என்பதை அறிந்தேன். இங்குள்ள விஞ்ஞானிகள் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் திறனுடையவர்கள் என்றாலும் அதற்குத் தடையாகப் பல விஷயங்கள் உள்ளன. சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியாவில் எந்த உருப்படியான கண்டுபிடிப்புகளும் இல்லாமல் இருப்பதற்கு இந்த அமைப்பின் மேலிருந்து அமுக்குபவர்களே காரணம் என்று சொன்னேன். இது இந்தியாவில் உள்ளவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பதால் அமெரிக்காவுக்குத் திரும்பிவிட்டேன்'' என்கிறார் சிவா அய்யாதுரை.
  அவருடைய கண்டுபிடிப்பான இ - மெயிலுக்குக் காப்புரிமை பெற்று 30 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, "இன்னோவேஷன் கார்ப்ஸ்' என்ற நிறுவத்தை ஆரம்பித்து இருக்கிறார். அதன் மூலம் இவர் வளர்ந்த நெவார்க் நகரத்தில் பயிலும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினால், அவர்களுக்கு 1 லட்சம் டாலர் பரிசளிக்கப் போவதாக அறிவித்துள்ளார். இதை அமெரிக்காவின் பிற ஊர்களுக்கு மட்டுமல்ல, சென்னை வரை இதை விரிவுபடுத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு என்ன காரணம்? என்று கேட்டோம்.
  ""இந்த நெவார்க் நகரம் எனக்கு நிறையக் கொடுத்திருக்கிறது. அதனால் அதற்குத் திருப்பி எதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். எனக்கு அமைந்ததைப் போன்ற குடும்பம், எனக்கு அமைந்ததைப் போன்ற சூழல் எல்லாருக்கும் அமைந்தால், எல்லாரும் பல புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும். உருவாக்குவார்கள்.
இந்தியாவில் 25 வயதுக்குட்பட்டோர் பாதிக்கும் மேல் - 50 கோடிக்கும் மேல் உள்ளனர்.வெளிநாடுகளின் அவுட்சோர்சிங் மூலமாகக் கிடைக்கும் வேலைவாய்ப்பெல்லாம் வருங்காலத்தில் இந்த இளம் வயதினருக்குப் போதவே போதாது. புதிய புதிய கண்டுபிடிப்புகளின் மூலமாகத்தான் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். கண்டுபிடிப்புகளை பெரிய பெரிய பல்கலைக் கழகங்களின் மூலமாக, தொழில்நுட்பக் கல்லூரிகள் மூலமாகத்தான் உருவாக்க முடியும் என்ற மாயை இந்தியாவில் உள்ளது. உண்மையில் புதியனவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வமும், கண்டுபிடிப்பவர்களுக்கு உரிய வசதிகளும் செய்து தரப்பட்டாலேயே போதும். அதற்கு ஊக்கமூட்டும்விதமாகவே இந்த பரிசளிப்புத் திட்டத்தை அறிவித்திருக்கிறேன்'' என்ற அவரிடம், அவருடைய குடும்பத்தினரைப் பற்றிக் கேட்டோம்.
""அம்மா சமீபத்தில் இறந்துவிட்டார்கள். அம்மாவால்தான் நான் இந்த அளவுக்கு உயர்ந்தேன் . அம்மா இல்லாதது எனக்குப் பெரிய இழப்பு. மனவேதனை. அப்பாவுக்கு 80 வயதாகிவிட்டது. சகோதரி உமா தனபாலன் டாக்டராக இருக்கிறார்'' என்றார்.
சிவா அய்யாதுரையின் சமீபத்திய கண்டுபிடிப்பு முயற்சி: கணையத்தில் வரும் புற்றுநோய்க்கு மருந்து
நன்றிகள் : குருநாதர் 

மூலிகைகள் மொத்தமாக வாங்கிட


மூலிகைகள் மொத்தமாக வாங்கிட தென் தமிழகத்தில் மிகச் சிறந்த கடை:
இராஜேந்திரா மூலிகை மருந்துக் கடை
பஸ் நிலையம் சமீபம், இராமன்பறம்பு ரோடு,
தக்கலை, குமரி மாவட்டம்-629 175.
தொலை பேசி எண் : 04651-253163.
உலகிலேயே பக்கவிளைவுகளற்ற மருத்துவம் நமது இந்து மூலிகைகளால் மட்டுமே முடியும்.
நமது இந்துயாவில் மட்டும் 36,000 விதமான மூலிகையினங்கள் விளைகின்றன.இவற்றில் 6,000 மூலிகைகளை மட்டுமே மனிதனால் விளைவிக்க முடியும்.
நன்றிகள் : குருநாதர் 

Wednesday, 16 January 2013

God's gift to INDIA is "SWAMIJI VIVEKANANDA"




எழுதப்படாத வரலாற்றுக்கு முன்பிருந்தே இந்த பூமி முழுவதும் ஹிந்து தர்மம் பரவியிருந்தது;மஹாபாரத காலத்தில்,பஞ்சபாண்டவர்களில் ஒருவரான அர்ஜீனனின் மனைவியரில் ஒருத்தி மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்தவள் ஆவாள்.வரலாறு என்பதை மேல்நாட்டினர் எழுதத் துவங்கியதால் தான் ,நமது ஹிந்து தர்மத்தின் பெருமைகளை வேண்டுமென்றே மறைத்துவிட்டனர்;அதை உணரும் பக்குவத்தை நாம் இன்றும் அவ்வளவாகப் பெறவில்லை;இந்த அறியாமையால் தான் கொள்ளையடிப்பவர்களெல்லாம் நமது ஆட்சியாளர் நிலைக்கு உயர்ந்துவிட்டனர்;எப்போது ஹிந்து தர்மத்தின் பெருமைகளை இந்தியாவின் ஒவ்வொரு இளைஞனும்,இளம் பெண்ணும் உணர்ந்துகொள்கிறார்களோ,அப்போது முதல் இந்த தேசத்தை நேசிப்பவர்கள் மட்டுமே ஆள முடியும் என்ற சூழ்நிலை  உருவாகும்.இந்த இலக்கை அடையவே ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் செயல்பட்டுக்கொண்டு வருகிறது.சுதந்திரம் வாங்கியது முதல் ஐம்பது ஆண்டுகளுக்கு அனைத்து கடவுள்களையும் வழிபடுவதையும் நிறுத்திவிட்டு பாரதமாதாவை மட்டுமே நாம் வழிபட வேண்டும்;அப்படி வழிபட்டால் தான் நாம் இந்த உலகிற்கே வழிகாட்டும் குருவாக ஆக முடியும்.நமது சந்ததியினர் வளமான,சிறப்பான,தன்னம்பிக்கை நிறைந்தவர்களாக வாழ முடியும் என்பதை சுவாமி விவேகானந்தர் தெரிவித்திருக்கிறார்.

12.1.1863 அன்று இன்றைய கொல்கொத்தாவில் விஸ்வநாத தத்தர் என்ற வழக்கறிஞருக்கும்,புவனேஸ்வரிக்கும் காலை ஆறு மணி முப்பத்து மூன்றாம் நிமிடம்,முப்பத்து மூன்றாம் விநாடியில் தனுசு லக்னம்,கன்னி ராசி,ஹஸ்தம் நட்சத்திரம்,கிருஷ்ண சப்தமி திதியும்,பொங்கல் திருநாளும் கூடிய சுபயோக சுபதினத்தில் நரேந்திரன் சிவபெருமானின் அம்சமாகப் பிறந்தார்.காசி வீரேசுவர சிவபெருமானின் அருளால் பிறந்தமையால்,இவரது பெற்றோர்கள் இவருக்கு வீரேசுவரன் என்று பெயர் வைத்தனர்.இவரைச் செல்லமாக பிலே என்று அழைத்தனர்.


ஷண்மதக்கொள்கையே ஹிந்து தர்மத்தின் அடிப்படை! விநாயகரை வழிபடும் முறைக்கு காணபத்தியம் என்று பெயர்;குமரக்கடவுளை வழிபடும் மதத்திற்கு கவுமாரம் என்றும்,சிவனை வழிபடும் முறைக்கு சைவம் என்றும்,விஷ்ணுவை வழிபடும் மதத்தை வைஷ்ணவம் என்றும்,அம்மனை வழிபடும் முறைக்கு சாக்தம் என்றும்,சூரியனை வழிபடும் முறைக்கு சவுரம் என்றும் ஆறு மதப்பிரிவுகளாக இறைவனை அடையும் வழிமுறைகள் இருந்தன;இந்த ஆறு வழிபாட்டுமுறைகளும் சில லட்சம் ஆண்டுகளில் எழுபத்தாறு முறைகளாக பெருகிவிட்டன;இந்த எழுபத்தாறு வழிமுறைகளையும் மீண்டும் ஆறு மத வழிபாடாக மாற்றுவதற்கு சதாசிவனின் ஆணைப்படி பூமியில் பிறந்தவரே ஆதி சங்கரர் ஆவார்.தனது 33ஆம் வயதுக்குள் ஆதிசங்கரர் இந்தியாவை மூன்று முறை வலம் வந்தார்;அக்கால வழக்கப்படி,இந்த எழுபத்தாறு மத ஆச்சாரியார்களிடம் வாதம் செய்து அனைவரையும் தனது சீடர்களாக ஏற்றுக்கொண்டார்.இதன் மூலம் இந்து தர்மம் மீண்டும் புத்துயிர் பெற்றது.
அவருக்கு அடுத்தபடியாக,உலகத்திற்கு இந்து தர்மத்தின் பெருமைகளை புரிய வைப்பதற்காக சிவ கணங்களாக இருந்தவர்களை ஸ்ரீராமகிருஷணராக முதலில் அவதரிக்க வைத்தார் சதாசிவன்;அடுத்தபடியாக சுவாமி விவேகானந்தரை பிறக்க வைத்தார்;ஸ்ரீராமக்ருஷ்ணர் தமது தவ ஆற்றல் முழுவதையும் தனது சீடரான சுவாமி விவேகானந்தருக்கு வழங்கினார்.


சுவாமி விவேகானந்தர் ஆரம்ப காலத்தில் நாத்திகராக இருந்தவரே! தனது சிறுவயதிலிருந்தே மணிக்கணக்காக தியானம் செய்து வந்தவர்;சுவாமி விவேகானந்தர் கடவுளை நேரில் பார்க்க விரும்பினார்;எனவே,ஆன்மீகத்தைப் பற்றியும்,கடவுளைப் பற்றியும் தன்னிடம் யாரெல்லாம் பேசுவார்களோ,அவர்களிடம் அவர்களிடம் கடவுளை நீங்கள் நேரில் பார்த்திருக்கிறீர்களா? என்றும்,நீங்கள் பார்த்திருந்தால்,எனக்கு காட்டுவீர்களா? என்றும் கேள்வி கேட்பார்.சரியான பதில் பலரிடம் கிடைக்கவில்லை;


இந்த சூழ்நிலையில் ஒருவர் சுவாமி விவேகானந்தரிடம் , தட்சிணேஸ்வரத்தில் காளி கோவில் பூசாரியாக இருக்கும் ராமகிருஷ்ணரை சந்தித்தால்,உன் கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்று வழிகாட்டினார்.
ஸ்ரீராமகிருஷ்ணரை நேரடியாக சந்தித்த சுவாமி விவேகானந்தர்,
“நீங்கள் கடவுளை நேரில் சந்தித்திருக்கிறீர்களா?” என்று கேட்டார்.
“ஆம்.”
“அவரை எனக்கு காட்ட முடியுமா?”என்று தனது ஆவலை  வெளிப்படுத்தியிருக்கிறார்.
அதற்கு ஸ்ரீராமக்ருஷ்ணர், “காட்டுவதென்ன; உன்னிடம் பேசுவது போல,அவரிடம் பேசியிருக்கிறேன்;அதே போல நீயும் கடவுளிடம் பேச முடியும்.நீ நினைக்கும்போதெல்லாம் பேச முடியும்” என்று சொல்லியிருக்கிறார்.


இவரது உறுதியான பதிலைக் கேட்டு நரேந்திரன்(சுவாமி விவேகானந்தரின் நிஜப்பெயர்!) திகைத்துப்போனார். பிற்காலத்தில் ஸ்ரீராமகிருஷ்ணரால் நரேன் கடவுளை நேரில் சந்தித்திருக்கிறார்.பேசியிருக்கிறார்.
இந்த உலகம் முழுவதும் வாழும் அனைத்து இன மக்களுக்கும் கத்தோலிக்க கிறிஸ்தவமே கதி மோட்சம் அளிக்கும் மதம் என்பதை அறிவிக்கவே சிகாகோவில்  11.9.1893 திங்கட்கிழமையன்று சர்வமத சபையை கூட்டினர்.


ஆனால்,அவர்களின் நோக்கம் நிறைவேறவில்லை;மாறாக ஹிந்து தர்மத்தின் பெருமைகள் உலகறிய ஒரு வாய்ப்பாகிவிட்டது.ஆதி சங்கரருக்குப்பிறகு,ஹிந்து தர்மத்தின் பெருமைகளை உலகம் அறியவும்,ஹிந்து தர்மத்தின் ஆபத்துக்களை ஹிந்துக்கள் புரிந்து கொள்ளவும் சுவாமிவிவேகானந்தரை சதாசிவன் பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.


ஒரு ஹிந்து மதம் மாறிவிட்டால்,ஹிந்துக்களின் எண்ணிக்கையில் ஒன்று குறைந்துவிட்டதாக அர்த்தம் அல்ல;ஹிந்து எதிரி ஒருவன் அதிகரித்துவிட்டதாக அர்த்தம்.


சுவாமி விவேகானந்தரின் பெருமைகளைத் தமிழில் அறிய இங்கே சொடுக்கவும்;
ஆங்கிலத்தில் அறிய இங்கே சொடுக்கவும்.


ஓம்சிவசிவஓம்

குறிப்பு : இந்த பதிவினை விவேகானந்தர் பிறந்த தினத்தன்று வெளியிட இயலாமைக்காக ஆன்மீக எக்ஸ்பிரஸ் மிகவும் வருத்தப்படுகிறது.
மேலும் ஆன்மீக அன்பர்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறது.
நன்றிகள் : குருநாதர் 

Swamy Vivekananda's 150th Birthday - (12.1.1863) Part - 2





அமெரிக்காவில் சுவாமி விவேகானந்தர் பேசிய பேச்சின் முழுவிபரம்!!!

பாரதமாதாவுக்கு ஏராளமான தேசபக்த குழந்தைகளை பெற்றுத் தந்த வங்காளத்தில் பிறந்தவர் நரேந்திரன் என்ற சுவாமி விவேகானந்தர்.இவரது இரண்டே இரண்டு வார்த்தைகள்,கிறிஸ்தவ உலகத்தின் அஸ்திவாரத்தையே ஆட்டம் காண வைத்தது;அந்த இரண்டு வார்த்தைகள்: அமெரிக்க சகோதர,சகோதரிகளே!


இன்பமும் இதமும் கனிந்த உங்கள் வரவேற்புக்கு மறுமொழிகூற இப்போது உங்கள் முன் நிற்கிறேன். என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதனை வெளியிட வார்த்தைகள் இல்லை. உலகத்தின் மிகப்பழமை வாய்ந்த துறவியர் பரம்பரையின் பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். அனைத்து மதங்களின அன்னையின் பெயரால் நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும் சார்ந்த கோடிக்கணக்கான இந்துப் பெருமக்களின் பெயரால் நன்றி கூறுகிறேன்.
இந்த மேடையில் அமர்ந்துள்ள பேச்சாளர்களுள் சிலர் கீழ்த்திசை நாடுகளிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, 'வேற்று சமய நெறிகளை வெறுக்காத பண்பினைப் பல நாடுகளுக்கு எடுத்துச் சென்ற பெருமை, தொலைவிலுள்ள நாடுகளிலிருந்து வந்துள்ள இவர்களைத்தான் சாரும்' என்று உங்களுக்குக் கூறினார்கள். அவர்களுக்கும் என் நன்றி. பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பு இன்றி ஏற்றுக் கொள்ளுதல், ஆகிய இரு பண்புகளை உலகத்திற்குப் புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன். எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு, எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக் கொள்ளவும் செய்கிறோம்.
உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைப் படுத்தப்பட்டவர்களுக்கும், நாட்டை விட்டு விரட்டி அடிக்கப் பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப் படுகிறேன். ரோமானியரின் கொடுமையால், தங்கள் திருக்கோயில் சிதைந்து சீரழிந்த அதே வருடம் தென்னிந்தியாவிற்கு வந்து எங்களிடம் தஞ்சமடைந்த அந்தக் கலப்பற்ற இஸ்ரேல் மரபினர்களுள் எஞ்சி நின்றவர்களை மனமாரத் தழுவித் கொண்டவர்கள் நாங்கள் என்று கூறிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன். பெருமைமிக்க சொராஸ்டிரிய மதத்தினரில் எஞ்சியிருந்தோருக்கு அடைக்கலம் அளித்து, இன்னும் பேணிக் காத்து வருகின்ற சமயத்தைச் சார்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
என் அருமைச் சகோதரர்களே! பிள்ளைப் பருவத்திலிருந்தே நான் பாடிப் பயின்று வருவதும், கோடிக்கணக்கான மக்களால் நாள் தோறும் இன்றும் தொடர்ந்து ஓதப்பட்டு வருவதுமான பாடலின் ஒரு சில வரிகளை இங்கு, உங்கள் முன் குறிப்பிட விரும்புகிறேன்:
எங்கெங்கோ தோன்றுகின்ற ஓடையெல்லாம்
இறுதியிலே கடலில் சென்று
சங்கமாம் பான்மையினைப் போன்றுலகோர்
பின்பற்றும் தன்மை யாலே
துங்கமிகு நெறி பலவாய் நேராயும்
வளைவாயும் தோன்றி னாலும்
அங்கு அவைதாம் எம்பெரும! ஈற்றில் உனை
அடைகின்ற ஆறே யன்றோ!
இதுவரை நடந்துள்ள மாநாடுகளில், மிக மிகச் சிறந்ததாகக் கருதக் கூடிய இந்தப் பேரவை, கீதையில் உபதேசிக்கப் பட்டுள்ள பின் வரும் அற்புதமான ஓர் உண்மையை உலகத்திற்குப் பிரகடனம் செய்துள்ளது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்: 'யார் எந்த வழியாக என்னிடம் வர முயன்றாலும், நான் அவர்களை அடைகிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிகளில் என்னை அடைய முயல்கிறார்கள். அவை எல்லாம் இறுதியில் என்னையே அடைகின்றன.'
பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்றால் உண்டான மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாக இறுகப் பற்றியுள்ளன. அவை இந்த பூமியை நிரப்பியுள்ளன. உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்து, நாகரீகத்தை அழித்து, எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்துவிட்டன. அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பலமடங்கு உயர்நிலை எய்தியிருக்கும்!
அவற்றிற்கு அழிவு காலம் வந்து விட்டது. இன்று காலையில் இந்தப் பேரவையின் ஆரம்பத்தைக் குறிப்பிட முழங்கிய மணி, மத வெறிகளுக்கும், வாளாலும் பேனாவாலும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும், ஒரே குறிக்கோளை அடைய பல்வேறு வழிகளில் சென்று கொண்டிருக்கும் மக்களிடையே நிலவும் இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் சாவு மணியாகும் என்று நான் திடமாக நம்புகிறேன்.                                                                               ஓம்சிவசிவஓம்
குறிப்பு : இந்த பதிவினை விவேகானந்தர் பிறந்த தினத்தன்று வெளியிட இயலாமைக்காக ஆன்மீக எக்ஸ்பிரஸ் மிகவும் வருத்தப்படுகிறது.
மேலும் ஆன்மீக அன்பர்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறது.
நன்றிகள் : குருநாதர் 

Swamy Vivekananda's 150th Birthday - (12.1.1863) Part - 1







விவேகானந்தர் பாறை:தடைகள் தகர்ந்தன!!!

சுவாமி விவேகானந்தரின் 100 வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு 1963 இல் சென்னை ஸ்ரீராமக்ருஷ்ண மடத்தைச் சேர்ந்த சுவாமிகள் கன்னியாக்குமரியில் அமைந்திருக்கும் ஸ்ரீபாதப் பாறையில் சுவாமிஜியின் திருவுருவச் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்ய முடிவெடுத்தார்கள்.
ஆனால்,கன்னியாக்குமரியில் இருக்கும் கத்தோலிக்க பாதிரிகள்  இதை தீவிரமாக எதிர்த்தார்கள்;இதற்கு எதிராக கிறிஸ்தவ மீனவர்களை தூண்டிவிட்டார்கள்;அந்தப் பாறையை அவர்கள் செயிண்ட் சேவியர் பாறை என்று அழைத்தார்கள்.அது மட்டுமல்லாமல் அந்தப்பாறையில் ஒரு சிலுவையை நட்டார்கள்;ஆனால்,கன்னியாக்குமரி இந்து மீனவர்கள் ஒருநாள் அந்தச் சிலுவையை அகற்றிவிட்டார்கள்;இதனால்,கிறிஸ்தவ மீனவர்களுக்கும்,இந்துக்களுக்கும் தகராறு உருவானது;



 இது விஷயமாக அன்றைய ஆர்.எஸ்.எஸ்.தலைவராக இருந்த திரு.குருஜிகோல்வல்கர் அவர்களின் வழிகாட்டுதல் படி அகில பாரத அளவில் ஒரு குழு அமைக்கப்பட்டது;அதன் செயலாளராக ஆர்.எஸ்.எஸ்.ஸின் பொதுச்செயலாளராக இருந்த ஏக்நாத் ரானடே பொறுப்பேற்றார்.


அப்போது இந்தியாவின் கலாச்சார உறவு அமைச்சராக ஹீமாயூன் கபீர் இருந்தார்;தமிழக முதல்வராக பக்தவச்சலம் இருந்தார்; இந்து கிறிஸ்தவ மோதலால் இந்த இருவருமே கன்னியாக்குமரியில் இருக்கும் ஸ்ரீபாத பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.என்ன கொடுமை? இந்து நாட்டில்  ஒரு மாபெரும் இந்துத் துறவிக்கு நினைவு இடம் அமைக்க எதிர்ப்பு! அந்த சமயத்தில்,காஞ்சி சங்கராச்சாரியார் இந்த நினைவு இல்லம் அமைக்க முழுஆதரவு தெரிவித்தார்;அவரது ஆதரவு விஷயம் தெரிந்ததும்,பக்தவச்சலம் தனது எதிர்ப்பைக் கைவிட்டார்;உடனே,கன்னியாகுமரிக்குச் சென்று அந்த ஸ்ரீபாதபாறை விவேகானந்தர் பாறைதான் என்பதை உறுதிபட தெரிவித்தார்.
ஏக்நாத் ரானடே,தனது அர்ப்பணிப்பு மனப்பான்மையால் ஹீமாயூன் கபீரின் மனத்தையும் மாற்ற வைத்தார்.


தி.மு.க.தலைவர் சி.என்.அண்ணாத்துரையை சந்தித்து அவரையும் விவேகானந்தர் நினைவுச் சின்னக் கமிட்டியின் உறுப்பினராக்கினார்;நினைவுச் சின்னத்திற்கு ஆதரவு தெரிவித்து கையொப்பமிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் திமுக,காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் உறுப்பினர்களும் இருந்தனர்.



ஏக்நாத் ரானடே கன்னியாக்குமரியில் இன்று நாம் காணும் விவேகானந்தர் பாறையில் கோவிலை உருவாக்கிட தனி ஒரு மனிதனாக எப்படியெல்லாம் படாதபாடு பட்டார் என்பதை விவேகானந்த கேந்திரம் புத்தகமாக வெளியிட்டிருக்கிறது.அதை படித்துவிட்டு,ஒருமுறை கன்னியாக்குமரி விவேகானந்தர் பாறைக்குச் சென்றால்,பிரமித்துப்போவீர்கள்.


ஏக்நாத் ரானடே பட்ட கஷ்டத்துக்கு முன்னால்,நாம் நமது சொந்த வாழ்க்கையில் படும் சிரமங்கள் எல்லாம் ஒன்றுமே இல்லை என்றுதான் தோன்றும்.நம்மில் பலருக்கு அந்த புத்தகத்தை முழுமையாக வாசிக்கக் கூட முடியாது.அவ்வளவு கடினமான போராட்டங்களை சந்தித்திருக்கிறார்.பொதுச் சேவை,ஆன்மீகத்தொண்டு செய்ய விரும்புவோர் கண்டிப்பாக இந்த புத்தகத்தை ஒருமுறையாவது வாசிக்கவேண்டும்;நமது இந்து தர்மத்திற்கு எப்படியெல்லாம் ஆபத்து வந்திருக்கிறது என்பதை அறிய விரும்புவோரும் இதை நிச்சயம் வாசிக்க வேண்டும்.


அந்த புத்தகத்தின்பெயர்: விவேகானந்தர் பாறை:நினைவுச் சின்னத்தின் வரலாறு.


ஓம்சிவசிவஓம்

நன்றி:விஜயபாரதம்,பக்கம் 53,11.1.2013

குறிப்பு : இந்த பதிவினை விவேகானந்தர் பிறந்த தினத்தன்று வெளியிட இயலாமைக்காக ஆன்மீக எக்ஸ்பிரஸ் மிகவும் வருத்தப்படுகிறது.
மேலும் ஆன்மீக அன்பர்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறது.
நன்றிகள் : குருநாதர்