Monday, 10 February 2014

விளம்பரங்கள் ஏற்படுத்தும் விளைவுகள்



தான் பயன்படுத்தாத எந்த ஒரு பொருளுக்கும் இனி விளம்பரம் செய்யப் போவதில்லை என்ற அதிரடி முடிவை எடுத்திருக்கிறார் அமிதாப்பச்சன்.
ஜெய்ப்பூரில் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளச் சென்ற அமிதாப்பிடம் ஒரு மாணவி, “பெப்சியை என்னோட மிஸ் ‘மோசம்’னு சொல்றாங்க.ஆனா, நீங்க ஏன் அங்கிள் அதை புரமோட் பண்றீங்க?”எனக்கேட்டு அதிர  வைத்தாள்.
மேடையை விட்டு கீழே இறங்கியவர்,தான் பயன்படுத்தாத எந்த பொருளுக்கான விளம்பரத்திலும் இனி நடிக்கப் போவதில்லை என்று முடிவெடுத்தார்.இந்த முடிவை அகமதாபாத்தில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் வளாகத்தில் நடந்த விழாவில்,மாணவர்கள் முன்னிலையிலேயே மனம் விட்டு வருந்தினார்.

“அந்தச் சிறுமியின் கேள்விக்கு என்னால் அன்றைக்கு பதில் சொல்ல முடியவில்லை;அதனால் நான் மட்டுமல்ல;எனது மகன் அபிஷேக்,மருமகள் ஐஸ்வர்யா ஆகியோரும் இனிமேல் பொருட்களைப் பயன்படுத்திப் பார்த்தப் பிறகுதான் சம்பந்தப்பட்ட பொருட்களை விளம்பரப்படுத்துவார்கள்”என்று ஜெய்ப்பூர் நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தார்.அமிதாப் நடித்தது 2002 முதல் 2005 வரையிலான காலகட்டத்தில்.தற்போது பெப்ஸியின் பிராண்ட் அம்பாஸிடர்கள் ரன்பீர் கபூர் & தோனி.
இதே போல நமது உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் ஏராளமான மேல்நாட்டு குளிர்பானங்களும்,உணவுப்பொருட்களும் டிவி விளம்பரங்களில் அடிக்கடி காட்டப்பட்டு,நமது உழைப்பையும்,ஆரோக்கியத்தையும் சேர்த்தே கொள்ளையடித்து வருகின்றன.நாம் தான் டிவி,சினிமாவில் மிகைப்படுத்திக் காட்டப்படும் விளம்பரங்களை நம்பாமல் இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.நமது நாட்டு உணவுப் பொருட்களின் முக்கியத்துவத்தை நமது வீட்டுப் பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்;
ஆதாரம்:குமுதம் ரிப்போர்ட்டர்,பக்கம் 15,வெளியீடு 13.2.14

Tuesday, 4 February 2014

காப்புரிமை என்ற கொள்ளையிலிருந்து யோகா தப்பியது!!!

மஞ்சளுக்கு காப்புரிமை பெற வெளிநாட்டினர் முயற்சித்தனர்;தோல்வி!
கீழாநெல்லியின் மருத்துவகுணங்களை தாமே கண்டுபிடித்ததாக ஆவணங்களைத் தயார் செய்து சர்வதேசகாப்புரிமை பெற விண்ணப்பித்தார்கள்;விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்னர் ஸ்டடிஸ் என்ற அமைப்பு பிராணிக் ஹீலிங் முறையை காப்புரிமை பெற்று தமது பாக்கெட்டுக்குள் அடைக்கப்பார்த்தது.
யோகாவையும்,பிராணிக் ஹீலிங்கையும்  காப்புரிமைச்சட்டத்தின் கீழ் கொண்டு வர முடியாது என்று புதுடெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்து நமது பாரம்பரிய யோகக்கலையை காப்பாற்றிவிட்டது.
யோகா மூலம் சிகிச்சை,நல்வாழ்வு,பயிற்சிகள் அளிக்கும் நமது நாட்டின் முன்னணி ஆன்மீக அமைப்புகள் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளன.
நமது தேசத்தின் தொன்மையான ரிஷிகளின் அருளால் கிடைத்த அனைத்துமே மனித குலம் மொத்தத்திற்கும் பொதுவானவை;அவற்றை தனியார் சொந்தம் கொண்டாடுவது ஐரோப்பிய அமெரிக்க பணப்பிசாசுகளின் குறும்பு.
எனவே,நாம் நமது முன்னோர்களின் சாதனைகள் பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.
நன்றி:விஜயபாரதம்,பக்கம் 32,வெளியீடு 7.2.14
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

தவிக்குதே. . .தவிக்குதே. . .மிரள வைக்கும் தண்ணீர் அரசியல்!!!





“தண்ணீர் தனியார்மயம்” என்ற நிபந்தனையின் பெயரில் கடன்களையும் மானியங்களையும் வழங்கும் உலகவங்கி(அமெரிக்காவின் அடிமை),ஏதேனும் ஒரு கட்டத்தில் அந்த குறிப்பிட்ட நாடு சுதாரித்துக்கொண்டால்,தன் உண்மை முகத்தைக் காட்டுகிறது. ‘என்னையே எதிர்க்கிறாயா?அப்படினா,மொத்தக் கடனையும் வட்டியும் முதலுமா திருப்பிக் கொடு’ என கழுத்தில் கத்தி வைக்கிறது.இல்லை எனில்,அந்த நாட்டில் இருக்கும் அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களின் ஒட்டு மொத்த முதலீடுகளும் உடனே திரும்ப பெறப்படும் என மிரட்டுகிறது.முழுக்க முழுக்க தன்னையே சார்ந்திருக்கும் நிலைமையை உருவாக்கியப் பிறகு இப்படி கொடூரவில்லனாகத் திரும்புகின்றனர்.
ஒரு நாட்டில் செய்யப்பட்ட தன் முதலீட்டை எந்த நஷ்டமும் இல்லாமல் திரும்பப் பெற்றுக்கொள்ளும் உரிமை, ஒரு பன்னாட்டு தண்ணீர் கம்பெனிக்கு உண்டு.ஆனால்,தன் நாட்டு மக்களின் நலனுக்காக,ஒரு கம்பெனியை வெளியேறச் சொல்லும் உரிமை அரசாங்கத்துக்கு இல்லை;இதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.நம் ஊரில்,நம் வரிப்பணத்தில் சலுகைகளைப் பெற்று தொழில் நடத்தும் இந்த நிறுவனங்களை,நம் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தமுடியாது.அவர்களின் கட்டுப்பாட்டில் தான் நம் அரசாங்கம் செயல்படுகிறது.வால்மார்ட் வாலாட்டினாலும்,என்ரான் என்ன செய்தாலும் இவர்களால் எதுவும் செய்யமுடியாமல் போவதற்கான காரணம் இதுதான்.ஆனால்,ஈழத்தமிழர்களின் நலனுக்காக இரண்டு வார்த்தை கூடுதலாகப் பேசினால் மட்டும் ‘இறையாண்மை’யை இழுத்துவந்து ஒப்பாரி வைப்பார்கள்.
அதே நேரம் உலகவங்கியோ பன்னாட்டு நிறுவனங்களோ,வீழ்த்தமுடியாத விஸ்வரூபப் படைப்புகள் அல்ல;உலகம் எங்கும் எத்தனையோ நாடுகலில் மாபெரும் மக்கள் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.2000 ம் ஆண்டில் ஆந்திராவில்,தனியார்மய ஆதரவு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்திருந்தார் அப்போதைய உலகவங்கியின் தலைவர்,ஜேம்ஸ் உலஃபென்சன்.பல்லாண்டுகளாக நஷ்டத்தையே சந்தித்து வந்த ஆந்திரவிவசாயிகள்,உலக வங்கியின் தலைவரை எதிர்த்து போராட்டம் நடத்தி துரத்தியடித்தனர்.
முதலீட்டு சர்ச்சைகளுக்கான சர்வதேச மத்தியஸ்த அமைப்பு(International centre for settlement of investment disputes)என்பது உலக வங்கியின் ஓர் அங்கம்.தண்ணீர் கம்பெனிகளுடனான ஒப்பந்தத்தை ஏதேனும் ஒரு நாடு ரத்து செய்தால்,அந்த நாட்டிடம் பஞ்சாயத்து செய்து,நஷ்ட ஈடு வாங்கித்தரும் அமைப்பு இது.தண்ணீர் தனியார் மயத்தை ஏற்றுக்கொள்ளும் நாடுகள்,இதிலும் ஓர் உறுப்பினராக வேண்டும்.இந்த நிலையில் தான்,லத்தீன் அமெரிக்க நாடுகளில் இந்த தண்ணீர் கம்பெனிகள் நடத்திய பகாசுரக்கொள்ளைக்குப் பிறகு,பொலிவியா,நிகரகுவா,வெனிசூலா போன்ற நாடுகள் இந்த அமைப்பில் இருந்து வெளியேறிவிட்டன.ரோஷமுள்ள நாடு அப்படித்தான் செய்யும்.ஆனால், இந்தியா என்ன செய்கிறது?
தொடர்ந்து தன் வளங்களை எல்லாம் பெருமாள் கோவில் சுண்டல்போல,பன்னாட்டு நிறுவனங்களுக்கு அள்ளித்தருகிறது.சொந்த மக்கள் சாகும்போது,பொறுப்பற்ற முறையில் தண்ணீரை வீணடிக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலம் தனது வரலாற்றில் மிக மோசமான வறட்சியை இந்த ஆண்டு சந்தித்திருக்கிறது.தண்ணீருக்கான போராட்டங்கள் தீவிரம் அடைந்திருந்த வேளையில், “அணையில் தண்ணீர் இல்லாத போது எங்கிருந்து தண்ணீர் விட முடியும்? நாங்கள் சிறுநீர் கழிக்கவா முடியும்? எங்களுக்கு குடிப்பதற்கே தண்ணீர் கிடைக்கவில்லை.அதனால் சிறுநீர் கூட சீக்கிரத்தில் வராது” என்று திமிரின் உச்சத்தில் பேசினார் மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார்.

அவர் இப்படிப் பேசிய கடந்த ஏப்ரல் மாதத்தில் தான்,நாடுமுழுவதும் ஐ.பி.எல்.போட்டிகளின் ஆறாவது சீஸன் நடந்துகொண்டிருந்தது.அதில் மஹாராஷ்டிராவின் இருபெரும் நகரங்களான மும்பை மற்றும் புனேநகரங்களில் மொத்தம் 16 போட்டிகள் நடைபெற்றன.போட்டி நடைபெறும்போது கிரிக்கெட் மைதானங்களின் பசுமையை பாதுகாக்க,அரசு சலுகைவிலையில் தண்ணீர் வழங்கியது.ஒரு டேங்கர் லாரி தண்ணீர் ரூ.400வீதம் நாள் ஒன்றுக்கு25,000 முதல் 26,000 லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டது.அந்த சமயத்தில்,மாநிலம் முழுக்க விவசாயிகள் கருகும் தங்கள் விளைப்பயிரைப் பாதுகாக்க,ஒரு டேங்கர் லாரி  தண்ணீரை ரூ.1500 முதல் ரூ.3000 வரை விலை கொடுத்து வாங்கினர்.இந்த விவரங்கள் முன்கூட்டியே வெளியேவந்து எதிர்ப்புகள் கிளம்பியபோதும்,கிரிக்கெட் மைதானத்துக்குத் தாராளத் தண்ணீர் விநியோகம் தடைபடவில்லை;
துணிக்கடை பொம்மைக்கு ஆபாசமாக துணி அணிவிப்பதைக் கண்டித்து போராடும் அமைப்புகளுக்கு,மக்கள் தாகத்தில் சாகும்போது விளையாட்டுக்குத் தண்ணீர் விநியோகம் செய்யும் இந்த கொடுஞ்செயல்,ஆபாசமாகத் தெரியவில்லை;பெயரளவுக்கு ஓர் அறிக்கையை கொடுத்துவிட்டு ஒதுங்கிக்கொண்டனர்.கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல;ஒவ்வொரு நாளும் இந்த நாட்டின் நட்சத்திரவிடுதிகளில் வீணடிக்கப்படும் தண்ணீரைக்கொண்டு பல லட்சம் மக்களின் தாகத்தைத் தீர்க்க முடியும்.ஏழை மக்கள் சமைக்கவும் குளிக்கவுமே தண்ணீர் இல்லாமல் குடங்களைத் தூக்கிக்கொண்டு அலையும்போது,ஸ்டார் ஹோட்டல்களின் நீச்சல் குளத்தில் தண்ணீர் ததும்பி நிற்பதும்,அதில் ஆனந்தமாக நீந்தித் திளைப்பதும் ஆபாசம் இல்லையா?
சென்னை நகரத்தில் அனைத்து சொகுசு விடுதிகளையும் மொத்தமாகக் கணக்கிட்டால் 4,656 அறைகள் உள்ளன.ஒரு நட்சத்திரவிடுதியின் அறைக்கு நாள் ஒன்றுக்கு 1500 லிட்டர் முதல் 2000 லிட்டர் வரை தண்ணீர் செலவாவதாக நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.இந்த நட்சத்திர ஹோட்டல்கள் ஒரு நாளைக்கு உறிஞ்சி ஏப்பம்விடும் தண்ணீரின் அளவு 50,00,000 லிட்டர்கள்.இதை நுகரும் மக்களின் எண்ணிக்கையோ சில ஆயிரம் பேர்.இதைவிட எண்ணிக்கையில் குறைவான கோடீஸ்வரர்கள் புழங்கும் இடம் கோல்ஃப் மைதானம்.சென்னையில் மட்டும் மூன்று கோல்ஃப் மைதானங்கள் உள்ளன.இவற்றைப் பசுமையாகப் பராமரிக்க,ஒரு நாளைக்கு சராசரியாக 60,00,000 லிட்டர் தண்ணீர் செலவிடப்படுகிறது.எங்கிருந்து வரும் இந்தத் தண்ணீர்? எல்லாம் மக்களுக்கு வர வேண்டிய தண்ணீர் தான்.நான்கு குடம் தண்ணீருக்காக குழாயடியில் வரிசையில் கால் கடுக்கக் காத்திருக்கிறார்களே. . . அவர்களின் தண்ணீர்தான்.இதுபோக சென்னையிலும் இதர நகரங்களிலும் இருக்கும் ஆயிரக்கணக்கான நீச்சல் குளங்களையும்,வாரம் தோறும் அதில் மாற்றப்படும் தண்ணீரையும் கணக்கிட்டால்,ஒரு போகம் குறுவை சாகுபடிக்கு உதவலாம்.
குடிக்கும் தண்ணீரில் மட்டும் இத்தகைய நிலை இல்லை;ஊரே வறட்சியில் தத்தளிக்கும்போது இயற்கை எழில் சூழ்ந்த பிரதேசங்கள் எதையும் விட்டுவைக்காமல் அங்கு நட்சத்திர விடுதிகள் கட்டுகின்றனர்.ஆறுகள்,குளங்கள்,அருவிகள்,மலைகள் என எந்த நீர்நிலையையும் விடுவதில்லை;எங்கேனும் இயற்கை கொஞ்சம் மிச்சம் இருப்பதாகத் தெரிந்தால்,அந்தப் பிரதேசத்தைக் கைப்பற்றிவிடுகின்றனர்.பிறகு,கழிவுகளை ஆற்றில் கொட்டி,ஊரெல்லாம் ப்ளாஸ்டிக்கை வீசி,வாகனங்களால் சூழலை மாசுபடுத்தி,அதை ஒரு சாக்கடையாக மாற்றிவிட்டு,வேறு இடம் தேடி கிளம்பிவிடுகின்றனர்.
இப்படி நட்சத்திரவிடுதிகளில்,தீம் பார்க்குகளில்,நீச்சல் குளங்களில்,கோல்ஃப் மைதானங்களில்,கிரிக்கெட்மைதானங்களில் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீரை இரக்கம் இல்லாமல் வீணடிக்கும் இவர்கள்,கடைசியில் தண்ணீர் பஞ்சம் முற்றியவுடன் ‘மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்’ என்று கூசாமல் அறிவுரை சொல்கின்றனர்.உண்மையில் இந்த அறிவுரையை ஆளும் வர்க்கம் தன்னை நோக்கியே சொல்லிக் கொள்ள வேண்டும்.ஏனெனில்,ஏழைகள் ஒருபோதும் தண்ணீரை வீணடிப்பதில்லை.தண்ணீர் எடுப்பதற்கு எவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியும்.இடுப்பில் குழந்தையை வைத்துக்கொண்டு அடிகுழாயில் தண்ணீர் அடிக்கும் பெண்ணிடம் சென்று,தண்ணீர் சிக்கனம் பற்றி பேசிப்பாருங்கள். . . பதில்,வார்த்தைகளில் வராது.
நன்றி: ஜீனியர் விகடன்,பக்கங்கள்31,32,33,வெளியீடு 10.7.13

Friday, 22 November 2013

பதிணெண் சித்தர்களும் ஒருங்கிணைந்து வரும் அரிதிலும் அரிதான கழுகுமலை கிரிவலம் 16.12.2013 திங்கள்!!!

 
 
உலகத்தை ஒரு வீடாக ஆக்கினால்,அந்த வீட்டின் பூஜை அறையாக நமது பாரத நாடு இருக்கும்;பூஜையறையின் க்ஷேத்திர மையமாக நமது தமிழ்நாடு இருக்கும்;உலகின் மூத்த இனமான தமிழ் இனமே ஆன்மீகத்தின் ரிஷிமூலமாக இருந்துவருகிறது.எழுத்தில் சொல்ல முடியாத,இணையத்தில் எழுதமுடியாத ஏராளமான ரகசியங்கள் நமது முன்னோர்களிடம் இருக்கின்றன.நமது முன்னோர்களும் சரி,நாமும் சரி சித்தர்களின் வம்சாவழியினர் தான்!
சித்தர்களின் பரம்பரையில் நமக்காக வழிகாட்டி வருபவரே நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்கள்.பல ஆன்மீக குருமார்கள் தமது பிரதான சீடர்களிடம் கூட பகிர்ந்து கொள்ளத் தயங்கும் பல ஆன்மீக ரகசியங்களை நமது நலன்களுக்காக வெளிப்படையாக தெரிவிப்பவர் நமது சகஸ்ரவடுகர் ஐயா அவர்கள்!
15 நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை அதாவது 1500 ஆண்டுகளுக்கு ஒருமுறை( நூறு ஆண்டுகளுக்கு மூன்று தலைமுறை என்று கணக்கிட்டுக் கொண்டால்,1500 ஆண்டுகளை 45 தலைமுறைகளுக்கு ஒருமுறை என்று எடுத்துக் கொள்ளலாம்) முதன்மை சித்தர்கள் எனப்படும் 18 சித்தர்களும் ஒன்றாக கிரிவலம் வருகிறார்கள் என்பது பல நூற்றாண்டுகளாக பலருக்குத் தெரியாத ரகசியம்!
1500 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு மார்கழி மாதத்தில் வரும் பவுர்ணமியன்று கழுகுமலைக்கு முதன்மை சித்தர்களாகிய பதிணெண் சித்தர்களும் கிரிவலம் வருகிறார்கள்.அப்பேர்ப்பட்ட மகத்தான காலகட்டத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம் எனில் நமது பூர்வபுண்ணியம் எப்பேர்ப்பட்டதாக இருக்கும்;
2011 மார்கழி மாத கிரிவலத்தில் தமிழ்நாடு முழுவதும் 500 பக்தர்கள் கலந்து கொண்டனர்.கலந்து கொண்ட அனைவருக்கும் அவரவர் முன்னோர்களாகிய சித்தர் தரிசனம் கிரிவலம் செல்லும் போதே கிட்டியது.அவ்வாறு கிட்டியதால்,அடுத்த சில நாட்களில் அவர்களின் நீண்டகால பிரச்னைகள் தீர்ந்தன;பலருக்கு நீண்டகால அதே சமயம் நியாயமான ஏக்கங்கள் நிறைவேறின.
2012 மார்கழி மாத கழுகுமலை கிரிவலத்தில் பாரத நாட்டின் தென் மாநிலங்களில் இருந்து 700 பக்தர்கள் கலந்து கொண்டனர்.கலந்துகொண்டவர்களுக்கு கிடைத்த சித்தர்களின் ஆசியைப் பற்றி எழுத தனி வலைப்பூவே ஆரம்பிக்கலாம்;அவ்வளவு பலன்கள் கிட்டின;வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைத்தது;வேலையில் நிரந்தரம் இல்லாதவர்களுக்கு நிரந்தர வேலை கிட்டியது;தொழிலில் ஸ்திரமில்லாமல் கடனில் தவித்தவர்களுக்கு கடன்கள் தீர்ந்தன;மருத்துவ உலகிற்கே சவால் விடும் பல நோய்கள் தீர்ந்தன;30 ஆண்டுகாலமாக இருந்துவந்த பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் முடிவுக்கு வந்தன;குழந்தை வரம் வேண்டி ஏங்கி தவித்தவர்கள் பலருக்கு சித்தர்பெருமக்களின் ஆசியால் குழந்தை கிடைத்தன;திருமணத் தடையால் மனம் வெதும்பிய பெற்றோர்கள் ஆழ்ந்த நிம்மதியை அடைந்தனர்;வராக் கடன்கள் வசூல் ஆகியது;இவையெல்லாம் சராசரி மனிதர்களின் கோரிக்கைகள் நிறைவேறியதற்கான பின்னூட்டங்கள்!
ஆன்மீக வாழ்வில் முன்னேற விரும்பியவர்களுக்கு அவரவர்களின் ஆன்மீக படிநிலையைப் பொறுத்து முன்னேற்றங்கள் கிட்டின;பலர் தமதுமுன்னோர்களாகிய சித்தர்களால் ஸ்பரிச தீட்சை பெற்றனர்;சிலர் அன்று இரவு அல்லது மறு நாள் இரவு கனவில் தமது முற்பிறவி குருவாக இருந்த சித்தர்களிடம் பேசும் பாக்கியம் பெற்றனர்.இன்னும் சிலருக்கு தாம் எதற்காக இந்த மனிதப் பிறவி எடுத்திருக்கிறோம்? என்பதை உணர்ந்தார்கள்.
பல ஆண்டுகளாக தியானம் செய்து வந்தவர்களுக்கு அதற்குரிய முன்னேற்றத்தை அடைய முடியாமல் தவித்தார்கள்;அவர்களுக்கு இந்த கழுகுமலை கிரிவலம் முன்னேற்றத்தை அடைய உதவியது;
இந்த வருடம் 16.12.2013 திங்கட்கிழமையன்று 18 சித்தர்களும் ஒன்றாக கழுகுமலைக்கு வர இருக்கிறார்கள்;நம்மைச் சுற்றியிருக்கும் சூட்சுமமான உலகத்தில் இருந்து வந்து நமக்கு ஆசி தர இருக்கிறார்கள்;
நாம் 15.12.2013 அன்றே கோவில்பட்டி அல்லது சங்கரன் கோவிலுக்கு வந்து தங்கிக் கொள்வோம்;கோவில்பட்டிக்கும் சங்கரன் கோவிலுக்கும் நடுவில் அமைந்திருக்கும் கிராமமே கழுகுமலை ஆகும்.சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இங்கே ஒரு சர்வதேச பல்கலைக்கழகம் செயல்பட்டு வந்திருக்கிறது.இன்றைய பெங்களூர் போன்ற மாநகரமாக இருந்து வந்திருக்கிறது.உலகம் முழுவதும் இருந்து 10,000 மாணவர்கள்,மாணவிகள் இங்கே வந்து உயர்கல்வி கற்றுள்ளனர்;தமது ஆத்ம பலத்தை கழுகாசலமூர்த்தியால் பெற்றுள்ளனர்;சித்தர்களே ஆசிரியர்களாக இருந்துள்ளனர் என்று தெரிகிறது.காலவெள்ளத்தினால் இன்று கழுகுமலை ஒரு சிறு கிராமமாக மாறிவிட்டது.
ஐந்துகிலோ நவதானியங்கள்(எல்லாம் கலந்தது),ஒருகிலோ டயமண்டு கல்கண்டு நமது ஊரில் இருந்தே வாங்கிக் கொண்டு வருவோம்;மதியம் சரியாக 3 மணிக்கு நமது ஐயா சகஸ்ரவடுகர் அவர்கள் தலைமையில் கழுகாசலமூர்த்தி ஆலயத்தின் வாசலில் இருந்து கிரிவலம் புறப்படுவோம்;கிரிவலம் நிறைவடைந்ததும்,ஐயா அவர்களின் ஆன்மீக சொற்பொழிவில் கலந்து கொள்வோம்;பிறகு,வேறு எந்த ஊருக்கும் செல்லாமலும்,பிறரின் வீடுகளுக்குச் செல்லாமலும் நேராக நமது வீட்டிற்குத் திரும்புவோம்.
அடுத்த கழுகுமலை கிரிவலம் கி.பி.3511 ஆம் ஆண்டில் வருவதால்,(1500 ஆண்டுகளுக்குப் பிறகு) இந்த அரிய வாய்ப்பை வாசகர்கள் பயன்படுத்திக் கொள்வது நமது நிம்மதியான,வளமான வாழ்க்கைக்கு வழி!!!
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ

சொர்ணாகர்ஷண கிரிவலத்தின் (30.11.13 சனிப்பிரதோஷம்) முக்கியத்துவம்!!! (புதுப்பிக்கப்பட்ட தகவல்களுடன்)









கலியுகத்தில் நமது கர்மவினைகளை நீக்கும் சக்தி அன்னதானத்திற்கும்,மந்திரஜபத்திற்கும் மட்டுமே உண்டு என்பதை நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்கள் கண்டறிந்துள்ளார்.அன்னதானம் பற்றி அவர் மேலும் கூறியுள்ளதாவது:
நாம் வசிக்கும் ஊரில் ஒரு நாளுக்கு 1,00,000 பேர் வீதம் ஓராண்டு வரை அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ அதைவிட அதிகமான புண்ணியம் காசிக்குச் சென்று ஒரே ஒரு நாள் மூன்று வேளைகளும் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்.
காசிக்குச் சென்று ஒரு நாளுக்கு 1,00,000 பேர் வீதம் ஓராண்டு வரை அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ அதை விட அதிகமான புண்ணியம் அண்ணாமலையில் ஒரு சாதாரண நாளில் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்.
நாம் பிறந்தது முதல் நமது இறுதிநாள் வரையிலும் ஒவ்வொரு நாளும் காசியில் 1,00,00,000 பேர்களுக்கு அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ அதைவிட அதிகமான புண்ணியம்,துவாதசி திதி வரும் நாளில் அண்ணாமலையில் மூன்று வேளைகளும் ஒருவருக்கு(காலையில் ஒருவர்,மதியம் ஒருவர்,இரவில் ஒருவர்)அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்.மேலும்,மறுபிறவியில்லாத முக்தி துவாதசி அன்னதானம் செய்வதாலேயே கிடைத்துவிடும்.இந்த பேருண்மையை சிவமஹாபுராணத்தில் வித்யாசார சம்ஹிதை தெரிவிக்கிறது.
துவாதசி திதியும்,சனிப்பிரதோஷமும் சேர்ந்து வரும் நாளில் நமது ஆன்மீக குருவின் தலைமையில் அன்னதானம் செய்தால் மேலே கூறிய எண்ணிக்கையை விட ஆயிரம்கோடி மடங்கு புண்ணியம் நம்மை வந்து சேரும்.இதனால்,கடந்த ஐந்து பிறவிகளில் நாம் செய்த கர்மவினைகளின் தொகுப்பை அனுபவிக்கவே பிறந்திருக்கிறோம்;நமது அனைத்து கர்மவினைகளும் நம்மைவிட்டு முழுசாக நீங்கிட இந்த சொர்ணாகர்ஷண கிரிவலம் ஒரு காரணமாக அமைந்துவிடும்.
ஒரே ஒரு சனிப்பிரதோஷம் அன்று அண்ணாமலை கிரிவலம் சென்றால்,ஐந்து வருடங்களுக்கு(365 *5 = 1825 நாட்கள்) தினமும் கிரிவலம் சென்றதற்கான பலன்கள் கிடைக்கும்;மேலும்,சனிப்பிரதோஷ நேரத்தில் பிரதோஷ அபிஷேகத்தில் கலந்து கொண்டு,பிரதோஷ நேரம் நிறைவடைந்த பின்னர் அண்ணாமலையாரை தரிசனம் செய்தால் 1825 நாட்களுக்கு தினமும் அண்ணாமலையாரை தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பதை சித்தர்களின் தலைவரான கும்பமுனி தனது பாடல்களில் தெரிவிக்கிறார்.
சுவாதி நட்சத்திரமும்,சனிப்பிரதோஷமும் சேர்ந்து வருவது பல ஆண்டுகளுக்கு ஒருமுறையே வரும் ஓர் அற்புத நிகழ்வாகும்;அத்துடன் துவாதசி திதியும் சேர்ந்து வருவது சில நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை வரும்;அதையே சொர்ணாகர்ஷண கிரிவலநாள் என்று அண்ணாமலை ஏடு தெரிவிக்கிறது.இந்த நன்னாளில் நமது குருவுடன் கிரிவலம் செல்பவர்கள் பலத்த பூர்வபுண்ணியம் மிக்கவர்கள் என்றும்,அவர்களின் கர்மவினைகள் மழையில் கரையும் உப்பைப் போல கரைந்து காணாமல் போய்விடும் என்றும் விவரிக்கிறது.
30.11.2013 சனிக்கிழமை அன்று துவாதசி திதியும்,சனிப்பிரதோஷமும்,சுவாதி நட்சத்திரமும் சேர்ந்து இப்பேர்ப்பட்ட பெருமைகளுடன் வர இருக்கிறது.இந்த நன்னாளில்,காலை 7 மணிக்கு நமது ஆன்மீககுரு சகஸ்ரவடுகர் அவர்கள் தலைமையில் இரட்டைப்பிள்ளையார் கோவிலில் சொர்ணாகர்ஷண கிரிவலப் பயணம் புறப்படுவோம்;பிங்க் அல்லது மஞ்சள் நிற ஆடை அணிந்திருப்பது அவசியம்;ஆண்களுக்கு வேட்டியும்,துண்டும் போதுமானது; அவ்வாறு புறப்படும்போது,ஐந்து கிலோ நவதானியங்களையும்,ஒரு கிலோ டயமண்டு கல்கண்டையும்,அன்னதானத்தின் நவீன வடிவமாகிய இட்லிகள் நிரம்பிய பார்சல்களை உடன் கொண்டு புறப்படுவோம்;பெரும்பாலான சாதுக்கள் அக்னிலிங்கம் அருகிலும்,அதன் சுற்றுப் புறங்களிலும் தான் தங்குகின்றனர்;அதே சமயம்,6 வது,7 வது,8 வதாக இருக்கும் லிங்கங்களின் வாசலில் சாதுக்கள் இருப்பது அபூர்வம்.நாம் இந்த துவாதசி திதியில் ஒவ்வொரு லிங்கத்தின் வாசலிலும் ஒரு சாதுக்காவது இட்லி தானம் செய்யும் விதமாக நம்மைத் தயார் செய்து வருவோம்;
கிரிவலப் பயணத்தின் போது ஓம் அண்ணாமலையே போற்றி என்றோ அல்லது ஓம் அருணாச்சலாய நமஹ என்றோ மனதுக்குள் ஜபித்துக் கொண்டே செல்வோம்;ஏனெனில்,ஒரே ஒருமுறை ஓம் அண்ணாமலையே போற்றி என்றோ அல்லது ஓம் அருணாச்சலாய நமஹ என்றோ ஜபித்தாலே 3,00,000 தடவை ஓம் நமச்சிவாய என்று ஜபித்தமைக்கான பலன்கள் கிட்டும் என்று அண்ணாமலையாரே உபதேசித்திருக்கிறார்.எனவே,இதைத்தவிர,வேறு எந்த வீண்பேச்சும் பேசாமல் கிரிவலம் செல்வோம்;
கிரிவலப்பயணத்தின் போது இட்லி தானம் செய்வோம்;நாம் கொண்டு செல்லும் ஐந்து கிலோ நவதானியங்களையும் நமது கைகளால் கிரிவலப்பாதையின் ஓரங்களில் தூவுவோம்;ஒருபோதும் கொட்டக்கூடாது; கைகளால் தூவ வேண்டும்;தற்போது மழைக்காலமாக இருப்பதால் நம்மால் தூவப்பட்ட நவதானியங்கள் விரைவில் செடிகளாக வளரத் துவங்கும்;அவ்வாறு வளரத்துவங்கியதும்,நமது அனைத்து கிரக தோஷங்களும் நம்மை விட்டு நீங்கிவிடும்;கடந்த 30 ஆண்டுகளில் பலமுறை நிரூபிக்கப்பட்ட சக்தி வாய்ந்த அதே சமயம் எளிய பரிகாரம் இது!
நாம் கொண்டு வரும் டயமண்டு கல்கண்டுகளை கிரிவலப் பாதையில் தூவுவோம்;ஒரே ஒரு டயமண்டு கல்கண்டை ஒரே ஒரு எறும்பு எடுத்துச் சென்றாலே நாம் நூறு அந்தணர்களுக்கு தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளுக்கு அன்னதானம் செய்த பலன் நமக்குக் கிட்டும்;இதனால்,சனியின் தாக்கம் நம்மை விட்டு முழுமையாக நீங்கிவிடும் என்பது நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களின் ஆன்மீக ஆராய்ச்சி முடிவு!
மதியம் 2 மணிக்குள் கிரிவலம் நிறைவடைந்த பின்னர்,மாலையில் நடைபெற இருக்கும் சனிப்பிரதோஷ அபிஷேகத்தில் கலந்து கொள்வோம்;மாலை 6 மணிக்கு பிரதோஷம் நிறைவடந்ததும், கோவிலுக்கு வெளியே வந்து கிழக்குக் கோபுர வாசலிலோ அல்லது பேய்க் கோபுர வாசலிலோ அல்லது கோவிலின் வெளிப்புறத்தில் இருக்கும் சுற்றுச் சாலையிலோ அமர்ந்திருக்கும் சாதுக்களுக்கு இரவு நேரத்திற்குரிய உணவை வாங்கி தானம் செய்வோம்;இந்த தானமானது மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் செய்து விட வேண்டும்;தரமான உணவுப் பொருளை வாங்கித் தருவதும் அவசியம்;
இரவு பள்ளியறை பூஜை வரையிலும் அண்ணாமலையாரின் ஆலயத்தினுள் இருந்தாலே நமது நியாயமான கோரிக்கைகளும்,வேண்டுதல்களும் நிறைவேறத் துவங்கும்;பல ஆண்டுகளாக நமக்கு இருந்துவரும் கர்மவினைகளும்,சிரமங்களும் முழுமையாக விலகிவிடும்.பள்ளியறை பூஜை நிறைவடைந்ததுமே நேராக (வேறு எந்த கோவிலுக்கும் செல்லாமலும்,யார் வீட்டிற்கும் செல்லாமலும்) நமது சொந்த ஊருக்குத் திரும்புவோம்;
இதன் மூலமாக சொர்ணாகர்ஷண கிரிவலத்தின் பலன்கள் அடுத்த சில நாட்களில் நம்மை வந்து சேரும்;சிலருக்கு சில வாரங்களுக்குள் வந்து சேரும்.
ஓம் அருணாச்சலாய நமஹ!!!
ஓம் அண்ணாமலையே போற்றி!!!
பின்குறிப்பு:சொர்ணாகர்ஷண கிரிவலத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் முதல் நாள் 29.11.13 வெள்ளிக்கிழமை மாலை நேரத்திலேயே அண்ணாமலையை வந்தடைவது நன்று.அண்ணாமலை முழுவதும் தங்கும் விடுதிகளும்,மடங்களும்,உணவகத்துடன் கூடிய தங்கும் லாட்ஜ்களும் இருக்கின்றன.வெகுதொலைவில் இருப்பவர்கள் முதல் நாளே வருவதன் மூலமாக இங்கேயே நவதானியங்களையும்,டயமண்டு கல்கண்டையும் வாங்கிக் கொள்ளலாம்;பக்கத்து மாவட்டங்களில்/மாநிலங்களில் இருப்பவர்கள் சொந்த ஊரில் இவைகளை வாங்கிக் கொண்டு 30.11.13 சனிக்கிழமை அன்று காலை 7 மணிக்குள் இரட்டைப் பிள்ளையார் கோவில் வாசலுக்கு வந்துவிடவும்.குறித்த நேரத்தில் சொர்ணாகர்ஷண கிரிவலம் துவங்கிவிடும்;தவிர,குளிரும் மழையும் ஒன்றாக வரும் பருவமாக இருப்பதால் உரிய முன்னேற்பாடுகளுடன்(ஸ்வெட்டர்,மருந்துகள் போன்றவை) வருவது அவசியம்.

இட்லிதானம் செய்ய விரும்புவோர் வீட்டில் இருந்தவாறே எள்ளும் நல்லெண்ணெயும் கலந்த கலவையை ஒரு கேரிபேக்கில் கட்டிக் கொண்டுவருவது நன்று.
எத்தனை இட்லி பார்சல்கள் வாங்கி தானம் செய்ய விரும்புகிறீர்களோ அத்தனை கேரிபேக் பாக்கெட்டுக்களைத் தயார் செய்து வருவது நன்று.உதாரணமாக,நீங்கள் கிரிவலப் பயணத்தின் போது 10 பேர்களுக்கு இட்லி தானம் செய்ய விரும்புகிறீர்கள் என்று வைத்துக் கொண்டால்,பத்து கேரிபேக்குகளில் எள்ளுப்பொடியும் நல்லெண்ணெயும் கலந்து கொண்டு வரவும்.இட்லி பார்சல்களை இங்கேயே வாங்கிக் கொள்ளலாம்;வாங்கிக் கொண்டு,தானம் செய்யும் போது ஒவ்வொரு பார்சலுடனும் எள்ளும் எண்ணெயும் கலந்த கேரிபேக்கையும் மறவாமல் தர வேண்டும்;

குறிப்பு:அடுத்த பொதுநிகழ்ச்சியும்,மிகவும் அரிதான நிகழ்வான கழுகுமலை கிரிவலத்தில் 16.12.13 திங்கட்கிழமையன்று சந்திப்போம்;இது போன்ற நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொள்வதால் இந்த ஜன்மம் முழுவதும் நமது வாழ்க்கை ஸ்திரமாகவும்,அமைதியானதாகவும்,கடன்/நோய்/எதிரி/துயரங்கள்/கஷ்டங்கள்/வேதனைகள்/மன உளைச்சல்கள் இன்றியும் மாறிவிடும்.கடந்த இரண்டு ஆண்டுகளில் பல வாசக,வாசகிகளுக்குக் கிடைத்த அனுபவங்கள் இவை!
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ