Friday, 28 February 2014




ஜோதிடம் பார்க்கும் போது,ஜோதிடராகிய நாம் நம்மையறியாமலேயே சில பலன்களை சொல்வது வழக்கம்;அதாவது ஜோதிட விதிகளை மீறியோ அல்லது ஜோதிட விதிகளுக்கு எதிராகவோ பலன்களைச் சொல்வது வழக்கம்;இது ஒவ்வொரு ஜாதகம் பார்க்கும்போதும் நம்மையறியாமல் பலன் சொல்வது இயல்பு.இப்படிப்பட்ட சூழ்நிலை அடிக்கடி வந்தால் நம்மிடம் ஏதோ ஒரு தெய்வீக சக்தி/முன்னோர்களின் ஆவி/குலதெய்வ அருள்/முன்னோர்களின் அருள் நமது உள்ளுணர்வின் மூலமாக வெளிப்படத் துவங்கியிருப்பதாக அர்த்தம்.


அடிக்கடி நாம் வானில் பறப்பதாக கனவு வந்தால் இப்பிறவியில் நமக்கு ஒன்று அல்லது ஒருசில தெய்வீக சக்திகள் கிடைக்கப் போவதாக அர்த்தம்.ஆதாரம்:ஆன்மீக ஆராய்ச்சிகள்.


தினமும் ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று வந்தாலே நமது உள்ளுணர்வு சக்தி அதிகரிக்கும்;8.8.2004 இந்த தேதியன்று நான் வசிக்கும் தெருவிற்கு பக்கத்து தெருவிற்குச் சென்றேன்.அங்கே ஒரு அம்மன் கோவில் இருந்தது;அன்று காலையில் தான் எனது நண்பனின் அம்மாவை அவரது வீட்டில் சந்தித்தேன்; ‘தம்பி,நம் கணேசனுக்கு நீதான் பொண்ணு பார்க்கணும்’ என்று அவனது பிறந்த ஜாதக நகலைக் கொடுத்தார்.அந்த ஜாதக நகலுடன் நான் இந்த அம்மன் கோவிலுக்கு வந்தேன். கோவிலானது தெருவிற்குள் வீடுகளுக்கு நடுவே அமைந்திருந்தது.அப்போது சரியாக மதியம் 2.30 ! அம்மனை வழிபட்டுவிட்டு,அங்கே இருந்த சந்தனக் கிண்ணத்தில் இருந்து சந்தனத்தை எடுத்து அந்த ஜாதக நகலின் நான்கு மூலைகளிலும் தடவிவிட்டு,சில நிமிடம் உட்கார்ந்திருந்தேன்.கோவிலில் யாரும் இல்லை;


கோவிலை விட்டு வெளியே வந்தேன்.நான்கு பேர்கள் எதிர்ப்புறத்தில் இருந்து வந்தனர்;அந்த நான்குபேர்களில் ஒருவர்,என்னுடன் 12 ஆம் வகுப்பு வரை படித்தவன். அவனிடம், ‘இந்தத் தெருவில் திருமணத்தரகர் என்று யாரும் இருக்கிறாங்களா?’ என்று கேட்டேன். அவன், தன்னுடன் வந்த ஒருவரைக் காட்டி, ‘இதோ இவர் தான் கல்யாணத் தரகர்’ என்றான். எனக்கோ இன்ப அதிர்ச்சியாக இருந்தது.அவரிடம் அந்த ஜாதக நகலைக் கொடுத்து, மறுநாள் அவரை அழைத்துச் சென்று நண்பனின் அம்மாவிடம் அறிமுகப்படுத்தினேன்.


அதே சமயம்,இந்த சம்பவம் யாதார்த்தமாக நிகழ்ந்ததா? இல்லை இந்த அம்மன் கோவிலுக்குப்போய்விட்டு வந்ததால் நிகழ்ந்ததா? என்ற கேள்வி உடனே எனக்குள் எழுந்தது.இதை எப்படி கண்டுபிடிப்பது?தினமும் ஒரு கோரிக்கையோடு இந்த அம்மன் கோவிலுக்கு வந்து வழிபட்டுப் பார்ப்போம் என்ற முடிவுக்கு வந்தேன்.
அந்த நாள் தான் 8.8.2004! அன்றிலிருந்து இன்று 1.3.2014 வரை ஒரு நாள் விடாமல் இந்த அம்மன் கோவிலுக்குச் சென்று வருகிறேன்.ஆமாம்! இதனால் வாழ்க்கை விறுவிறுப்பாகவும்,நிம்மதியாகவும்,மனமகிழ்ச்சியாகவும் மாறத் துவங்கிவிட்டது.


8.9.2004க்குள்ளாகவே,அதாவது ஒரு மாதத்திற்குள்ளாகவே என்னுடன் பழகுபவர்களில் என் மீது அக்கறையாக இருப்பவர்கள் போல நடித்துக் கொண்டு எனக்கு தவறான வழிகாட்டுபவர்களின் நோக்கங்கள் எனக்குப் புரிந்தன;அதே சமயம்,என்னைத்தீட்டிக்கொண்டே இருந்தவர்கள் என் மீது எந்த அளவுக்கு உண்மையான அக்கறையும் அன்பும் கொண்டிருந்தார்கள் என்பதையும் உணர்ந்து கொண்டேன்.இதற்கு அந்த அம்மனை தினமும் வழிபட்டு வந்ததே காரணம்.


ராகு மஹாதிசை நடந்தாலோ,நமது லக்னாதிபதி ராகுவின் நட்சத்திரத்தில் நின்றாலோ,நமக்கு இப்போது நடைபெறும் திசைக்குரிய கிரகம் ராகுவின் நட்சத்திரத்தில் நின்றாலோ அல்லது ராகுவுடன் சேர்ந்து நின்றாலோ புலனாய்வுத்திறன் கைக்கூடும்; எனது புலனாய்வுத் திறனை இப்படித்தான் பக்திக்குத் திருப்பும் விதமாக எனது வாழ்க்கை அமைந்தது.ஓரிரு ஆண்டுகளில் அம்மாவைக் கேட்காமல்(பூ கட்டிப்பார்ப்பது) எந்த காரியமும் செய்வதில்லை என்ற அளவுக்கு உயர்ந்தேன்.
பல நூற்றுக்கணக்கான சம்பவங்கள் மூலமாக திரும்பத் திரும்ப அந்த அம்மனின் சக்தியை புரிந்துகொண்டதால், என்னிடம் ஜோதிடம் பார்க்க வருபவர்களிடம் அம்மனைத் தினமும் வந்து தரிசிக்கும்படி வலியுறுத்தத் துவங்கினேன். பிளாக்கரை கூகுள் வாங்கி,யார் வேண்டுமானாலும் இணையத்தில் எழுதலாம் என்ற சூழ்நிலை உருவானதும், இணையத்தில்  எப்படி இந்த அம்மனின் அருளைப் பெற்றேன்? என்பதை தொடராகவே எழுதத் துவங்கினேன்.

எனது வீட்டில் இருந்து புறப்படத் துவங்கியதும்,வீட்டு வாசலைத் தாண்டியதும் எனது மனதிற்குள் ‘வராதே’ என்ற வார்த்தை மட்டும் தோன்றும்.உடனே, நான் நினைப்பேன்; அம்மா நம்மை சோதித்துப்பார்க்கிறாள்; அவள் சொன்னாலும் அவளை தரிசிக்காமல் வேலைக்குப் போகக் கூடாது என்ற எண்ணத்துடன் பக்கத்துத் தெருவில் அமைந்திருக்கும் அந்த அம்மன் கோவிலுக்குச் செல்வேன். போய்ப் பார்த்தால், அந்தத்  தெருவில் அன்று யாராவது இறந்திருப்பார்கள்; அதனால் கோவில் பூட்டப்பட்டிருக்கும்; அப்போதும் மனதிற்குள் ஒரு பெருமையே தோன்றும்; நம்மை மகனாக நினைப்பதால் தான் அம்மா நமது நேரத்தை வீணடிக்காமல் இருக்க வராதே என்று சொல்லியிருக்கிறாள் என்று நினைத்து வாசலில் நின்றே வழிபட்டுவிட்டு வேலைக்குப் போயிருக்கிறேன்.இந்த மாதிரியான சம்பவம் பல தடவை நிகழ்ந்திருக்கிறது.

நான் வசிக்கும் தெருவிலேயே ஒரு குடும்பம் வாழ்ந்து வந்தது.அவர்களுக்கு என்னைப்போலவே இரு மகள்கள்! அந்தக் குடும்பம் ஒருமுறை ஜாதகம் பார்க்க வந்தது. அவர்களில் ஒரு மகளுக்கு ராகு மஹாதிசை அப்போது தான் துவங்கியிருந்தது.எனவே,அவர்களை இந்த அம்மன் கோவிலுக்கு தினமும் சென்று வரும்படி ஜோதிடம் சொன்னேன்.

ஒருமாதம் கழிந்தது.மீண்டும் அதே குடும்பத்தினர் அந்த அம்மன் கோவிலுக்கு ஒரே ஒரு நாள் சென்றதால் ஏற்பட்ட அதிசயத்தைச் சொன்னார்கள். முதல் நாள் குடும்பத்துடன் கோவிலுக்கு இரவு 7 மணிக்குச் சென்றிருக்கிறார்கள். சென்றுவிட்டு வீடு திரும்பியதும்,வீட்டு வாசலில் அந்த இல்லத்தரசியின் அப்பா ஒரு மஞ்சள் பையுடன் காத்துக் கொண்டிருந்தார். அவரை இவர்கள் வீட்டுக்குள் அழைத்துச் சென்றனர்.

“நீ இனிமே வட்டி கட்ட வேண்டாம்.இந்தா நீ கேட்ட ரூ.50,000/-  நீ எனக்கு வட்டி தர வேண்டாம்.இதைக்கொண்டு அந்த கடனை அடை.உன்னால் எப்போ முடியுமோ அப்போ இந்த அம்தாயிரத்தைத் தந்தால் போதும்” இந்த இல்லத்தரசிக்கு ஆனந்தக் கண்ணீர் வந்தது; ஆனால்,அந்த ஒரு நாளுக்குப்பிறகு அவர்கள் எவருமே அந்த அம்மன் கோவிலுக்குப் போகவில்லை;

ஒழுங்காக வேலைக்குப் போய்க் கொண்டிருந்த தனது கணவனை கட்டாயப்படுத்தி,பெட்டிக்கடை துவங்க வைத்திருக்கிறாள் அந்த இல்லத்தரசி.தொழிலின் நெளிவு சுழிவு தெரியாததால், ஒரே ஆண்டுக்குள் கடன் ரூ.50,000/-வந்து விட்டது. அதை அடைக்க ஒருவரிடம் ரூ.50,000/-கடன் வாங்கி,அதற்கு நான்கு ஆண்டுகளாக வட்டி கட்டிக்கொண்டிருக்கின்றனர்.வீட்டில் இருந்த இல்லத்தரசி வேலைக்குப் போக ஆரம்பி,கணவன் மீண்டும் வேலைக்குப் போக ஆரம்பித்திருக்கிறான்.கணவனின் சம்பளம் அப்படியே முழுசாக வட்டிக்குப் போக மனைவியின் சம்பளத்தில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்த கஷ்டமான சூழ்நிலையை தனது அப்பாவிடம் சொல்லியிருக்கிறாள் அந்த இல்லத்தரசி.சொல்லி அப்பாவிடமே ரூ.50,000/-கடன் கேட்டிருக்கிறாள்.இப்படி அவள் கேட்டு,கேட்டே அப்பாவுக்கும்,மகளுக்கும் ஒரு கட்டத்தில் சண்டையே வந்து இருவரும் பேசிக்கொள்வதில்லை; இந்த சூழ்நிலையில் தான் எம்மிடம் ஜோதிடம் பார்த்து ஒரே ஒரு நாள் அந்த அம்மனின் கோவிலுக்குச் சென்று, அதே அப்பா தனது இறுதி கால சேமிப்பை மகளின் கடனை அடைக்கக் கொடுத்திருக்கிறார்.

இந்த அம்மன் கோவிலில் ஒவ்வொரு மஹாசிவராத்திரியன்றும் இரவில் ஒரு பாட்டி வெறும் கையால் கொதிக்கும் நெய்யில் அப்பம் சுடுவார்.அப்படி சுட்ட அப்பத்தை அம்மனின் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து பக்தர்களுக்குப் பரிமாறுவது 400 ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் நடைமுறை.இந்த அம்மன் கோவில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டித் தெரு என்ற தெற்குப்பட்டியில் அமைந்திருக்கிறது.இந்த அம்மனின் பெயர் பத்திரகாளியம்மன்.3000 நெசவாளர் குடும்பங்களுக்கு குலதெய்வமாகத் திகழ்ந்து வருகிறது.கேட்டவர்களுக்கு கேட்டவரம் தருபவளே இந்த பத்திரகாளியம்மன்!!!

Thursday, 27 February 2014

ஹரி,ஹரன் ஒற்றுமையை பல நூற்றாண்டுகளாக விவரிக்கும் சிவராத்திரி(27.2.14வியாழன்) சிவாலய ஓட்டம்!!!

கன்னியாக்குமரி மாவட்டத்தில் உள்ள இந்துக்கள் ஆண்டுதோறும் மகாசிவராத்திரியன்று காவி அல்லது மஞ்சள் ஆடை அணிந்து,கையில் விசிறியோடு அந்த மாவட்டத்தில் உள்ள திருமலைக்கோவிலில் தொடங்கி திக்குறிச்சி,திற்பரப்பு,திருநந்திக்கரை,பொன்மனை,பன்றிப்பாகம்,கல்குளம், மேலாங்கோடு,திருவிடைக்கோடு,திருவிதாங்கோடு,திருப்பன்றிக்கோடு,    திருநட்டாலம் ஆகிய பனிரெண்டு சிவஸ்தலங்களுக்கும் முறையாக ஓடிச்சென்று சிவபிரானைத் தரிசிக்கிறார்கள்.
இங்ஙனம் பனிரெண்டு சிவாலயங்களையும் ஓடி ஓடி தரிசிப்பதே ‘சிவாலய ஓட்டம்’ எனப்படுகிறது.இந்த ஓட்டத்தின் மொத்த தூரம் 87 கி.மீ!!!
ஓடும்போது பக்தர்கள் கோவிந்தா,கோபாலா என்று விஷ்ணு நாமத்தை ஜபிக்கிறார்கள்.
ஹரியும் சிவனும் ஒண்ணு;என்ற தத்துவத்தை உணர்த்தவே இந்த சிவாலய ஓட்டம் என்பர்.ஏறத்தாழ 6000 ஆண்டுகளாக இந்த சிவாலய ஓட்டம் நிகழ்ந்து வருகிறது.
இதன் பின்னே ஒரு புராணக்கதை உண்டு.
இடுப்புக்கு மேலே மனித வடிவமும்,கீழே புலி வடிவமும் கொண்டது புருஷாமிருகம்.சிவபக்தரான வ்யாக்ரபாத மஹரிஷியே புருஷாமிருகம் ஆனதாகச் செய்தி உண்டு.புருஷாமிருகம் விஷ்ணுநாமத்தைக் கேட்க விரும்பாத ஒரு விநோத ஜந்து!!!
தர்மர் ஒருமுறை ராஜஸீய யாகம் நடத்தத் திட்டமிட்டார்.யாகத்திற்கு புருஷாமிருகத்தின் பால் தேவைப்பட்டது;பீமனை இந்தப் பாலைக் கொண்டு வருமாறு பணித்தார் தர்மர்.
பீமனிடம் பனிரெண்டு ருத்ராட்சக் கொட்டைகளைத் தந்து புருஷாமிருகம் தாக்க வந்தால் அந்த ருத்ராட்சக்கொட்டையை மிருகத்தை நோக்கி வீசி எறியும்படி கூறினார் ஸ்ரீகிருஷ்ணர்.
வீசி எறியப்படும் ருத்ராட்சம் கீழே விழும் இடத்தில் சிவலிங்கம் ஒன்று தோன்றும்;லிங்கத்தைப் பார்த்தவுடன் புருஷாமிருகம் பூஜிக்கத் தொடங்கிவிடும்.
ஸ்ரீகிருஷ்ணர் அளித்த பனிரெண்டு ருத்ராட்சங்களுடன் காட்டுக்குச் சென்றான் பீமன்.
திருமலையில் ஒரு பாறையின் மீது அமர்ந்து சிவனை நோக்கித் தவம் புரிந்துகொண்டிருந்தது புருஷாமிருகம்.
பீமன், கோவிந்தா,கோபாலா என்று உரக்கக் கூறினான்.புருஷாமிருகத்தின் தவம் கலைந்தது;அது கோபத்துடன் பீமனைத் துரத்தியது;உடனே,பீமன் ஒரு ருத்ராட்சத்தைக் கீழே போட்டான்;அடுத்த கணமே அது சிவலிங்கமாக மாறியது;
சிவலிங்கத்தைக் கண்டதும் புருஷாமிருகம் சிவபூஜையை ஆரம்பித்தது;பீமன் கோவிந்தா,கோபாலா என்று மீண்டும் கத்தினான்;புருஷாமிருகம் மீண்டும் பீமனைத் துரத்த ஆரம்பித்தது;
பீமன் மீண்டும் ஒரு ருத்ராட்சத்தைக் கீழே போட்டான்;அது உடனே சிவலிங்கமாக மாறியது;இந்த இடமே திக்குறிச்சி.
இப்படி பதினோரு இடங்களைத் தாண்டி பனிரெண்டாவது இடத்தில் (திருநட்டாலம்) ருத்ராட்சத்தை எறிய விடாமல் புருஷாமிருகம் பீமனைப் பிடித்துவிட்டது.
அந்த நேரத்தில் அங்கு தோன்றிய ஸ்ரீகிருஷ்ணர் பீமனுக்கும்,புருஷாமிருகத்துக்கும் “ஹரியும் சிவனும் ஒன்றே”என்ற தத்துவத்தை உணர்த்தினார்.
இருவரும் ஸ்ரீகிருஷ்ணரை வணங்கினர்.தர்மரின் யாகத்திற்கு பால் தந்து உதவியது புருஷாமிருகம்.
பீமன் ருத்ராட்சங்களை வீசி எறிந்த இடங்களே கன்னியாக்குமரி மாவட்டத்தில் உள்ள பனிரெண்டு சிவாலயங்கள் ஆகும்.மஹாசிவராத்திரி தினத்தன்று இந்த சிவாலய ஓட்டத்தை மேற்கொள்ளும் பக்தர்கள் மாசி மாதம் க்ருஷ்ண பட்ச ஏகாதசி அன்று மாலை அணிவார்கள்;அன்றிலிருந்து விரதம் இருப்பார்கள்;சிவராத்திரிக்கு முன் தினம் காலையில் இருந்து எதுவும் சாப்பிடாமல் காவி அல்லது மஞ்சள் உடை அணிந்து புறப்படுவார்கள்;
“கோவிந்தா,கோபாலா” என்று கோஷமிட்டபடி திருமலையில் இருந்து சிவாலய ஓட்டம் தொடங்குவார்கள்;அந்தத் தொடர் ஓட்டத்தில் பன்னிரெண்டு சிவாலயங்களையும் தரிசிப்பார்கள்;சிவாலயங்களை தரிசிக்க ஓடுபவர்கள், கோவிந்தா,கோபாலா என்று விஷ்ணுநாமம் சொல்லி ஓடுவது சிவாலய ஓட்டத்தின் சிறப்பு.இதைத் தவிர,வேறு ஒரு கதையும் உண்டு;ஒரு அரக்கனுக்குப் பயந்து சிவபெருமான் இந்த பனிரெண்டு சிவாலயங்களுக்கும் ஓடிப்போய் மறைந்து நிற்பாராம்;இது சைவத்தை அவமதிக்கும் விதமாக இடையில் உண்டான இடைச்செருகல்.
ஆதாரம்:ஹிந்து விழாக்களும்,விரதங்களும் பக்கம் 178,179,180
ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

சிவராத்திரியன்று27.2.14 வியாழக்கிழமை(தொலைதூரத் தமிழ்சகோதரர்களுக்காக)வழிபட சிறப்பான சிவலிங்கங்கள்!!!















ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லாற்கு
ஆயிரம் திருநாமம்
அயன் திருமாற்கு அரிய சிவம் உருவந்து
பூதலத்தோர் உகப்பு எய்தக் கொண்டருளி(திருவாசகம்)

வில்வத்தின் மகிமை

மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசி திதி வரும் நாளே மஹாசிவராத்திரி ஆகும்.அப்படிப்பட்ட மஹாசிவராத்திரியன்று ஒரு பக்தன் மனப்பூர்வமாக பஞ்சாட்சரமந்திரம் ஜபித்தவாறு மூன்று கிளையுள்ள வில்வ இலையை சிவலிங்கத்தின் மீது போட்டான்.சிவபெருமான் என்ற சதாசிவன் அந்த பக்தனிடம்
என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார்.

அதற்கு அந்த பக்தன், இந்திரப்பதவி வேண்டும் என்று வேண்டினான்.அதன்படி சதாசிவன் அவனுக்கு இந்திரப்பதவி அளித்தார்.


வரம் பெற்ற அந்த பக்தன் தனது வீட்டில் அமர்ந்து சிரித்தபடியே இருந்தான்.அதைக் கவனித்த அவனது மனைவி அந்த சிரிப்பிற்கு காரணம் கேட்டாள்.அதற்கு அந்த பக்தன், சதாசிவனே என்னிடம் ஏமாந்தார் என்றான்.ஒரு வில்வ இலைக்காக இந்திரப் பதவியைத் தந்தார்.நான் அவரை ஏமாற்றிவிட்டேன் என்றான்.


அதே சமயம் சதாசிவன் இருக்குமிடமான திருக்கையிலாயத்தில் சதாசிவன் சிரித்துக் கொண்டிருந்தார்;பார்வதிதேவி அதற்கு காரணம் கேட்டாள்.
அதற்கு சதாசிவன், பூவுலகில் ஒருவன் சிவராத்திரியன்று என்னை வில்வ இலையால் அர்ச்சனை செய்து வழிபட்டான்.அவனுக்கு சிவலோகம் தர வேண்டும் என்று விரும்பி,அவனிடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்டேன்.

அதற்கு அவன் இந்திரப்பதவியைக் கேட்டான்.எக்காலமும் அழியாத சிவலோகப்பதவியைப்பெறுவதற்குப் பதிலாக,அழியும் இந்திரப் பதவியைக் கேட்டான்;அவன் ஏமாந்துவிட்டான் என்று சொல்லி சிரித்தார்.
வில்வ இலையால் இறைவனைப்பூசித்தால் சிவலோகம் பெறலாம்.பெறமுடியாதது என்று எதுவுமில்லை;

மேலும் சிவராத்திரியன்று வில்வ இலையைக் கொண்டு இறைவனைப் பூசித்தால் இறையருளைப் பெறலாம்.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

Monday, 10 February 2014

விளம்பரங்கள் ஏற்படுத்தும் விளைவுகள்



தான் பயன்படுத்தாத எந்த ஒரு பொருளுக்கும் இனி விளம்பரம் செய்யப் போவதில்லை என்ற அதிரடி முடிவை எடுத்திருக்கிறார் அமிதாப்பச்சன்.
ஜெய்ப்பூரில் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளச் சென்ற அமிதாப்பிடம் ஒரு மாணவி, “பெப்சியை என்னோட மிஸ் ‘மோசம்’னு சொல்றாங்க.ஆனா, நீங்க ஏன் அங்கிள் அதை புரமோட் பண்றீங்க?”எனக்கேட்டு அதிர  வைத்தாள்.
மேடையை விட்டு கீழே இறங்கியவர்,தான் பயன்படுத்தாத எந்த பொருளுக்கான விளம்பரத்திலும் இனி நடிக்கப் போவதில்லை என்று முடிவெடுத்தார்.இந்த முடிவை அகமதாபாத்தில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் வளாகத்தில் நடந்த விழாவில்,மாணவர்கள் முன்னிலையிலேயே மனம் விட்டு வருந்தினார்.

“அந்தச் சிறுமியின் கேள்விக்கு என்னால் அன்றைக்கு பதில் சொல்ல முடியவில்லை;அதனால் நான் மட்டுமல்ல;எனது மகன் அபிஷேக்,மருமகள் ஐஸ்வர்யா ஆகியோரும் இனிமேல் பொருட்களைப் பயன்படுத்திப் பார்த்தப் பிறகுதான் சம்பந்தப்பட்ட பொருட்களை விளம்பரப்படுத்துவார்கள்”என்று ஜெய்ப்பூர் நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தார்.அமிதாப் நடித்தது 2002 முதல் 2005 வரையிலான காலகட்டத்தில்.தற்போது பெப்ஸியின் பிராண்ட் அம்பாஸிடர்கள் ரன்பீர் கபூர் & தோனி.
இதே போல நமது உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் ஏராளமான மேல்நாட்டு குளிர்பானங்களும்,உணவுப்பொருட்களும் டிவி விளம்பரங்களில் அடிக்கடி காட்டப்பட்டு,நமது உழைப்பையும்,ஆரோக்கியத்தையும் சேர்த்தே கொள்ளையடித்து வருகின்றன.நாம் தான் டிவி,சினிமாவில் மிகைப்படுத்திக் காட்டப்படும் விளம்பரங்களை நம்பாமல் இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.நமது நாட்டு உணவுப் பொருட்களின் முக்கியத்துவத்தை நமது வீட்டுப் பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்;
ஆதாரம்:குமுதம் ரிப்போர்ட்டர்,பக்கம் 15,வெளியீடு 13.2.14

Tuesday, 4 February 2014

காப்புரிமை என்ற கொள்ளையிலிருந்து யோகா தப்பியது!!!

மஞ்சளுக்கு காப்புரிமை பெற வெளிநாட்டினர் முயற்சித்தனர்;தோல்வி!
கீழாநெல்லியின் மருத்துவகுணங்களை தாமே கண்டுபிடித்ததாக ஆவணங்களைத் தயார் செய்து சர்வதேசகாப்புரிமை பெற விண்ணப்பித்தார்கள்;விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்னர் ஸ்டடிஸ் என்ற அமைப்பு பிராணிக் ஹீலிங் முறையை காப்புரிமை பெற்று தமது பாக்கெட்டுக்குள் அடைக்கப்பார்த்தது.
யோகாவையும்,பிராணிக் ஹீலிங்கையும்  காப்புரிமைச்சட்டத்தின் கீழ் கொண்டு வர முடியாது என்று புதுடெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்து நமது பாரம்பரிய யோகக்கலையை காப்பாற்றிவிட்டது.
யோகா மூலம் சிகிச்சை,நல்வாழ்வு,பயிற்சிகள் அளிக்கும் நமது நாட்டின் முன்னணி ஆன்மீக அமைப்புகள் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளன.
நமது தேசத்தின் தொன்மையான ரிஷிகளின் அருளால் கிடைத்த அனைத்துமே மனித குலம் மொத்தத்திற்கும் பொதுவானவை;அவற்றை தனியார் சொந்தம் கொண்டாடுவது ஐரோப்பிய அமெரிக்க பணப்பிசாசுகளின் குறும்பு.
எனவே,நாம் நமது முன்னோர்களின் சாதனைகள் பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.
நன்றி:விஜயபாரதம்,பக்கம் 32,வெளியீடு 7.2.14
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

தவிக்குதே. . .தவிக்குதே. . .மிரள வைக்கும் தண்ணீர் அரசியல்!!!





“தண்ணீர் தனியார்மயம்” என்ற நிபந்தனையின் பெயரில் கடன்களையும் மானியங்களையும் வழங்கும் உலகவங்கி(அமெரிக்காவின் அடிமை),ஏதேனும் ஒரு கட்டத்தில் அந்த குறிப்பிட்ட நாடு சுதாரித்துக்கொண்டால்,தன் உண்மை முகத்தைக் காட்டுகிறது. ‘என்னையே எதிர்க்கிறாயா?அப்படினா,மொத்தக் கடனையும் வட்டியும் முதலுமா திருப்பிக் கொடு’ என கழுத்தில் கத்தி வைக்கிறது.இல்லை எனில்,அந்த நாட்டில் இருக்கும் அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களின் ஒட்டு மொத்த முதலீடுகளும் உடனே திரும்ப பெறப்படும் என மிரட்டுகிறது.முழுக்க முழுக்க தன்னையே சார்ந்திருக்கும் நிலைமையை உருவாக்கியப் பிறகு இப்படி கொடூரவில்லனாகத் திரும்புகின்றனர்.
ஒரு நாட்டில் செய்யப்பட்ட தன் முதலீட்டை எந்த நஷ்டமும் இல்லாமல் திரும்பப் பெற்றுக்கொள்ளும் உரிமை, ஒரு பன்னாட்டு தண்ணீர் கம்பெனிக்கு உண்டு.ஆனால்,தன் நாட்டு மக்களின் நலனுக்காக,ஒரு கம்பெனியை வெளியேறச் சொல்லும் உரிமை அரசாங்கத்துக்கு இல்லை;இதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.நம் ஊரில்,நம் வரிப்பணத்தில் சலுகைகளைப் பெற்று தொழில் நடத்தும் இந்த நிறுவனங்களை,நம் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தமுடியாது.அவர்களின் கட்டுப்பாட்டில் தான் நம் அரசாங்கம் செயல்படுகிறது.வால்மார்ட் வாலாட்டினாலும்,என்ரான் என்ன செய்தாலும் இவர்களால் எதுவும் செய்யமுடியாமல் போவதற்கான காரணம் இதுதான்.ஆனால்,ஈழத்தமிழர்களின் நலனுக்காக இரண்டு வார்த்தை கூடுதலாகப் பேசினால் மட்டும் ‘இறையாண்மை’யை இழுத்துவந்து ஒப்பாரி வைப்பார்கள்.
அதே நேரம் உலகவங்கியோ பன்னாட்டு நிறுவனங்களோ,வீழ்த்தமுடியாத விஸ்வரூபப் படைப்புகள் அல்ல;உலகம் எங்கும் எத்தனையோ நாடுகலில் மாபெரும் மக்கள் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.2000 ம் ஆண்டில் ஆந்திராவில்,தனியார்மய ஆதரவு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்திருந்தார் அப்போதைய உலகவங்கியின் தலைவர்,ஜேம்ஸ் உலஃபென்சன்.பல்லாண்டுகளாக நஷ்டத்தையே சந்தித்து வந்த ஆந்திரவிவசாயிகள்,உலக வங்கியின் தலைவரை எதிர்த்து போராட்டம் நடத்தி துரத்தியடித்தனர்.
முதலீட்டு சர்ச்சைகளுக்கான சர்வதேச மத்தியஸ்த அமைப்பு(International centre for settlement of investment disputes)என்பது உலக வங்கியின் ஓர் அங்கம்.தண்ணீர் கம்பெனிகளுடனான ஒப்பந்தத்தை ஏதேனும் ஒரு நாடு ரத்து செய்தால்,அந்த நாட்டிடம் பஞ்சாயத்து செய்து,நஷ்ட ஈடு வாங்கித்தரும் அமைப்பு இது.தண்ணீர் தனியார் மயத்தை ஏற்றுக்கொள்ளும் நாடுகள்,இதிலும் ஓர் உறுப்பினராக வேண்டும்.இந்த நிலையில் தான்,லத்தீன் அமெரிக்க நாடுகளில் இந்த தண்ணீர் கம்பெனிகள் நடத்திய பகாசுரக்கொள்ளைக்குப் பிறகு,பொலிவியா,நிகரகுவா,வெனிசூலா போன்ற நாடுகள் இந்த அமைப்பில் இருந்து வெளியேறிவிட்டன.ரோஷமுள்ள நாடு அப்படித்தான் செய்யும்.ஆனால், இந்தியா என்ன செய்கிறது?
தொடர்ந்து தன் வளங்களை எல்லாம் பெருமாள் கோவில் சுண்டல்போல,பன்னாட்டு நிறுவனங்களுக்கு அள்ளித்தருகிறது.சொந்த மக்கள் சாகும்போது,பொறுப்பற்ற முறையில் தண்ணீரை வீணடிக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலம் தனது வரலாற்றில் மிக மோசமான வறட்சியை இந்த ஆண்டு சந்தித்திருக்கிறது.தண்ணீருக்கான போராட்டங்கள் தீவிரம் அடைந்திருந்த வேளையில், “அணையில் தண்ணீர் இல்லாத போது எங்கிருந்து தண்ணீர் விட முடியும்? நாங்கள் சிறுநீர் கழிக்கவா முடியும்? எங்களுக்கு குடிப்பதற்கே தண்ணீர் கிடைக்கவில்லை.அதனால் சிறுநீர் கூட சீக்கிரத்தில் வராது” என்று திமிரின் உச்சத்தில் பேசினார் மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார்.

அவர் இப்படிப் பேசிய கடந்த ஏப்ரல் மாதத்தில் தான்,நாடுமுழுவதும் ஐ.பி.எல்.போட்டிகளின் ஆறாவது சீஸன் நடந்துகொண்டிருந்தது.அதில் மஹாராஷ்டிராவின் இருபெரும் நகரங்களான மும்பை மற்றும் புனேநகரங்களில் மொத்தம் 16 போட்டிகள் நடைபெற்றன.போட்டி நடைபெறும்போது கிரிக்கெட் மைதானங்களின் பசுமையை பாதுகாக்க,அரசு சலுகைவிலையில் தண்ணீர் வழங்கியது.ஒரு டேங்கர் லாரி தண்ணீர் ரூ.400வீதம் நாள் ஒன்றுக்கு25,000 முதல் 26,000 லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டது.அந்த சமயத்தில்,மாநிலம் முழுக்க விவசாயிகள் கருகும் தங்கள் விளைப்பயிரைப் பாதுகாக்க,ஒரு டேங்கர் லாரி  தண்ணீரை ரூ.1500 முதல் ரூ.3000 வரை விலை கொடுத்து வாங்கினர்.இந்த விவரங்கள் முன்கூட்டியே வெளியேவந்து எதிர்ப்புகள் கிளம்பியபோதும்,கிரிக்கெட் மைதானத்துக்குத் தாராளத் தண்ணீர் விநியோகம் தடைபடவில்லை;
துணிக்கடை பொம்மைக்கு ஆபாசமாக துணி அணிவிப்பதைக் கண்டித்து போராடும் அமைப்புகளுக்கு,மக்கள் தாகத்தில் சாகும்போது விளையாட்டுக்குத் தண்ணீர் விநியோகம் செய்யும் இந்த கொடுஞ்செயல்,ஆபாசமாகத் தெரியவில்லை;பெயரளவுக்கு ஓர் அறிக்கையை கொடுத்துவிட்டு ஒதுங்கிக்கொண்டனர்.கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல;ஒவ்வொரு நாளும் இந்த நாட்டின் நட்சத்திரவிடுதிகளில் வீணடிக்கப்படும் தண்ணீரைக்கொண்டு பல லட்சம் மக்களின் தாகத்தைத் தீர்க்க முடியும்.ஏழை மக்கள் சமைக்கவும் குளிக்கவுமே தண்ணீர் இல்லாமல் குடங்களைத் தூக்கிக்கொண்டு அலையும்போது,ஸ்டார் ஹோட்டல்களின் நீச்சல் குளத்தில் தண்ணீர் ததும்பி நிற்பதும்,அதில் ஆனந்தமாக நீந்தித் திளைப்பதும் ஆபாசம் இல்லையா?
சென்னை நகரத்தில் அனைத்து சொகுசு விடுதிகளையும் மொத்தமாகக் கணக்கிட்டால் 4,656 அறைகள் உள்ளன.ஒரு நட்சத்திரவிடுதியின் அறைக்கு நாள் ஒன்றுக்கு 1500 லிட்டர் முதல் 2000 லிட்டர் வரை தண்ணீர் செலவாவதாக நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.இந்த நட்சத்திர ஹோட்டல்கள் ஒரு நாளைக்கு உறிஞ்சி ஏப்பம்விடும் தண்ணீரின் அளவு 50,00,000 லிட்டர்கள்.இதை நுகரும் மக்களின் எண்ணிக்கையோ சில ஆயிரம் பேர்.இதைவிட எண்ணிக்கையில் குறைவான கோடீஸ்வரர்கள் புழங்கும் இடம் கோல்ஃப் மைதானம்.சென்னையில் மட்டும் மூன்று கோல்ஃப் மைதானங்கள் உள்ளன.இவற்றைப் பசுமையாகப் பராமரிக்க,ஒரு நாளைக்கு சராசரியாக 60,00,000 லிட்டர் தண்ணீர் செலவிடப்படுகிறது.எங்கிருந்து வரும் இந்தத் தண்ணீர்? எல்லாம் மக்களுக்கு வர வேண்டிய தண்ணீர் தான்.நான்கு குடம் தண்ணீருக்காக குழாயடியில் வரிசையில் கால் கடுக்கக் காத்திருக்கிறார்களே. . . அவர்களின் தண்ணீர்தான்.இதுபோக சென்னையிலும் இதர நகரங்களிலும் இருக்கும் ஆயிரக்கணக்கான நீச்சல் குளங்களையும்,வாரம் தோறும் அதில் மாற்றப்படும் தண்ணீரையும் கணக்கிட்டால்,ஒரு போகம் குறுவை சாகுபடிக்கு உதவலாம்.
குடிக்கும் தண்ணீரில் மட்டும் இத்தகைய நிலை இல்லை;ஊரே வறட்சியில் தத்தளிக்கும்போது இயற்கை எழில் சூழ்ந்த பிரதேசங்கள் எதையும் விட்டுவைக்காமல் அங்கு நட்சத்திர விடுதிகள் கட்டுகின்றனர்.ஆறுகள்,குளங்கள்,அருவிகள்,மலைகள் என எந்த நீர்நிலையையும் விடுவதில்லை;எங்கேனும் இயற்கை கொஞ்சம் மிச்சம் இருப்பதாகத் தெரிந்தால்,அந்தப் பிரதேசத்தைக் கைப்பற்றிவிடுகின்றனர்.பிறகு,கழிவுகளை ஆற்றில் கொட்டி,ஊரெல்லாம் ப்ளாஸ்டிக்கை வீசி,வாகனங்களால் சூழலை மாசுபடுத்தி,அதை ஒரு சாக்கடையாக மாற்றிவிட்டு,வேறு இடம் தேடி கிளம்பிவிடுகின்றனர்.
இப்படி நட்சத்திரவிடுதிகளில்,தீம் பார்க்குகளில்,நீச்சல் குளங்களில்,கோல்ஃப் மைதானங்களில்,கிரிக்கெட்மைதானங்களில் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீரை இரக்கம் இல்லாமல் வீணடிக்கும் இவர்கள்,கடைசியில் தண்ணீர் பஞ்சம் முற்றியவுடன் ‘மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்’ என்று கூசாமல் அறிவுரை சொல்கின்றனர்.உண்மையில் இந்த அறிவுரையை ஆளும் வர்க்கம் தன்னை நோக்கியே சொல்லிக் கொள்ள வேண்டும்.ஏனெனில்,ஏழைகள் ஒருபோதும் தண்ணீரை வீணடிப்பதில்லை.தண்ணீர் எடுப்பதற்கு எவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியும்.இடுப்பில் குழந்தையை வைத்துக்கொண்டு அடிகுழாயில் தண்ணீர் அடிக்கும் பெண்ணிடம் சென்று,தண்ணீர் சிக்கனம் பற்றி பேசிப்பாருங்கள். . . பதில்,வார்த்தைகளில் வராது.
நன்றி: ஜீனியர் விகடன்,பக்கங்கள்31,32,33,வெளியீடு 10.7.13